– எழுத்தாளர் சிவசங்கரியின் ஆன்மீக அனுபவம்
சாயிபாபாவின் சத் சரித்திரத்தில் ஓரிடத்தில், பாபா ‘சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போல தகுந்த தருணத்தில் என் பக்தரையும் என்னிடம் நான் இழுத்துக் கொள்வேன்’ என்று கூறுவார்.
இந்தக் கூற்று முற்றிலும் சத்தியம். அப்படி இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகளில் நானும் ஒருத்தி என்பதை எண்ணும்போது என் கண்கள் பனிக்கின்றன…. மேனி சிலிர்க்கிறது. உள்ளம் பேரானந்தத்தில் திளைக்கிறது..
15 வருஷங்களுக்கு முன் திடீரென்று சீரடி பாபா என்னுடைய வாழ்க்கையில் நுழைந்தார். ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ வேலைகளுக்காக நான் அவுரங்காபாத்தில் தங்கியிருந்தபோது சீரடி சென்று பாபாவை தரிசித்து விட்டு வந்தேன்.
ஒரு கோயிலுக்கு போய்விட்டு வந்தால் கிடைக்கும் திருப்தி தான் அப்போது எனக்கு கிடைத்தது. அவ்வளவுதான்….. விசேஷமாக எந்த அனுபவமும் ஏற்படவில்லை.
சின்ன வயசில் நான் பாபாவின் தீவிர பக்தை என்று சொல்ல முடியாது. எல்லா தெய்வங்களையும் வணங்குவது போல அவரையும் வணங்கினேன்.
மயிலாப்பூர் கோயிலுக்கு எப்போதாவது செல்லும்போது கூட புகழ்பெற்ற கோயிலுக்கு சென்று வந்தோம் என்ற நிறைவு இருந்ததே தவிர, அதீதமாய் பரவசம் ஏதும் உண்டானது இல்லை.
ஆனால் ஏன், எப்படி, எப்போது என்று திட்ட வட்டமாய் சொல்லத் தெரியாமல் எனக்குள்ளே பாபா ஒரு விதையாக விழுந்தது நிஜம். அந்த வீரிய விதை இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் எனக்குள் ஒரு பிரம்மாண்டமான விருட்சமாக வளர்ந்து, உறங்கி எழுவதில் துவங்கி மீண்டும் உறங்கச் செல்லும் வரை தொடாந்து பாபாவையே ஸ்மரிக்கும் அளவுக்கு அவர் பால் நான் கொண்டுள்ள பக்தி என்னை ஆட்கொண்டுள்ளது…..
பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் ஏராளம். எனக்கும் நிறைய அனுபவங்கள் கிட்டியுள்ளன. உதாரணத்திற்கு இரண்டை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மயிலாப்பூர் பாபா கோயிலில் 75ஆவது ஆண்டை முன்னிட்டு நினைவுமலர் வெளியிட தீர்மானித்து அதற்கு என்னிடம் ஒரு கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் உட்கார்ந்து கட்டுரையை எழுதி முடித்தேன். திங்கட்கிழமை என்னுடைய உதவியாளர் வந்தபிறகு “இதை உடனே கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து அனுப்பி விடு” என்று கூறினேன்
என்னுடைய உதவியாளரும் பிரிண்டர் மேல் நான் கொடுத்த தாள்களை வைத்துவிட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்தார். ஆனால் கம்ப்யூட்டர் ‘ஆன்’ ஆகவில்லை. ஒயறை கழற்றி, ப்ளக்கை மாற்றி என்னென்னவோ செய்து பார்த்தும் கம்ப்யூட்டர் ஆன் ஆக மறுத்துவிட்டது.
டெக்னீஷியனைத்தான் கூப்பிட வேண்டும் போலிருக்கிறது. கையால் எழுதி அனுப்பி விடட்டுமா?’ என்று என் உதவியாளர் கேட்க, நான் கம்ப்யூட்டரிடம் சென்று பிரிண்டர் மேல் கையை வைத்துக்கொண்டு என்னையும் அறியாமல் “என்ன பாபா இப்படி செய்கிறீர்கள்? உங்கள் காரியத்திற்காக தானே நாங்கள் முனைகிறோம்?” என்று வருத்தத்தோடு உரக்கக் கூறிய அந்த நொடியில்… நம்ப வேண்டும்… கம்ப்யூட்டர் ‘கிளிக்’ என்ற சப்தத்தோடு ஆன் ஆயிற்று!
எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை!! என் உதவியாளர் உடனே தட்டச்சு செய்து கட்டுரையை நான் திருத்திய பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினார்.
அதை செய்து முடித்த நிமிஷம் மறுபடியும் கம்ப்யூட்டர் ‘கிளிக்’ என்ற சத்தத்தோடு ஆஃப் ஆகி விட்டது.
அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் வியப்பு தாளவில்லை! “எப்படி தன் காரியத்தை பாபா சாதித்துக் கொண்டிருக்கிறார்” என்பது புரிந்தபோது சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும் திகைத்துப் போனோம்.
நன்றி : தினமணி தீபாவளிமலர் 2021