பல்கலை வளாகங்களில் ஜாதி, மத நிகழ்ச்சிகளுக்கு தடை!

தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் ஜாதி, மதம் மற்றும் இனம் தொடர்பாக, பல்வேறு துறைகளின் கீழ் விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்துவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

அரசியல் கட்சிகள் ஜாதி, மத ரீதியாக ஓட்டுகளை பிரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற கருத்தரங்குகள் அதிகரித்துள்ளன.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கடந்த வாரம், ‘இஸ்லாமும், பெரியாரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதற்கு, பா.ஜ., ஆதரவு அமைப்பைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்கலை துணைவேந்தர்களையும், அரசு செயலர்களையும் அழைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி., கடந்த 30-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

அதில் பல்கலைகளின் நடவடிக்கைகள், வளர்ச்சி பணிகள், நிதிநிலை குறித்து பேசப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கருத்தரங்கு குறித்து தனியாக விசாரணை நடத்தி, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, துணைவேந்தர்கள் இடம் தரக்கூடாது என ஆளுநர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்கலைகளில் ஜாதி, மத, இன ரீதியான கருத்தரங்குகள், விவாதங்கள், கட்டுரை சமர்ப்பித்தல் போன்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க கூடாது என துணை வேந்தர்களை, தமிழக உயர்கல்வி துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments (0)
Add Comment