மத அமைப்புகளின் விதிமீறலை அனுமதிக்கக் கூடாது!

ஈரோடு மாவட்டம் தொப்பப்பாளையத்தில் உள்ள பெந்தெகோஸ்தே சபை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1993ல்,தொப்பப்பாளையத்தில் பெந்தெகோஸ்தே சர்ச் துவங்கப்பட்டது.

அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட, திட்ட அனுமதி கோரினோம். கட்டுமானம் மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதற்கான உத்தரவு வழங்கவில்லை. சமர்பித்த விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது.

அதற்குள் கட்டுமானம் துவங்கப்பட்டு விட்டது. அனுமதி பெற்ற பின்னே கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.

எங்களின் வழிபாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள, தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அக்கிராமத்தை சேர்ந்த ஓதிசாமி என்பவர் சார்பில், வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி,

”ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர்; நள்ளிரவிலும, அதிகாலையிலும் சத்தம் எழுப்புகின்றனர். வயதானவர்கள், குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசவுகரியமாக உள்ளது” என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், “மத உரிமை, மக்களின் உணர்வு அடிப்படையில், சட்டவிரோத செயலை மேற்கொள்ள எவரையும் அனுமதிக்க முடியாது.

அனைத்து மத உரிமைகளையும், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுத்துவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்பு, ஒலிபெருக்கி பயன்படுத்துவதன் வாயிலாக இடையூறு ஏற்படுத்துவதை கடுமையாக கருதி, அவ்வாறு இடையூறு செய்பவர்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அனுமதிமத நிறுவனங்களின் கட்டுமானங்களுக்கு, திட்ட அனுமதி பெறப்பட வேண்டும். கட்டுமானம் மேற்கொள்வது, அந்தப் பகுதியில் வசிக்கும் அமைதியான வாழ்வை பாதிக்கக் கூடாது.

அதனால், கட்டுமானத்துக்கு அனுமதி அளிக்கும் போது, அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமைதியான வாழ்க்கை வாழ, ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

அந்த உரிமையை பாதுகாக்க, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கட்டடத்துக்கான திட்ட அனுமதி பெறாமல், கட்டுமானப் பணிகளை தொடர முடியாது.

மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்; நிபந்தனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். மத நடவடிக்கைகளை மேற்கொள்ள, சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.

மக்களின் உரிமைகளை பாதிக்கும் விதத்தில் மத நடவடிக்கைகள் இருந்தால், அதை கடுமையாக கருதி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பல மத நிறுவனங்கள், ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுகின்றன. அவர்களுக்கு எதிராக, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. மத உணர்வு காரணமாக, சில குழுக்களுக்கு பயந்து புகார் கொடுப்பதில் தயக்கம் இருக்கிறது.

ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிமீறல், கட்டுமான விதிமீறலுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும்படி, அதிகாரிகளுக்கு தலைமை செயலர் அறிவுறுத்த வேண்டும்.

புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் உத்தரவிட வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால், அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையான கட்டட அனுமதி பெற்ற பின்னே, மத நடவடிக்கைகளை மனுதாரர் தொடரலாம். அனுமதியில்லாத கட்டுமானங்களை, விதிமுறைகளை பின்பற்றி இடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment