– அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் மூலமாக அப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சமைத்த சத்தான உணவை வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதால் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கவுள்ளதால் வழக்கம்போல் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு சமூக நலத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளது “ எனத் தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “மாணவர்களுக்கு சத்தான சமைத்த உணவு வழங்குவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது” என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கொரோனா ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் முன்பாகவே அங்கன்வாடி மையங்கள் மூலமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. மோசமான நிலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை கொரோனா பேரிடர் மனித குலத்துக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
இயற்கை சீற்றங்கள், பேரிடர்களின் போதும், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசர கால மாற்றுத் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். பேரிடர்கள், இயற்கை சீற்றங்களின் போது மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசர கால மாற்றுத் திட்டங்கள் என்ன உள்ளது என்பது குறித்தும், சத்துணவு வழங்கப்பட்டது குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.