இந்தியா – இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.
கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த கப்பல்கள், இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் வரும் நாட்களில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.
இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவுக்கான தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் வருகை தந்துள்ளது, இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வு.
இவ்வளவு கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.
இருநாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டு கடல் பகுதிக்கு இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.