பெகாசஸ் உளவுப் புகார்கள் எழுப்பும் அடிப்படையான கேள்வி!

பெகாசஸ் – மறுபடியும் பேசு பொருளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் தான் பேசு பொருளாக்கியிருக்கிறது.

2019-ல் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது வழக்கு உச்சநீதிமன்றத்திற்குப் போனது.

மத்திய அரசோ “உளவு பார்த்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கைவிரித்துவிட்டது.

உச்சநீதிமன்றமோ “உளவுபார்ப்பது தொடர்பான புகார்களைப் புறக்கணித்துவிட்டு நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது. விரிவான அறிக்கை தாக்கல் செய்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கக் கூடியதல்ல.

“தொழில்நுட்பம் தனி நபரின் அந்தரங்க உரிமை, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது. அந்தரங்க உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை” என்று கருத்துத் தெரிவித்திருக்கிற உச்சநீதிமன்றம் பெகாசஸ் புகார் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரவீந்திரன் தலைமையில் நிபுணர் குழுவையும் அமைத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. பல நாடுகளில் இதே பெகாசஸ் விவகாரம் பற்றிய ஆய்வுகள் துவங்கியிருக்கின்றன.

இஸ்ரேல் எந்தெந்த விதத்தில் பெகாசஸ் மென்பொருளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஒன்றிய அரசு தரப்பில் இது தொடர்பாக நீடிப்பது மௌனம் மட்டுமல்ல, அதை மறுக்கவும் செய்கிறார்கள்.

“மேட் இன் இந்தியா, மேக் இன் இந்தியா” என்கிற முழக்கங்களை எழுப்புகிறவர்கள் பெகாசஸ் மாதிரியான சர்ச்சைக்குரிய மென்பொருளை இந்தியாவில் தயாரிக்காமல், இஸ்ரேலிடம் வாங்கியது ஏன் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் இந்தியாவில் உள்ள அறிவியலாளர்கள்.

இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை மறுக்க முடியவில்லை.

கொரோனா அலை பரவ ஆரம்பித்த பிறகு அதற்கான தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரிக்க ஆரம்பித்த மாதிரி, மற்றவர்களை உளவு பார்க்கிற சிக்கலான மென்பொருள் தயாரிப்பை உள்நாட்டில் தயாரிக்காமல், வெளி நாட்டிலிருந்து வாங்கியது ஏன் என்கிற கேள்வி கேட்பதில் தேசிய நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

பெகாசஸ் பற்றி ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கிற குழு நல்ல முடிவைத் தரட்டும்.

*

Comments (0)
Add Comment