ரெய்டுகள் நடக்கின்றன: அடுத்து என்ன?

வருமானவரிச் சோதனைகளும், அமலாக்கப் பிரிவுச் சோதனைகளும், லஞ்ச ஒழிப்புப் பிரிவுச் சோதனைகளும் தமிழகத்தில் அடிக்கடி அடிபடும் செய்திகள் ஆகிவிட்டன.

சென்ற ஆட்சியில் இந்தச் சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை.

தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன. செய்திகள் பரபரப்பாக வெளிவந்தன. பண மதிப்பிழப்பு காலகட்டத்திலும் புது நோட்டுக்கள் கட்டுக் கட்டாகப் பிடிப்பட்டன.

ஆனால் எதற்காக, யாரை அச்சுறுத்துவதற்காக இந்தச் சோதனைகள் எல்லாம் நடந்தன?

யாரைக் கைது பண்ணினார்கள்? அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பிடிபட்ட நோட்டுக்கள் மேஜிக் வித்தையைப் போல எப்படி மாயமாக மாறின?

கனிமச் சுரங்கங்களில் நடந்த சோதனைகள் தான் எத்தனை? எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டதாகக் கூடச் செய்திகள் வெளிவந்தன?

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கேயே தங்கிச் சோதனையிட்டு வெளியுலகிற்குக் கொண்டு வந்தார்.

அதெல்லாம் என்ன ஆயிற்று?

குட்கா ஊழல் புகார்கள் வெளிவந்தன. பல அதிகார மையங்களைச் சம்பந்தப்படுத்திப் பெயர்கள் எல்லாம் வெளிவந்தன. போதையைத் தடுக்க வேண்டியவர்களின் பெயர்களே பெரிதாக அடிப்பட்டன.

எல்லாம் சரி.

சில தினங்களில் எல்லாம் புகையிலைப் புகையைப் போல அடங்கிப் போனது.

கூவத்தூர் துவங்கி ஆர்.கே. நகர் வரை பல புகார்கள் சொல்லப்பட்டு அடங்கின.

தொலைக்காட்சிகளில் அது குறித்து விவாதித்துச் சிலர் தொண்டை காய்ந்து போனார்கள். பார்த்தவர்கள் விரக்தியடைந்து போனார்கள்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பு ஆளுநரிடம் ஆவணங்களுடன் பெரிய புகார்ப் பட்டியலைக் கொடுத்த தி.மு.க, தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புகாரில் சொல்லப்பட்டவர்கள் சிறைக்குப் போவார்கள் என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் சோதனைகள் நடந்தன.

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைகள் நடந்தன.

கைப்பற்றப்பட்ட பட்டியல் கூட வெளிவந்தன. ஒரு வாரச் செய்திகள் வெளிவந்தன.

அதோடு சரி. எல்லாம் அமுங்கிப் போனது.

இப்போது சி.விஜயபாஸ்கருடைய வீடு, அலுவலகங்கள், உறவினர், நண்பர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்தன.

இப்போதும் கைப்பற்றப்பட்ட பட்டியலை வாசித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை.

ஆனால், இவ்வளவு பரபரப்புக்கு இடையிலும், தன்னுடைய வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று உரத்தக் குரலில் ஊடகங்களிடம் முழங்குகிறார் விஜய பாஸ்கர்.

முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையே ஏன்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோண்டித் துருவ ஆரம்பித்து, சட்டமன்றம் வரை அலையடித்து, போராட்டங்கள் எல்லாம் நடந்து, அந்த வழக்கு விசாரணையும் அப்படியே தேங்கிக் கிடக்கிறதே ஏன்?

தமிழக வாக்காளர்களிடம் தேர்தலின் போது சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று தானே ஊழல் பேர்வழிகளைத் தண்டிப்போம் என்பதும்?

அப்புறம் ஏன் அறைகுறையாக நிற்கின்றன – எல்லா ரெய்டு வழக்குகளும், விசாரணைகளும்?

அடுத்த கட்டத்தை நோக்கி ஏன் நகரவே இல்லை?

இந்த மந்த நிலைக்கு யார் காரணம்?

தொண்ணூறுகள் காலகட்டத்தில் போடப்பட்ட ஊழல் வழக்குகளில் விசாரணை நீண்டகாலமாக நடந்து, பல்லாண்டுகளுக்குப் பிறகு டி.எம்.செல்வ கணபதியும், இந்திரகுமாரியும் தண்டனை பெற்றதைப் போல, கால தாமதமான தண்டனையினால் என்ன பலன்?

அதிர்ச்சியினால் அவர்கள் மருத்துவமனைச் சிகிச்சைக்குப் போனார்கள் என்று செய்தி போடுவதைத் தவிர, வேறு என்ன மிச்சம் ஊடகங்களுக்கு?

“அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” – என்ற  பிரயோகங்களில், தற்போதைய வழக்குகளில் நடந்து கொண்டிருக்கும் மந்த கதியை மேலே சொன்ன இரண்டு பிரிவுகளில் எதில் சேர்ப்பது?

முந்தைய ஆட்சி எப்படியோ, தற்போதைய தி.மு.க ஆட்சி ஊழல் விஷயத்தில் உரிய நடவடிக்கையை, உரிய நேரத்தில் எடுக்கும் என்று நம்பித்தான் தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கையில் வீண் தாமதங்கள் வேண்டாம்!

-யூகி

Comments (0)
Add Comment