– தேர்தல் ஆணையம் பரிந்துரை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக, காலியாகவுள்ள நகராட்சி ஆணையர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் ஏற்கனவே இருந்தன. இப்போது புதிதாக, தாம்பரம், காஞ்சிபுரம், கடலுார், கரூர், கும்பகோணம், சிவகாசி என ஆறு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல 121 நகராட்சிகள் இருந்தன. புதிய நகராட்சிகள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளதால், எண்ணிக்கை 150க்கும் மேல் அதிகரித்துள்ளது.
இதேபோல 528 பேரூராட்சிகள் இருந்தன. தற்போது பல நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டதால், பேரூராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 2016 முதல் தேர்தல் நடத்தப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தேர்தலை நடத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கான ஆணையர்கள், தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்க வேண்டும். ஆனால், பல நகராட்சிகளில் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கீழ்மட்ட அதிகாரிகள் பலரும் கூடுதல் பொறுப்பாக, ஆணையர் பணியை கவனித்து வருகின்றனர். இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய நான்கு மாத கால அவகாசத்திற்குள் தேர்தலை முடித்தாக வேண்டும்.
எனவே, காலியாகவுள்ள நகராட்சி ஆணையர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.