காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!

சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு

“மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி.

09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில் ஆண்டிபட்டி ரயில் நிலையத்தின் வழியே மதுரைக்குச் செல்லவிருப்பதைக் கேள்விப்படுகிறார்.

ஆண்டிபட்டி இரயில் நிலையத்தில் மகாத்மாவைச் சந்தித்து, ஒரு வரவேற்புரையை வழங்க முடிவு செய்தார்.

அழகான தமிழில் வரவேற்புரையை தேனியிலிருந்த ஒரு அச்சகத்தில் அச்சிட்டார் – காகிதத்தில் அல்ல; காந்திக்குப் பிரியமான கதர் துணியில்.

அப்படி அச்சிடப்பட்ட வரவேற்புரை, கண்ணாடி மாட்டி சட்டமிடப்பட்டது.

காந்தி பயணம் செய்த இரயில் வண்டி ஆண்டிபட்டி இரயில் நிலையத்தில் வந்து நின்றது.

ஏராளமான மக்கள் கூட்டம். எங்கள் தந்தை, தனது வீட்டிலிருந்து ஒரு மர மேசையை ரயில் நிலையத்தின் நடைமேடையில் வைத்திருந்தார்.

காந்திஜி அந்த மேசையின் மேல் நின்று தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தைப் பற்றி பேசினார்.

அதற்கு முன்பாக, எம் தந்தையான P.C. ராஜன், காந்திக்கு வரவேற்புரையை வாசித்தளித்தார்.

கதர்த் துணியில் அச்சிடப்பட்டிருந்த அந்த அருமையான வரவேற்பு மடல் (படம் காண்க) காந்தியை மிகக் கவர்ந்தது. அதனைத் தன்னுடனேயே எடுத்துச் செல்ல விரும்பினாராம்.

ஆனாலும், தான் பயணம் செல்லுமிடத்திலெல்லாம் அதைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியாதென்பதை உணர்ந்தார்.

ஆகவே, எமது தந்தையின் சம்மதத்தைப் பெற்று, வரவேற்பு மடலை அங்கேயே கூட்டத்தில் ஏலம் விட முடிவு செய்தார்.

ஏலத்தில் கிடைக்கும் பணத்தை, தாழ்த்தப்பட்டோர் நல வாழ்வு நிதியில் சேர்க்க விரும்பினார்.

காந்தியின் கை பட்ட வரவேற்பு மடலென்பதால், அதனை எமது தந்தையாரே ஏலத்தில் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

பின்னொரு காலத்தில் காந்தி அருங்காட்சியகத்திற்கு அம்மடலை அன்பளிப்பு செய்துவிட்டார்.

கூட்டத்தில் காந்தி பேசுவதற்காகப் பயன்படுத்திய மர மேசையை, தான் இறக்கும் வரையிலும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தார். தற்போது அந்த மேசை அவரது பேரனிடம் இருக்கிறது.”

Comments (0)
Add Comment