காட்டில் புலியின் உணவுப்பழக்கம் அலாதியானது.
காட்டின், பெரிய கொன்றுண்ணியான வேங்கைப்புலி, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை.
கடமான் (மிளா) போன்ற ஒரு பெரிய இரைவிலங்கை வேங்கை, வேட்டையாடினால், முதல் அமர்வில் 40 கிலோ வரையிலான இறைச்சியைத் தின்று தீர்த்துவிடும்.
அதன் பின் 2 அல்லது 3 நாள்களுக்கு அந்த இரைவிலங்கைச் சுற்றிச்சுற்றி வந்து அவ்வப் போது இரை உண்ணும்.
இரை விலங்கை முழுதாகத் தின்று தீர்க்கும் வரை வேங்கை அந்த இரை கிடக்கும் இடத்தின் அருகிலேயே நடமாடும். அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரியும்.
இரை தீர்ந்ததும் அடுத்த இரு நாட்களுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே வேங்கை அருந்தும். அதன் பிறகு மீண்டும் பசி வந்தவுடன் மூரிநிமிர்ந்து வேட்டைக்குப் புறப்படும்.
இதன்படி பார்த்தால் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வேங்கைப்புலி வேட்டை யாடுகிறது. இதனால், ஒரு வேங்கைக்கு, ஓராண்டுக்கு புள்ளிமான், கடமான், காட்டுப் பன்றி என மொத்தம் 72 இரைவிலங்குகள் தேவை.
ஒருவேளை இரைவிலங்கு பெரிய கடமானாக இல்லாமல் சிறிய புள்ளிமானாக இருந்தால் 3 அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகே வேங்கை வேட்டையாடும்.
புலியின் தீனிப்பட்டியல் மிக நீளமானது. கரையான் முதல் காட்டுமாடு வரை இந்தப் பட்டியலில் பல உயிர்களுக்கு இடமுண்டு.
நன்கு பசித்திருக்கும் புலிக்கு கடமான் (மிளா), காட்டுமாடு, யானைக்குட்டி போன்றவை இரையாகும்.
கரடி, காட்டுப்பன்றி, புள்ளிமான், கேழையாடு, முள்ளம் பன்றி, முயல், உடும்பு, ஆமை, காட்டில் மேய வரும் ஆடுமாடு போன்றவற்றுக்கும் இந்தப் பட்டியலில் இடமுண்டு.
இரைவிலங்குகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் தவளை, தேரை, மீன், நண்டு, எலி, வெட்டுக்கிளி போன்றவையும் புலிக்கு இரையாக வாய்ப்புண்டு.
பறவைகளின் முட்டைகளை உடைத்துக் குடித்தும், கரையான் புற்றை காலால் அகழ்ந்து கரையான்களை வாரித்தின்றும் புலி பசியாறும்.
பறவைகளில் மயிலும், காட்டுக்கோழியும் புலிக்குப் பிடித்தமான இரைகள். சில வேளைகளில் முதலைக்குட்டிகளும், மலைப்பாம்பும் கூட புலியின் பசிதீர்க்கும்.
தனது வசிப்பிடப் பகுதியில் ஊடுருவும் சிறுத்தை, நரி, வரிக்கழுதைப்புலி போன்றவற்றையும் புலி கொன்று தின்னத் தயங்காது.
சுருங்கச் சொன்னால் உயிருள்ள, ஓடும், அசையும், நீந்தும் பறக்கும் உயிர்கள் அனைத்துமே புலிக்கு இரைகள்தான்.
புலி முழுக்க முழுக்க இறைச்சித்தின்னி என்றாலும், கனிம தாதுச்சத்துக்காக தர்ப் பூசணி, மணம் நிறைந்த புனுகு பழம் (Civet Fruit) உள்பட சிலவகை பழங்களையும் சுவை பார்க்கும்.
கடும்பசியைப் போக்கவும், குளிர்ச்சிக்காகவும், செரிமானத்தைச் சரிசெய்து கொள்ளவும் புலி இவற்றைத் தின்னுகிறது.
அதுபோல அருகம் போன்ற ஒருவகை புல்லையும் புலி தின்னும். இப்படி புல்லைத் தின்பதன்மூலம் தனது வயிற்றில் உள்ள இரைவிலங்கின் சிறிய எலும்புகள், இரைவிலங்கின் முடிகள் போன்றவற்றை வாய்வழியே புலி வெளியேற்றிக் கொள்ளும்.
ஆகவே, ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது புலியைப் பொறுத்தவரை சரியான பழமொழி அல்ல.
காட்டில் இப்படியாக பலவகை இயற்கை உணவுகள் இருக்கும்நிலையில், மனிதன் என்பவன் புலிக்கு இயற்கையான உணவல்ல.
காடுவாழ் இரை விலங்குகளுக்கு இருக்கும் தசைச்செறிவு மனித உடலுக்குக் கிடையாது. உவர்ப்பு நிறைந்த மனித இறைச்சி, மிக சுவையான உணவும் அல்ல.
அப்படியிருந்தும்கூட, வேங்கை ஏன் திடீரென ஆட்கொல்லியாக மாறி, மனிதனைத் தின்னும் விலங்காக உருவெடுத்து, பெயரைக் கெடுத்துக் கொள்கிறது எனத் தெரியவில்லை?
நல்லவேளை 13 வயதான மசினகுடி T-23 புலி, கூண்டில் சிக்கிக் கொண்டது.
இல்லாவிட்டால் புலி வெறுப்பாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் அதைப் போட்டுத் தள்ளியே தீர வேண்டும் என வெறிக்கூத்தாடி வெற்றி பெற்றிருப்பார்கள்.
பேரரறிஞர் பெர்னார்ட்ஷா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
‘மனிதன், புலியைக் கொன்றால் அதற்குப் பெயர் வேட்டை.
புலி, மனிதனைக் கொன்றால் அதற்குப் பெயர் வெறி’
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு