-உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 கோடியாகவும், இறப்பு எண்ணிக்கை 49 லட்சமாகவும் உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உலக அளவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்தில் இந்தியாவில் கொரோனா தாக்கம் 18 சதவீதம் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 13 சதவீதம் குறைந்தது.
இந்த கால கட்டத்தில் உலகில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரமாக உள்ளது.
கடந்த வாரம் போலவே இந்த வாரத்திலும் புதிதாக பாதிப்பு, இறப்பு விகிதம் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் 18 சதவீதம், மேற்கு பசிபிக் நாடுகளில் 16 சதவீத அளவில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.
இறப்பு விகிதத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் 23 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 19 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் 8 சதவீதமும் குறைந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24 கோடியாகவும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 49 லட்சமாகவும் உள்ளது.
அக்டோபர் 19-ம் தேதி நிலவரப்படி உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் ஆல்பா வகை தொற்று 196 நாடுகளிலும், பீட்டா வகை தொற்று 145 நாடுகளிலும், காமா வகை தொற்று 99 நாடுகளிலும், டெல்டா வகை தொற்று 193 நாடுகளிலும் பதிவாகி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.