அரண்மனை 3 – ‘பெப்பே’ காட்டிய பேய் பார்முலா!

‘பேய்ச்சிரிப்பு’ என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு பேயையும் சிரிப்பையும் கலந்து கட்டிய திரைப்படங்கள் ‘பேய்மழை’ போல தமிழ் திரையுலகத்தை நிறைக்க வழி செய்தது ‘காஞ்சனா’.

தனக்கேயுரிய பாணியில் ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ படங்களில் அதே உத்தியைப் பயன்படுத்தி வெற்றியைச் சுவைத்திருந்தார் இயக்குனர் சுந்தர்.சி.

தற்போது, அவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘அரண்மனை 3’ வெளியாகியிருக்கிறது.

முன்னிரண்டைப் போல, இதுவும் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறதா? இந்த கேள்விக்கான பதிலையே இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

அரண்மனையில ‘பேய்’..!

‘ஒரு ஊர்ல ஒரு அரண்மனை இருந்துச்சாம், அதுல ஒரு பேய் இருந்துச்சாம். அது என்ன பண்ணுச்சுன்னு தெரியுமா? அங்க இருந்த வேலைக்காரங்களை, நிர்வாகம் பண்றவங்களை, கடைசியா அந்த அரண்மனையோட சொந்தக்காரரை கொன்னுச்சாம்.

அதோட கொலைப் பட்டியல்ல சில அப்பாவி உயிர்களும் சிக்குறப்போ, அதைக் காப்பாத்த கதாநாயகனும் அவரோடு ப்ரெண்டு அல்லது ரிலேட்டிவ்வா வர்ற டைரக்டரும் முயற்சி பண்றாங்க.

ஒருவழியா கடவுளுக்கு பூஜை போட்டு அந்த பேயைக் கட்டுக்குள்ள கொண்டு வர்றாங்க..’ என்று குழந்தைகளுக்குக் கதை சொல்வது போன்றதொரு கதை ‘அரண்மனை 3’யிலும் உண்டு.

அரண்மனையில் வேலை செய்த துரை (வின்சென்ட் அசோகன்) மரணத்தைத் தொடர்ந்து, ஹாஸ்டலில் தங்கிப் படித்த ஜோதி (ராஷி கன்னா) ஊருக்கு வருகிறார்.

ஆனால், மகள் அரண்மனைக்கு வந்தது ஜமீன்தார் ராஜசேகருக்குப் (சம்பத்ராஜ்) பிடிக்கவில்லை.

காரணம், அரண்மனையில் பேய் இருப்பதாகச் சொன்னதாலேயே ஜோதியை சிறு வயதில் இருந்தே தனியாகத் தங்கிப் படிக்குமாறு ஏற்பாடு செய்தவர் ராஜசேகர்.

சிறுவயதிலிருந்தே ஜோதியை விரும்பும் எலக்ட்ரிஷியன் முரளி (ஆர்யா), அரண்மனையில் வேலை என்றதும் தனது ஆட்களை அழைத்துக்கொண்டு ஓடி வருகிறார்.

வந்த இடத்தில் இருவருக்கும் காதல் முளைக்க, அந்த நேரத்தில் பேய் வேலையைக் காட்டுகிறது.

தன்னைப் போலவே, தனது உறவினரின் குழந்தையும் பேயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்கிறார் ஜோதி. உறவினர்களோ, தந்தையோ அவரது பேச்சைக் காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை.

இந்தச் சூழலில், அந்த குழந்தையின் தந்தை ரவி (சுந்தர்.சி) அரண்மனைக்கு வருகிறார். ராஜசேகரின் சகோதரி மகளை மணந்தவர் அவர்.

வெளிநாடு செல்வதால், விவாகரத்தான மனைவியையும் அவருடன் வசிக்கும் மகளையும் பார்ப்பதே அவரது நோக்கம்.

வந்த இடத்தில் மகளை ஒரு பேய் ஆட்டுவிப்பதை உணர்ந்தவர், அதன் அட்டூழியங்களை ஒழிக்க முடிவு செய்கிறார்.

பேய் பயத்துக்கு யார் காரணம் என்று அறிவதோடு, அந்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார்.

வைக்கப்படும் பூ.. வலிக்கும் காது..!

பேயை எப்படி விரட்டுகின்றனர் என்பதற்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு விளக்கம் இருக்கும். இதிலும் அப்படியே..

‘அரண்மனை’ 1 மற்றும் 2இல் நம் காதில் வைக்கப்பட்ட பூச்சுருளின் கனம் அதிகம் என்றால், ‘அரண்மனை 3’யில் ஒரு பூக்கூடையை கவிழ்க்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

‘காது இடைவெளியில பூ முட்டுக்கொடுத்து நிக்கும், பூக்கூடை எப்படி நிக்கும்’ என்று வடிவேலு போல, படம் பார்க்கும் நாம் கதறத்தான் வேண்டியிருக்கிறது.

போலவே, முதலிரண்டு பார்ட்களிலும் இருந்த நகைச்சுவை ப்ளஸ் பேய் பயம் கலவை இதில் சுத்த மோசம்.

