‛‛சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்,” என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகிறது.
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகவே இன்றளவும் உள்ளது.
ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க., அரசு எந்தத் திட்டங்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க., அரசின் திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டபூர்வமாக போராடுவோம்.
தி.மு.க. அரசு மிகவும் அவசரப்படுகின்றது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு எதிர்க் கட்சிகளை அழிக்க வேண்டுமென நினைக்கின்றனர்; அது நடக்காது.
அரசியல் நாகரிகத்துடன்தான் பேசவேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு” எனக் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சு கட்சியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.