உதம் சிங் – தியாகத்தின் வரலாறு!

சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்றதும், காந்தி, நேரு, நேதாஜி, பகத் சிங் போன்ற முக்கிய தலைவர்கள்தான் பெரும்பாலும் நம் நினைவுக்கு வருவார்கள்.

ஆனால் அந்தத் தலைவர்கள் மட்டுமின்றி நம் நாட்டுக்காக ரத்தம் சிந்திய எத்தனையோ மாவீரர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாவீரர்களில் ஒருவர்தான் சர்தார் உதம் சிங்.

அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘சர்தார் உதம்’. இப்படம் தமிழ் சப் டைட்டில்களுடன் தற்போது அமேசானில் வெளியாகி உள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919-ம் ஆண்டில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.

இந்தக் காலகட்டத்தில் போராட்டக் களத்தின் மையமாக பஞ்சாப் மாநிலம் இருந்தது.

போராட்டத்தின் உச்சகட்டமாக பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தை தடை செய்யும் விதமாக ஆங்கிலேய அரசு ஊரடங்கு சட்டத்தைக் கொண்டுவர, அதையும் மீறி ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனால் கோபமடைந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்துக்கு வந்தவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு பிறகு இந்தியாவே வெகுண்டெழுந்தது. ஜெனரல் டயர், இங்கிலாந்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இச்சம்பவத்தை மறந்துவிட்டாலும், ஜாலியன் வாலாபாக்கில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த உதம் சிங் மறக்கவில்லை.

பகத்சிங்கின் தோழரான உதம் சிங், 21 ஆண்டுகள் காத்திருந்து, இந்தியாவில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்துக்கு கால்நடையாகவே பயணம் செய்து 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி ஜெனரல் டயரை ஒரு பொதுக்கூட்டத்தின் நடுவில்  சுட்டுக் கொன்றார்.

உதம்சிங்கின் இந்த வீர வரலாற்றைச் சொல்லும் படம்தான் ‘சர்தார் உதம்’.

உதம் சிங்கைப் போலவே, சுமார் 20 ஆண்டுகள் காத்திருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டி, இப்படத்தை எடுத்து முடித்துள்ளார் அதன் இயக்குநர் ஷூஜித் சர்கார் (Shoojit Sircar).

அவரது கடும் உழைப்பின் காரணமாக, ஒரு மாபெரும் ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் மனநிலை நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

அக்காலத்தின் பஞ்சாப் மாநிலம், லண்டன் நகரம் என்று ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார்.

அதிலும் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் கொடுமைகளை எடுத்துக் கூறும் கடைசி 45 நிமிடங்கள் நம்மை உலுக்கி எடுக்கிறது.

சுதந்திரம் சும்மா வரவில்லை என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதைப்போல் அக்காட்சிகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன.

அதுபோல் சிறைச்சாலையில் நடக்கும் கொடுமைகளும் இளகிய மனம் படைத்தவர்களை கடுமையாக பாதிக்கும்.

படத்தில் உதம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார் நாயகன் விக்கி கவுஷால், பகத் சிங்குடனான நட்புக் காட்சியில் ஜாலி மனிதராக காட்சியளிக்கும் விக்கி கவுஷால், ஜாலியன் வாலாபாக்கில் இருந்து காயமடைந்தவர்களை மீட்கும் காட்சியில் எல்லோரையும் பதைபதைக்க வைக்கிறார்.

அதுபோல் பகத்சிங்கைப் பற்றி கிண்டலடிக்கும் ஆங்கிலேய அதிகாரியிடம் அவர் அனலைக் கக்கும்போது, நம்மையும் அந்த கோபம் பற்றிக் கொள்கிறது.

நுட்பமான கண் அசைவுகளாலும், சிறு சிறு முகபாவங்களாலும் நடித்து உதம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார்.

இப்படத்தில் எல்லோரையும் கவர்ந்த மற்றொரு கதாபாத்திரம் ஜெனரல் டயர் (ஷான் ஸ்காட் என்பவர் இப்பாத்திரத்தில் நடித்துள்ளார்).

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின்போது கடுமையைக் காட்டுவது, பின்னர் வயதான காலத்தில் தன் வீட்டில் மது அருந்தியவாறு உதம் சிங்கிடம் அதை நியாயப்படுத்திப் பேசுவது என்று அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் ஷான் ஸ்காட்.

படத்தில் எல்லாம் நேர்த்தியாக இருந்தாலும் தமிழ் சப் டைட்டில்கள் மட்டும் சற்று நெருடுகிறது.

பல இடங்களில் வசனங்களுக்கும் சப் டைட்டில்களுக்கும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.

அதிலும் காட்சிகளை விவரிக்கும் இடங்களில் ‘இருமறான்’, ‘நடக்கிறான்’, ‘அலறுகிறான்’ என கொச்சைத் தமிழில் வர்ணனைகள் வருவது எரிச்சலைத் தருகிறது.

இதுபோன்ற குறைகளை எதிர்காலத்தில் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

– பிரணதி

Comments (0)
Add Comment