பேயைப் பார்த்து சிரித்துக்கொள்ளட்டும் என்று இயக்குனர் விட்டுவிட்டதால், திரைக்கதையில் பயம் இருக்குமளவுக்கு நகைச்சுவைக்கு இடமில்லை.

ஆண்ட்ரியா, லட்சுமிராய் மற்றும் த்ரிஷா, பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி முறையே முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் சில பாடல்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.

போதாக்குறைக்கு ஹன்சிகாவும் அழகழகாக வலம் வந்து, அதன் பின் பேயாக பயமுறுத்தியிருந்தார்.

‘அரண்மனை 3’யில் ஹன்சிகாவும் இல்லை, ராஷி கன்னாவும் சாக்‌ஷியும் கவர்ச்சியாக சில காட்சிகளில் வலம் வந்தாலும் அது நம் கண்களைக் கவர்வதாக இல்லை;

சந்தானம், சூரி போன்று இதில் யோகிபாபு, மனோபாலா, விவேக், மைனா நந்தினி மற்றும் நளினியின் காமெடி பெரிதாகச் சிரிக்க வைக்கவில்லை.

அப்புறமென்ன, ’வெறுமனே பயப்படுறதுக்கு ‘டிமாண்டி காலனி’யோ இல்ல ஆங்கில பேய் படங்களையோ பார்த்துடுறோம்’ என்று இருக்கையில் இருந்து எழத் தொடங்கிவிடுகின்றனர் ரசிகர்கள்.

வீணான உழைப்பு!

அமைதியாக இருந்தாலே சோகம் பொங்கி வழியும் என்பது போன்ற முகத்துடன் படம் முழுக்க வருகிறார் ராஷி கன்னா. சம்பத்ராஜ், வேல ராமமூர்த்தி, வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், கொலப்புளி லீலா ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் வந்து போகின்றனர்.

பேயாக வரும் ஆண்ட்ரியா, அவரது காதலராக வரும் அமித் பார்கவ் இடம்பெற்ற ‘பிளாஷ்பேக்’ பகுதி ‘ஷார்ட்’ ஆக இருந்தளவுக்கு ‘ஸ்வீட்’டாக இல்லை.

நாயகனின் பெயர் முரளி. பேயைக் கண்டறிந்து, அதனை விரட்ட உதவும் பாத்திரத்தின் பெயர் ரவி. இவ்விரண்டும் ‘அரண்மனை 3’யிலும் தொடர்கிறது.

முரளியாக ஆர்யாவும், ரவியாக சுந்தர்.சியும் நடித்திருக்கின்றனர். ஆனால் வினய் மற்றும் சித்தார்த்துடன் தோன்றும்போது சுந்தரிடம் தென்பட்ட உற்சாகம் இதில் மிஸ்ஸிங்!

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் பென்னி ஆலிவரின் படத்தொகுப்பும் ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதைக்கு உயிர் தந்திருக்கின்றன. சி.சத்யாவின் பின்னணி இசை ஈர்க்குமளவுக்குப் பாடல்கள் அமையவில்லை.

‘அரண்மனை 3’க்கு சுந்தர்.சி.யிடம் உதவியாளர்களாக இருந்த வேங்கட்ராகவனும் பத்ரியும் முறையே திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றனர்.

அனைத்தையும் இழுத்துப் பிடித்து, இயக்குனராகத் தேரை ஓட்டியிருக்கிறார் சுந்தர்.சி. திரைக்கதையில் அவர் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்பது தேரை ஒருபக்கமாகச் சாய வழி வகுத்திருக்கிறது.

முன்னிரண்டு பாகங்களில் கதாபாத்திர வடிவமைப்பு, பேய் சார்ந்த நகைச்சுவை, நாயகிகளின் கவர்ச்சி, கிளைமேக்ஸ் பகுதியில் நிரம்பியிருக்கும் விறுவிறுப்பு ஆகியவற்றில் நேர்த்தி கூடி நின்றது.

மூன்றாம் பாகத்தில் எதிலும் அந்த திருப்தி கிடைப்பதில்லை.

கதை ஒன்று என்றாலும் பாதிக்கப்பட்ட பெண் யார், அவரது கொடூர மரணத்துக்குக் காரணம் யார், இறுதியில் பேயின் தீவிரத்தைக் குறைக்க என்ன செய்தார்கள் என்பதில் வித்தியாசம் காட்டியதால் ‘அரண்மனை’யும் ‘அரண்மனை 2’வும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கவில்லை.

திரையில் காட்டப்படும் கொடூரமும் பார்வையாளர்களை அருவெருப்படையச் செய்யவில்லை.

இந்த ‘வேண்டாதவை பட்டியல்’ ‘அரண்மனை 3’யில் நிறைந்து வழிகிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

‘அரண்மனை 3’ வெற்றியடைந்தால் ‘அரண்மனை 4’ வரும் என்று பேட்டிகளில் கூறியிருந்தார் சுந்தர்.சி.

இப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, இதே பார்முலாவில் ஒரு வெற்றிப் படத்தைத் தந்து இந்த சீரிஸை நிறைவு செய்ய வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் சுந்தர்.சி?!

-பா.உதய்

Comments (0)
Add Comment