எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதே…!

‘யாரையும், எதற்காகவும் எதிர்பார்க்காதே…’ என்பதற்கு உதாரணமாக இருப்பவர் ஜாக்கி சான்!

ரொம்பத் தோழமையான முகம். குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் நடிகர். அது மட்டுமல்ல; இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், காமெடியன், நடன இயக்குநர்… என ஆல் இன் ஒன் பர்சனாலிட்டி.

அவரது வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது. ஜாக்கி சான் 1954-ல் ஹாங்காங்கில் பிறந்தார். சான்-காங்-சாங் தான் அவர் பெயர். சுருக்கமாக சான் என்று அழைக்கப்பட்டார்.

மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ஜாக்கி சான். அவரது அப்பா சமையல் நிபுணர். ஹாங்காங்கின் ஃபிரெஞ்ச் தூதரகத்தில் தலைமை சமையல் கலைஞர். சான் 7 வயது வரை ஹாங்காங்கில் தான் இருந்துள்ளார்.

அவருடைய அப்பாவுக்கு ஆஸ்திரேலியாவின் அமெரிக்க தூதரகத்தில் தலைமை சமையல் நிபுணராக பணி மாறுதல் ஏற்பட்டது. குடும்பம் இடம் பெயர்ந்தது. ஆனாலும், மகனைக் கூட்டிச் செல்லவில்லை.

அவரை ஹாங்காங்கில் ஒரு குருகுலத்தில் சேர்த்து விட்டுப் போய் விட்டார். சான் 17 வயது வரை குருகுலத்தில் வளர்ந்தார்.

அங்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படும் தற்காப்புக் கலைகளைக் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. குங்ஃபூ, கராத்தே கற்றுக் கொண்டார் சான்.

திரைத்துறைக்கு மிக முக்கியமான குருகுலமாகவும் அது இருந்ததால், சினிமா வாய்ப்பு தேடி வந்தது. கிடைத்த சிறிய பாத்திரங்களில் தலை காட்டினார் சான்.

சண்டை வீரராக நிறைய நடித்தார். அந்தக் காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த நடிகராகத் திகழ்ந்தவர் புரூஸ் லீ. அவரும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்தான். புரூஸ் லீக்கு டூப் போட்டு நடித்துள்ளார் சான்.

அவர் டூப் போட்டு நடித்த ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’, ‘எண்டர் தி டிராகன்’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

புரூஸ் லீக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் அவை.

‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ படத்தில் 30 அடி உயரத்தில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி. பொதுவாக நடிகர் கீழே விரிக்கப்பட்ட வலையில் பாதுகாப்பாகக் குதித்து விடுவார். பிறகு சிறிது உயரத்தில் இருந்து தரையில் விழுவது போன்ற ஒரு காட்சி. இரண்டையும் ஒட்டினால், நிஜமாகவே குதிப்பது போன்ற உணர்வு கிடைக்கும். இதுதான் சினிமா.

சான் அந்த போலி நடிப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை. “குதிக்கணும்.. அவ்வளவுதானே! நானே நேரடியாகக் குதிக்கிறேன்…” என்று சொல்லி ஒரே ஷாட்டில் 30 அடி உயரத்திலிருந்து குதித்தார். அடி ஏதும் படவில்லை.

ஹாங்காங் சினிமா வரலாற்றிலேயே 30 அடி உயரத்தில் இருந்து உண்மையிலேயே குதித்த முதல் நடிகர் சான்.

புரூஸ்லியே மிகவும் ஆச்சரியப்பட்டு, “அடப்பாவி, எதுக்குடா இப்படி ரிஸ்க் எடுக்குறே..?” என்று கேட்டுள்ளார். யூனிட்டார், “அடுத்த புரூஸ் லீ நீதான்பா?” என்று தட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

இவருடைய 19-வது வயதில் 1973-ல் புரூஸ் லீ அகால மரணம் அடைகிறார். அதற்குப் பிறகு ஹாங்காங் சினிமாவில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.

சில தயாரிப்பாளர்கள் சானை வைத்துப் படம் எடுத்தனர். ஆனால், அவை சரியாக வசூலாகவில்லை. நொந்து போனார் சான்,

அவரைத் தேற்றும் விதமாக, “ஆஸ்திரேலியா வந்து விடு!” என்று அழைப்பு விடுத்தார் அப்பா.

ஆஸ்திரேலியாவில் கல்லூரிப் படிப்புடனே ஒரு வேலையும் பார்த்தார். கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசர் வேலை. அந்த நிறுவன உரிமையாளர் பெயர் ஜாக்கி, அவருக்கு அசிஸ்டண்டாக வேலை பார்த்தார்.

இவர்தான் எப்பவுமே சும்மா இருக்க மாட்டாரே? ஸ்டைல் பண்ணுவது, வேலை வாங்குவதில் வெரைட்டி காட்டுவது… என அங்கு நல்ல தலைவராக மாறிவிட்டார் சான்.

