தாய்மைத் தொடர் – 1 / ராசி அழகப்பன்
மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் – பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய மக்களின் வியர்வைகளை நோக்கிப் பயணப்பட்ட ஒரு புயல் என்று சொன்னால் அது ‘தாய்’ வார இதழ் தான்.
எண்பதுகளின் துவக்கத்தில் அனேகமாய் ஒரு விஜயதசமியன்று புரட்சித்தலைவரின் முன்னிலையில் தமிழ்ச் சித்தர் கிருபானந்த வாரியார் வெளியிட்டார்.
எல்லோரும் இது எங்கே வளரப் போகிறது என்று மட்டும் சிரிப்பு சிரித்தவர்கள் அதிகம்.
ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் மட்டுமே அறிந்திருந்த வலம்புரிஜான் ஆசிரியர் என்பதுதான்.
வார்த்தைகளை வண்ணமயமாக்கி, நட்சத்திர விளையாட்டு சொற்களில் ஆடுபவர் என்று தப்புக் கணக்கு போட்டது தான்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒருபுறம் குமுதம், ஆனந்தவிகடன், இன்னொருபுறம் இதயம் பேசுகிறது, சாவி, குங்குமம், வேறு ஒருபுறம் ராணி, கல்கி, கல்கண்டு இப்படி லட்சக்கணக்கான வாசகர் பரப்பை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டிருந்த வேளையில் புரட்சித்தலைவர் அனுபவமற்ற வலம்புரிஜான் வைத்து வார இதழ் துவங்கினால் மேலே சொன்னது போல் எதிர்வினை ஆற்ற மாட்டார்களா என்ன?
இன்னொரு சம்பவம் ‘தாய்’ துவங்குவதற்கு முன் நடந்தது.
‘தாய்’ நடத்தலாம் என்றதும் ஒரு மூத்த குழு முன்னின்று நடத்த ஒன்றுகூடியது உண்மைதான். முன்னாள் அமைச்சர் பா.உ.ச, ராஜா முகமது, மூத்த எழுத்தாளர் நாகை தருமன், மணிமொழி, கஸ்தூரிரங்கன் ஆகியோர் கூடி துவங்க எத்தனிக்க –
காலம் வலம்புரிஜானை எம்.ஜி.ஆருக்கு முன்மொழிந்தது.
எம்.ஜி.ஆர் அவரை அழைத்தார், பேசினார், நிறைவு அடைந்தார்.
பிறகென்ன? முன்குழு பனிபோல் விலகி வலம்புரிஜான் ஆசிரியராகக் கொண்டு ‘தாய்’ இதழ் வெளிவரத் துவங்கியது.
முதல் அட்டைப்படம் புரட்சித்தலைவர் பெரிதும் மதித்து வணங்கும் மூகாம்பிகை.
திராவிடப் பாரம்பரியத்திலிருந்து துவங்குகிற இதழ் இப்படியா வரவேண்டும் என்கிற சர்ச்சை எழுந்தது.
எந்தப் பதட்டமும் இல்லாமல் சந்தனத் தமிழின் ஈர வாசனையோடு துள்ளும் சொற்களால் சுவைபட வெளிவந்து பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘அண்ணா’ நாளிதழும், ‘தாய்’ வார இதழும் இணைந்து வெளிவந்த அந்தக் கட்டிடத்தை நோக்கி பலர் வந்தார்கள். வரத் துவங்கிய பின் வியாக்யானம் பேசியவர்கள் உற்று நோக்க தலைப்பட்டனர்.
கவித்துவமான சொற்கள் சுமந்து வரும் கட்டுரைகள் குறிப்பாக வலம்புரி ஜான் அவர்களின் தலைப்பைப் பார்த்து வாங்கும் வாசகர்களாக மாறியது தான் ஆச்சரியம்.
வலம்புரி ஜான் நடத்தும் தாயின் உள்ளடக்கம் பொதுவாக இளைஞர்கள், கலைஞர்கள் பக்கம் திரும்பியது.
அந்தக் காலத்தில் மரபுசார் சிந்தனைகளில் இருந்தவர்கள் புதிய எண்ண வீச்சாக வெளிவரும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் இருந்தார்கள்.
