எல்லா சிவாலயங்களிலும் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த மணத்திற்கு அதுதான் காரணம் என்பதைப் பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.
பிறகு சிவாலயங்களில் சென்று இறைவனைத் தரிசிக்கும்போதும் எனக்கு இறை உருவுடன் அந்த மணமும் மனசுக்குள் பதிந்துகொண்டே இருந்தது.
இலுப்பையை நோக்கிச் செல்வதற்குப் பின்னால் சிறு வயது அனுபவங்கள் இருக்கின்றன.
அப்போது சிவன்கோவிலுக்குச் செல்லும்போது, வேறெங்கும் இல்லாத ஓர் இனிமையான மணம் கர்ப்பக்கிரகத்தில் உணரமுடியும். அதற்கு என்ன காரணம் என்று அந்த வயதில் தெரியவில்லை.
இன்று நினைத்தாலும் அந்த மணத்தின் இனிமை காற்றில் வருகிறது. இலுப்பை மரங்களைத் தேடிச் சென்ற பயணத்திற்கு அதுவே தொடக்கப்புள்ளி.
எங்கள் ஊரில் மிகப்பெரிய இலுப்பைத் தோப்பு இருந்ததாகவும், அதில் விஸ்வலிங்கையா என்ற சித்தர் இருந்ததாகவும் செவிவழிக் கதைகள் உண்டு.
விஸ்வலிங்கையா சித்தர் உலவியதாகக் கூறப்படும் இலுப்பைத் தோப்பில்தான் தற்போது அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது.
ஊரில் நடக்கிற எல்லா நிகழ்வுகளும் விஸ்வலிங்கையா இருந்த திருமடத்தில் இருந்துதான் ஆரம்பமாகும்.
காலப்போக்கில் இலுப்பை மரம் என்பது அழிந்துவரும் இனம் என்பதைத் தெரிந்துகொண்டு, அதைத் தேடி பயணிக்கத் தொடங்கினேன் என கடகடவென பேசத் தொடங்குகிறார் வங்கி மேலாளரான திருமாறன்.
திருவாரூர் மாவட்டம், வடமட்டம் கிராமத்தில் பிறந்தவரான அவருடைய ஆய்வுப்பாதை பாரம்பரிய மரத்தின் வேர்களைத் தேடிச் செல்கிறது.
இலுப்பை மரங்களைப் பற்றி அவர் திரட்டியுள்ள தகவல்கள் வியப்பின் உச்சிக்கு அழைத்துச் செல்கின்றன.
தமிழ்நாட்டில் இலுப்பை சார்ந்த பண்பாடு மக்களிடம் இருந்துவருகிறது.
தமிழ்ச் சமூகத்தில் சிறு தெய்வ வழிபாட்டிலிருந்து பெருந்தெய்வ வழிபாட்டுக்குப் பண்பாட்டு மாற்றம் நடந்தபோது, இலுப்பை மரமும் பெருந்தெய்வ வழிபாட்டுக்கு மாறியிருக்கிறது.
இதுவொரு பண்பாட்டு நிகழ்வு.
மதரீதியான மாற்றம் நிகழும்போது அதில் பண்பாட்டுரீதியான மாற்றமும் நடந்தது ஆச்சரியமான விஷயம்.
தமிழ் மண்ணில் ஒரு வழிபாட்டு முறை மாறும்போது, பண்பாட்டு முறையிலான மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு சைவம் வளர்ந்திருக்கிறது.
சங்க இலக்கியங்களில் இலுப்பையைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. அதில் பாலை நிலத்தின் தாவரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்கள் இலுப்பைப் பூக்களைக் கீழே தள்ளி விடுவதைக் கிழட்டு மாடுகள் சாப்பிடுகின்றன என்ற குறிப்புகளும் உள்ளன.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்ற பழமொழி இருக்கிறது.
இந்தப் பூவில் 70 சதவிகிதத்துக்கு மேல் குளுக்கோஸ் இருக்கிறது. முந்தைய காலங்களில் இலுப்பைப் பூ மூலம் சர்க்கரைப் பயன்பாடு இருந்திருக்கிறது.
இலுப்பைப் பூவை அரிசியோடு சேர்த்துச் சமைப்பது, வெல்லத்தோடு இடித்து உண்பது போன்ற பழக்கங்கள் பழங்குடியினரிடம் காணப்படுகின்றன.
இந்தப் பாரம்பரியம் பல ஆண்டுகளாக அவர்களிடம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இது மருத்துவ ரீதியாகவும் மூட்டுப் பிடிப்பு, காய்ச்சல், தோல் அரிப்புக்குப் பயன்பட்டிருக்கிறது.
சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் மக்களிடம் செல்வாக்கு இழந்த காலங்களிலும் இலுப்பை மரமும் அழிந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம்.
“ஆன்மிகத்துடன் தொடர்புடைய மரமாகக் கருதப்படும் இலுப்பைப் பூக்களால் பூமியில் கனிமச் சமநிலை ஏற்படுகிறது. மருத நிலப் பகுதியில் இலுப்பை மரங்கள் அதிக நீர்ப்பிடிப்புத் தன்மையை நிலத்திற்குத் தருகின்றன.
இலுப்பைத் தோப்புகள் மேகத்தைக் கவர்ந்து மழையைப் பூமிக்குக் கொண்டுவருகின்றன. இதனால்தான் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகமாகி மருத நிலமாக மாறியிருக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இலுப்பைத் தோப்பு இல்லாத கிராமத்தையே பார்க்கமுடியாது.
இன்று கிராமத்தில் பெரியவர்கள் பேசும்போது, அந்த இலுப்பைத் தோப்பு பக்கத்துலதான் என்று சொல்வார்கள்.
சின்ன சேலம் பகுதியிலிருந்து வரும் வெள்ளாற்றங்கரையில் நிறைய இலுப்பை மரங்கள் இருக்கின்றன.
ராமநத்தம் பகுதியில் வெள்ளாறும் அரிச்சந்திரா நதியும் சேரும். இன்றும் அந்த ஆற்றின் கரைகளில் இலுப்பை மரங்கள் காணப்படுகின்றன.
இலுப்பைப் பூவை சர்க்கரை உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் பூக்கிற பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை நடத்துவது வவ்வால்கள்தான்.
அவற்றின் இருப்பிடம் என்பது இலுப்பை மரங்கள்தான். பழந்தின்னி வவ்வால்கள் இலுப்பை மரங்களில் மட்டும்தான் வாழும்.
இந்த மரங்கள் அழிய இயற்கையின் சுழற்சி மாறிப்போகிறது.
இயற்கைச் சமநிலையைக் கொண்டுவர வேண்டும் என்றால் மீண்டும் இலுப்பை மரங்களை வளர்க்கவேண்டும்.
இலுப்பைக் கன்றுகளை வளர்த்து நண்பர்களுக்கு வழங்கிவருகிறேன். இதுவரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகளைக் கொடுத்திருக்கிறேன்.
இலுப்பைத் தோப்புகள் இருந்த கிராமங்களில் வெறும் காட்டுக்கருவை வளர்ந்திருக்கிறது.
அந்த மாதிரி கிராமங்களில் இலுப்பைத் தோப்புகளை மீண்டும் உருவாக்கவேண்டும் என்பதுதான் என் அடுத்தகட்ட செயல்பாடாக இருக்கிறது.
அதுதான் என்னிடம் உள்ள பெருங்கனவு” என்கிறார்.
பா. மகிழ்மதி