மாணவர்களை ஜாதி ரீதியாக பிரிக்கக் கூடாது!

– தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் வகுப்புகள் துவங்கின.

ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைக்கும் வகையில், பல்வேறு குழுக்களாக பிரித்து பாடங்களை நடத்தலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பல பள்ளிகள் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் என்றும்; சில பள்ளிகள் தினமும் காலை, மாலை என்றும், மாணவர்களை பிரித்து பாடங்கள் நடத்துகின்றன.

இதில், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில், மாணவர்களை ஜாதி வாரியாக பட்டியலிட்டு, குழுக்கள் பிரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதுவும் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் வரிசை எண், எமிஸ் எண் மற்றும் ஜாதியை குறிப்பிட்டு பட்டியல் தயாரித்து, மாணவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை பதிவேட்டை உடனடியாக ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வி ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.

எந்தப் பள்ளியிலும், மாணவர்களை ஜாதி வாரியாக பிரிக்கக் கூடாது; நன்றாக படிக்கும், ‘எலைட்’ மாணவர்கள்; படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் என்று பிரித்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பெயர்களை அகர வரிசைப்படி அல்லது அவர்களில் வரிசை எண் அடிப்படையில் மட்டுமே பட்டியலிட வேண்டும். மாறாக, ஜாதியை குறிப்பிட்டு சர்ச்சையாக்கக் கூடாது என்றும், தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment