பாலியல் துன்புறுத்தல்: குழந்தையின் சாட்சியமே போதும்!

கடந்த 2019 மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ரூபனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூபன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரூபன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் ரூபன் இல்லை. சிறுமியைத் தவிர வேறு சாட்சியங்கள் யாரும் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது சரியானதல்ல என்று வாதிட்டார்.

இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சுகேந்திரன், “இதே சிறுமியிடம் ஏற்கனவே ரூபன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “குழந்தைகளின் அறியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி குற்றவாளிகள் செயல்படும் இதுபோன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது. இந்த மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.

Comments (0)
Add Comment