அதனால் எல்லோருமே அவரை ‘லிட்டில் ஜாக்கி’ என்று அழைத்தார்கள். இதனாலேயே அவருக்கு ஜாக்கி என்று பெயர் வந்தது. இதுவே நாளடைவில் ஜாக்கி சான் என்று ஆஸ்திரேலியாவில் பெயர் மாறியது.

ஆறு மாதம் கழித்து புரூஸ் லீயை வைத்து எந்தத் தயாரிப்பாளர் படம் எடுத்தாரோ அவரே திரும்பவும் ஜாக்கி சானை கூப்பிட்டார்.

“இங்க வந்துவிடு… இன்னொரு படம் எடுக்கலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

காதலியைப் பிரிந்த மாதிரி திரைத்துறையை இழந்து ஏங்கிக் கிடந்த ஜாக்கி சான், உற்சாகமாகக் கிளம்பிப் போனார். வந்தவுடன் படம் நடிப்பதற்கு முன், ‘நான் புரூஸ் லீ இல்லை… நான் சண்டை வீரன் இல்லை’ நான் சண்டை மற்றும் காமெடி கலந்த நடிகர்’ என்பதில் தெளிவாகிறார்.

அப்படித் தன்னை மாற்றிக் கொண்டு முதல் படத்தில் நடிக்கிறார். ‘ஸ்நேக் இன் தி ஈகிள்’ஸ் ஷாடோ’ என்ற அந்தப் படம் 1978-ல் வெளிவந்தது. சூப்பர், டூப்பர் ஹிட்.

அதுவரை ஹாங்காங் சினிமா உலகம் சண்டை நடிகரை, சண்டை நடிகராக மட்டுமே பார்த்தது. நகைச்சுவை நடிகரை, நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்தது. முதல் முறையாக 2-ம் கலந்து இருந்த கலவை அனைவரையும் கவர்ந்தது.

அதன் பிறகு அவர் நடித்த எல்லாப் படங்களுமே பெரும் வெற்றியைப் பெற்றன. 1980-லேயே அதாவது இவருடைய 26 வயதிலேயே ஹாங்காங் சினிமா உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார்.

ஹாலிவுட் அழைப்பை ஏற்று அங்கே போனவருக்கு மீண்டும் தோல்வி முகம். சிறிது காலம் ஹாங்காங் சினிமாவிலேயே இருந்தவர், ‘ரஷ் ஹவர் 2’, ‘ரஷ் ஹவர் 3’ என்ற படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

மிகப் பெரிய ஹீரோவாக இருந்த காலத்திலும், சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்தது அவரது பெருந்தன்மை.

‘கராத்தே கிட்’ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பிறகு ‘தி ஃபாரினர்’, ‘குஃங்பூ யோகா’, டி.வி. சீரியல்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தார்.

அவர் நடித்த, ‘குஃங்பூ பாண்டா’ என்ற டி.வி. சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவர் ஒவ்வொரு சண்டை காட்சியிலும், மிகப் பெரிய நடிகரான பிறகும், டூப்பே இல்லாமல் நடித்தார். அவர் உடம்பில் உடையாத எலும்புகளே இல்லை எனலாம்.

ஜாக்கி சான் நல்ல பாடகரும் கூட. 20 மியூசிக் ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு, தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு, நிறைய பேரின் படிப்புச் செலவிற்கென்று உதவியிருக்கிறார்.

இவர் வாழ்க்கையில் நடந்த சோகம் இவருடைய மகன் ஜெய்சிங் 2015-ல் போதை மருந்து பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுதான்.

நம் ஊரில் மிகவும் பிரபலமானவர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டால் நிறைய பணம் கொடுத்து அவரை வெளியே கொண்டு வந்து விடுவார்கள். கைது செய்யப்பட்டது வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் ஜாக்கி சான் நிருபர்களிடம் கூறியது. “நான் போதை மருந்துக்கு எதிரானவன். என் மகன் போதை மருந்தை உபயோகித்தது நிரூபிக்கப்பட்டதால் அவன் தண்டைனையை அனுபவித்தே ஆக வேண்டும்” என்றார்.

தன்னுடைய மகனாகவே இருந்தாலும் தவறு செய்தால், தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று சொன்ன மிகப் பெரிய மனிதர் ஜாக்கி சான்.

ஆரம்ப காலங்களில் போதை மருந்து எதிர்ப்பு தூதுவராக சிங்கப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்.

போதை மருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர்.

ஜாக்கிசான் நமக்கு வரலாற்று நாயகன். 10 பேர் சேர்ந்து எந்தளவு சாதனையைச் செய்ய முடியுமோ, அந்தச் சாதனையை ஒரு தனி மனிதனாக நிகழ்த்தியவர்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment