பார்வையாளர்களை ஈர்க்கும் சென்னை போலீஸ் மியூசியம்!

சமீபத்தில் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே கன்னிமாரா நூலகம் அருகே சென்னை அருங்காட்சியகமும், தலைமைச் செயலகத்தினுள் கோட்டை அருங்காட்சியகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காவல் அருங்காட்சியகம் மற்றுமொரு சுற்றுலா இடமாக சென்னை மக்களுக்கு அமைந்துள்ளது.

தினமும் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடும்படி செய்துள்ளனர். செவ்வாய்க் கிழமை விடுமுறை. பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் கட்டணம் வைத்துள்ளனர்.

வரலாறு என்ன…?

எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள பழைய சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகமே தற்போது அருங்காட்சியகமாகக் மாற்றப்பட்டுள்ளது.

1842ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை அப்போது அருணகிரி முதலியார் என்பவரிடமிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து பிரிட்டிஷார் வாங்கியுள்ளனர்.

1856ம் ஆண்டு இந்தக் கட்டடத்திலிருந்து மெட்ராஸ் மாகாண காவல் ஆணையாளர் அலுவலகம் செயல்படத் தொடங்கியுள்ளது.

அப்போது மெட்ராஸ் நகர முதல் காவல் ஆணையாளராக லெப்டினனட் கர்னல் ஜெ.சி.போல்டர்சன் இருந்துள்ளார்.

சுமார் 157 ஆண்டுகள் இந்தக் கட்டடத்தில் இருந்து செயல்பட்ட காவல் ஆணையாளர் அலுவலகம், 2013ம் ஆண்டு வேப்பேரியில் புதிய கட்டடத்திற்கு மாறியது. இதனால், பாரம்பரியமான இந்தக் கட்டடம் களையிழந்து போனது.

இதை அப்படியே விட்டுவிடக்கூடாது என நினைத்தவர் ஏடிஜிபி அமல்ராஜ். இவர் ஏற்கனவே திருச்சி மற்றும் கோவையில் காவல் அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் உருவாக்கியவர். இதனால், இந்தக் கட்டடத்தை சென்னை காவல் அருங்காட்சியகமாக மாற்ற அப்போதிருந்த டிஜிபி திரிபாதியிடம் அனுமதி பெற்றார்.

கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் புதுப்பிக்கிற பணிகளைச் செய்ய, சுமார் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு தளம் கொண்ட இந்தக் கட்டடத்தின் நுழைவு வாயிலில் பிரிட்டிஷ் கால போலீஸ் சைக்கிள்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

அன்றைய சீமை வண்டியை பார்க்கையில் இதை எப்படி ஓட்டியிருப்பார்கள் என்கிற ஆச்சரியமே ஒவ்வொருவருக்கும் மேலோங்குகிறது.

இதனை தொடந்தாற்போல் புல்லட் உள்ளிட்ட போலீஸ் வாகனங்களும், 2009ல் தமிழக முதல்வருக்காக தமிழ்நாடு காவல்துறை முதல்முதலாக வாங்கி புல்லட் துளைக்காத டாடா சஃபாரி காரும் கம்பீரமாகக் காட்சி தருகின்றன.

கீழ்தளத்தின் முதல் அறையில் காவல்துறையின் பரிணாம வளர்ச்சிக் கூடம் உள்ளது. இதில் காவல்துறையின் வரலாறு மற்றும் வளர்ச்சி சம்பந்தமான விஷயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் புலனாய்வு பற்றி ஒரு தொகுப்பும், வீரப்பன் வழக்கின் தொகுப்பும், இந்தி எதிர்ப்பு போராட்டப் படங்களையும் பார்க்க முடிகிறது.

அப்போது காவல்துறையின் பணி எப்படி இருந்தது என்பதை சொல்கின்றன இந்தப் புகைப்படங்கள்.

அடுத்த அறையில் 1914ல் கட்டப்பட்டு பாழடைந்துபோன ஒரு சிறையை கோவை தொண்டமுத்தூர் காவல் நிலையத்தில் இருந்து மீட்டெடுத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

சிறை அனுபவத்தை அறிய விரும்புகிறவர்கள் இதனுள் நின்று பார்க்கும்படி செய்துள்ளனர்.

இதனருகே 1837 ல் உருவாக்கப்பட்ட சென்ட்ரல் சிறைச்சாலையின் வரலாறும் அதன் புகைப்படத் தொகுப்பும் கவர்கிறது.

அடுத்த அறையில் காவல்துறை வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க வைக்கும் பிரிவு உள்ளது.

இதில், வெடிகுண்டு தேடுதல் கருவிகள், வெடி குண்டு மற்றும் கண்ணிவெடி மாதிரிகள், காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதில், கடித வெடிகுண்டு கண்டுபிடிப்பான் என்கிற கருவி ஈர்க்கிறது.

அடுத்தாக, கள்ள நோட்டுத் தடுப்புப் பிரிவில் நல்ல நோட்டிற்கும், கள்ள நோட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவால் மீட்டெடுக்கப்பட்ட கற்சிலைகளையும், ஐம்பொன் சிலைகளையும் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து மெட்ராஸ் காவல்துறை வாத்திய இசைக்குழுவின் வாத்தியங்கள் ரசிக்க வைக்கின்றன.

பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட வாத்தியக்குழு இன்று காவல்துறையில் இன்றிமையாத பிரிவாகிவிட்டது என்றார் அங்குள்ள காவலர் ஒருவர்.

இதன்பிறகு, தமிழ்நாடு காவல்துறையின் தொலைத் தொடர்பு பிரிவின் கருவிகளையும், வாக்கி டாக்கிகளையும் காட்சிபடுத்தியுள்ளனர்.

இதன்பிறகு, காவல் ஆணையாளர் அறை வருகிறது. அறையைச் சுற்றிலும் 1856ல் இருந்து தற்போது வரை உள்ள காவல் ஆணையர்களின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது.

ஆணையாளரின் மேஜை. அதில் பிரிட்டிஷ் காலத்திய ஆலிவர் 9 டைப் ரைட்டர், இன்க்வெல் பாக்ஸ் அழகூட்டுகின்றன.

அருகே கோட், தொப்பி ஸ்டான்ட், பழைய ஃபேன் எல்லாம் அன்றைய காலத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. இங்கே முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் வழங்கிய ரிவால்வர் ஒன்றை காட்சிப்படுத்தியிருந்தனர். இதை வால்டர் தேவாரமே அருங்காட்சியகத்திற்கு அளித்துள்ளார்.

அறையிலிருந்து வெளியேறும் இடத்தில் காவல்துறையின் அரிய சாதனைகளை பார்க்க கியாஸ்க் வைத்துள்ளனர்.

இதன் டிஸ்பிளேயில் காவல்துறையில் உள்ள பிரிவுகள், சாதித்தவர்களின் பெயர்கள், காவல் அதிகாரிகளின் நூல்கள், பொதுமக்களுக்கான தகவல்கள் அனைத்தும் பார்க்க முடிகிறது.

குறிப்பாக, குழந்தைகளுக்கான குட் டச், பேடு டச் என்றால் என்ன என்பதில் தொடங்கி பெண்கள் உதவி மையம், எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கும் முறை, நிர்பயா கவுன்சிலிங் வரை பல்வேறு தகவல்களைத் தந்துள்ளனர்.

முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் 1973ல் முதல் பெண் உதவி ஆய்வாளராக பணியமர்ந்த உஷாராணியின் புகைப்படத்தைப் பார்க்க முடிகிறது.

பிறகு, பழைய வாள்களால் பின்னப்பட்ட சேர் ஒன்று அனைவரையும் வரவேற்கிறது. இதில், பார்வையாளர்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

இந்தத் தளத்தின் முதல் அறையில் பழமையான வாள்களும், விதவிதமான துப்பாக்கிகளும், தோட்டக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த அறையில் இலங்கைத் தமிழ் போராளிகளிடமிருந்து 1992ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 87 மிமீ மோட்டார் பீரங்கி வகை ஆயுதம் ஒன்றை வைத்துள்ளனர்.

இதுதவிர, போக்குவரத்து காவல்துறை பற்றின செய்திகளும், காவல்துறையினர் பயன்படுத்தும் புகைப்படக் கருவிகளும், கைரேகைப் பிரிவு பற்றிய தகவல்களும், தமிழ்நாடு இயற்கை பேரிடர் மீட்புப் படையின் உபகரணங்களும் பார்வை வைக்கப்பட்டுள்ளன.

நிறைவில், காவல்துறையினர் போட்டிகளுக்குச் சென்று வாங்கிய பதக்கங்கள் மிளர்கின்றன. மொத்தத்தில் தமிழகக் காவல்துறை பற்றிய தகவல்கள் அனைத்தையும் அறியும்படி செய்துள்ளனர்.

நிச்சயம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த அருங்காட்சியகம்.

– சாய் ஹரி

Comments (0)
Add Comment