அந்தக் கதவை ‘தாய்’ திறந்து வைத்தது. பிரபல எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய நிலையில் புது எழுத்தாளர்களை இருகரம் கொண்டு தூக்கிக் கொண்டாட ‘தாய்’ வழிவகுத்தது.
நகைச்சுவையில் துவங்கி அதைப் படமாக வரையும் ஓவியர் வரை புதிய அணுகுமுறை தான்.
ஆனது ஆகட்டும் புதிய விளைச்சல் நிலமாக இருக்கட்டும் என வலம்புரிஜான் முடிவு செய்து நடத்தியது தான் வெற்றிக்கு வழி வகுத்தது.
தாய் அலுவலகம் தாண்டித்தான் ‘சாவி’ வார இதழ். அதனருகே அப்போது இளைஞர்களை நோக்கி துவங்கிய மாலனின் ‘திசைகள்’ அலுவலகம் (அன்று அருணா ஓட்டல், இன்று ஸ்கைவாக் மால்).
‘தாய்’ வார இதழின் சின்னம் அனைவர் நெஞ்சையும் வருடும் வண்ணம் அமைந்தது. ஒரு தாய் ஒரு குழந்தையைப் பாதுகாப்பாக அரவணைத்துக் கொண்டிருப்பது போன்ற சின்னம்.
இது புரட்சித்தலைவரின் அன்னையின் மேல் வைத்துள்ள பாசத்தை பறை சாற்றுவது போல் இருந்தது.
இதில் ஒரு விசேஷம் உண்டு. எல்லாப் பத்திரிகைகளும் திங்கள், செவ்வாய் என்று வரிசையாக வெளிவரும் நாளை தன்னகப்படுத்தி வைத்திருந்தது.
முழி பிதுங்குவது போல் புதுப் பத்திரிகைகள் குறிக்கும் நிலைதான் தாய் எதற்கும் கவலைப்படாமல் ஞாயிறு இரவு ஏஜென்ட் கைகளில் கிடைக்கும் விதமாக சேர்ந்தது.
அதற்கு முன் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
இப்போது பத்திரிகைகள் பல வண்ணங்களில் சில மணி நேரங்களில் அச்சிட்டு அனுப்பும் நிலை அப்போது இல்லை. டைப்ரைட்டிங் அடித்து வெளிவரும் நிலையும் இல்லை.
கம்போசிங் தான்
அது என்ன கம்போசிங்..
வார்த்தைகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மெட்டலில் தனியாக உருக்கி வடித்திருப்பர்.
அதை – தாய் என்று பக்கத்து பக்கத்தில் வைத்து சில சொற்களை ஒன்றிணைத்து கையால் அடுக்கி பத்தி பத்தியாகக் கட்டி அதை மையால் தடவி எடுத்து பக்கமாக்கி அதை நகல் எடுத்து அதை ஒருவர் பிழை திருத்தித்தர, மீண்டும் அதை வேறு எழுத்து மாற்றி அடுக்கி லே-அவுட் (ஓவியர்) செய்து ஒரு அட்டையில் ஒட்டி தலைப்புகளை கையால் எழுதி அந்தக் கட்டுரை மேல் ஒட்டி, படங்கள் வந்தால் அதை கிராபிக்சில் எடுத்து சுருக்கி வைக்க என்று கட்டம் போட்டு ஒரு பக்கத்தை லே-அவுட் செய்து அனுப்புவோம். கடினம் அப்போது.
பின் ஸ்கேன் நெகடிவ் – பாசிடிவ் ஆக்கி அதை மெட்டல் பிளேட்டில் எடுத்து – இதன் பிறகுதான் அதை அச்சிடும் இயந்திரத்தில் பொருத்தி அச்சடிக்கத் துவங்குவது வழக்கம்.
என்ன தலை சுற்றுகிறதா?
ஆமாம். அந்த காலம் அப்படி
இப்போது அப்படியில்லை-எழுதுவது கூட இல்லை.
கூகுளில் அதான் செல்பேசியில் மெதுவாகப் பேசினால் அதுவே சொற்களை அடுக்குகிறது. பிழை திருத்துவதும் சுலபம்.
இருந்த இடத்தில் இருந்தே வாட்ஸ்அப் அல்லது மெயிலில் அனுப்பினால் போதும். ஓரிரு மணி நேரத்தில் புத்தக வடிவுக்குக் கொண்டு வரலாம். அன்று அப்படியில்லை சுழன்று சுழன்று பணியாற்ற வேண்டும்.
வண்ணம் சேர்த்து உள் பக்கங்கள் வர வேண்டுமென்றால் ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு பிளேட் அதாவது அச்சடிப்பது. நல்ல வேளை கொஞ்ச நாள் கழித்து பல வண்ண அச்சடிப்பு வந்து சேர்ந்தது.
’தாய்’ இடம் ஒரு பழக்கம் இருந்தது.
அது வலம்புரியார் பழக்கம் என்று சொல்லலாம்.
பத்திரிகை ஆசிரியர் தான் தான் எவரிடமும் அனுமதியோ அனுசரணையோ தேவையில்லை.
ஆனால் வலம்புரி – சங்கு போன்று ‘சுட்டாலும் வெண்மை தரும்’ என்பது போல் அச்சிடட முதல் இதழை – வியாழன் மாலை அல்லது இரவு புரட்சித்தலைவர் பார்வைக்கு அனுப்புவதுண்டு.
’அது ஏன், வேண்டாமென்று’ புரட்சித்தலைவர் சொன்ன பின்னும் “தாய்” முதல் பார்வை எப்போதும் தங்களுக்கானதே என்று வாஞ்சையான சொற்களால் புரட்சித்தலைவரின் அகம் மலரச் செய்தார்.
அடுத்து தான் மதிக்கும் ஆர்.எம்.வீ., பொன்னையன், கே.ஏ.கிருஷ்ணசாமி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அனுப்புவதை கடமையாகக் கொண்டார்.
இதில் தனிச்சிறப்பாக அப்பு எப்போதும் வந்து பார்த்துக் கொள்வார்.
யார் அந்த அப்பு?
அவர்தான் புரட்சித்தலைவரின் வளர்ப்பு மகன். அன்பானவர், மென்மைப் பேச்சில் மேன்மை வயப்பட்டவர்.
இப்படியாக தமிழ்க் கூறும் நல்லுலகில் ‘தாய்’ தனக்கான தனி இடத்தை, இலக்கியச் சொற்களால் விரிந்து பரவி ஆக்கிரமிக்கத் துவக்கியது என்று சொல்லலாம்.
புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ‘தாய்’ பத்திரிகைக்கு எழுதத் தயங்கினர்.
அட சொல்வதற்கென்ன?
எழுதக் கூடாது என்கிற மறைமுகக் கட்டளை உலவியது என்று கூட சொல்லலாம்.
எல்லோரும் அட்டையில் வண்ணப்படங்களில் நடிகைகளைப் போட்டுக் கொண்டிருந்தபோது – அது போன்ற படங்கள் தாய் இதழ் தருவதை எவரும் விரும்பவில்லை.
பல புகைப்படக் கலைஞர்கள் முன்னணி இதழ்களுக்கு பிரபலங்களின் புகைப்படம் அளித்து மீதியை தாய்க்கு தர முனைந்தனர்.
வலம்புரி ஜான் எப்போதும் அதை நம்பவில்லை. அட்டை வண்ணமயமாக்க முடிவுசெய்து வழுவழுப்பான தாளில் அச்சிட முடிவு செய்தார்.
அதில் வந்து இணைந்தவர்கள் தான் ஷ்யாமும் (தராசு), ராபினும். இந்த இருவரும் மிக அழகாக நேர்த்தியாக அட்டைப்படம் கொண்டுவந்து ‘தாய்’க்கு அழகு சேர்த்தனர்.
ஷ்யாம் அப்போது ஸ்பிக் (spic) நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்தார் என்பது நினைவு. நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு உறவினர்.
அதுவல்ல செய்தி திறன்மிக்க, வலிமையான புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர்.
நாளாக ஆக தாய் மற்றவர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது.
எப்படி அது தெரியும்?
அட – அதில் நான் துணை ஆசிரியர் ஆயிற்றே.
அப்படியா? “சொல்லுங்க நிறைய?” என்கிறீர்களா?
சொல்ல நிறைய இருக்கிறது…
(தொடரும்…)