பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன்!

நூல் வாசிப்பு:

தமிழ் எழுத்துலகில் புதிய நயமிக்க சொற்களுடன் கவித்துவமாகவும் அதே வேளையில் தத்துவார்த்தமாகவும் கதைகள் சொல்வதில் எழுத்தாளர் லா.ச.ரா. மிக முக்கியமான படைப்பாளி. அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘முற்றுப்பெறாத தேடல்’.

லா.ச.ரா.வின் மகன் சப்தரிஷி தந்தையின் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.

“உலகினில் அதிகம் புழங்கப்படும் வார்த்தைகள் மனம், காதல், வாழ்க்கை, உயிர், அழகு, கடவுள்…

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எந்த மொழியிலும் இவைகளுக்கு வரைமுறையான மிகச் சரியான விளக்கம் கிடையாது. அது கிடைக்கவும் கிடைக்காது. கிடைக்கும் வரையிலோ கிடைக்காத வரையிலோ இது முற்றுப்பெறாத தேடல்” என்று சப்தரிஷி குறிப்பிட்டுள்ளார்.

“தேடும் பொருளோ, நயமோ தரும் சொல்லைத் தேடி அலைந்தபோதெல்லாம் கண்ணாமூச்சி ஆடிவிட்டு நள்ளிரவில் தானே தட்டி எழுப்பும் சொல்லின் விளையாட்டு” என்று கூறும் லா.ச.ரா,

“நம்மைச் சுற்றி கவிதை நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. காரணம் பார்வையும் கேட்க செவியும் அடையாளம் கண்டுகொள்ள சமயமும் வாய்த்தவன் பாக்யவான்” என்கிறார்.

இந்த முற்றுப்பெறாத தேடல் நூலின் முதல் கட்டுரையே அம்மாவைப் பற்றியதாக இருக்கிறது.

கடைசி கட்டுரை அப்பாவைப் பற்றியது.

தன் வாழ்வின் வெவ்வெறு காலகட்டங்களில் எழுதிய சுவாரசியமான சிந்திக்கத் தூண்டுகிற கட்டுரைகளை ஒரே நூலில் படிப்பது வாசகனுக்கு தேன் சாப்பிடுவது மாதிரி.

அந்த அனுபவத்தை ‘முற்றுப்பெறாத தேடல்’ உங்களுக்குத் தரும் என்பது உறுதி.

நூலிலிருந்து முதல் கட்டுரை…

அம்மா

தாயின் மஹிமையை எத்தனைதான் பாடினாலும் பாஷை பற்றாது வேதங்களே தவித்துக் கொண்டிருக்கின்றன. தெய்வம் உண்டா, இல்லையா என்கிற சர்ச்சையும் சந்தேகங்களும் இன்னமும் பண்டிதரீதியில் ஆயிரம் வாத எதிர்வாதங்களுக்கிடையில் ஓய்ந்தபாடில்லை.

ஆனால், தாயின் நிரந்தரம் பற்றி (உதவாக்கரை மகன் உள்பட) சந்தேகிப்பார் யாரும் இருக்க முடியாது. தாயின் பெருமையை அறிந்துகொள்ள பண்டிதமோ, பாண்டித்யமோ, பாடமோ வேண்டுமா?

தும்பை அவிழ்த்துவிட்ட உடனேயே துள்ளி ஓடிவந்து கன்று தன் தாயின் மடியில் முட்டும் மூர்க்கத்தில்.

உடனே தாய், கன்றை நக்கிக்கொடுக்கும் பரிவில், உடனேயே சுரந்துவிட்ட பாலில், பேசாத பாஷைகள் எல்லாம் அலறிவிடுகின்றனவே!

‘அம்மே! அம்மே!! அம்மே!!!’

அம்மா எனும் சொல்லில் ப்ரணவாஷரங்கள் அடங்கியிருக்கின்றன. ஸ்வரஸ்தானத்தில் மேல் ‘மா’ அம்மாவில் பேசுகிறது. விளம்பகால விஸ்தாரத்தில் ம எனும் மூச்சு ஒடுக்கத்தில் அவரோஹண விஸ்தரிப்பு பெரிது.

அ நேர் நாபி, மூலாதாரம் பூர்வஜன்மாக்களையும் பிணைக்கும் தொப்புள் கொடி நரம்பு அதிர்வு சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் ஆறாம் அறிவு படையாத ஜீவராசிகள் உள்பட உணர்ச்சியின் அடிவாரத்தினின்று உயிர் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வடிகாலாக அமைந்த ஓசையின் முதல் உரு அம்மா.

லலிதா ஸஹஸ்ர நாமத்தில் முதல் நாமமே ஸ்ரீ மாத்ரு நம. அது மட்டுமல்ல. இன்னமும் ஓரிரு இடங்களில் ஆதிசங்கரர் இதே நாமத்தைத் திரும்பச் சொல்கிறார்.

அத்தனை பெரிய கலைஞன், கவி. அவருக்கு அந்த இடங்களில், அதைவிடச் சிறப்பான மாற்றுச் சொல் தோன்றவில்லை என்றே தோன்றுகிறது.

அம்மாவின் அருமை பெருமையை வார்த்தை பூர்வமாகத் தரிசிக்க வேணுமானால் பட்டினத்தாரின் இரங்கலைப் படிக்கவேண்டும்.

முன்னையிட்ட தீ முப்புரத்தில்

பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்

அன்னையிட்ட தீ அடிவயிற்றில்

இதை புலம்பலாக நினைக்காதீர்கள். அபசாரம்  அபசாரம். அத்தனையும் அம்மாவுக்கு அர்ச்சனை. நெருப்புக்கு நாபி நெருப்பாலேயே ஆஹூதி.

சங்கரர் அம்பாளைக் கேட்கிறார்: “தாயே, ஸ்தீரியில் கெட்டவன் இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டோ?”

ஐயா, இதெல்லாம் வார்த்தை சாமர்த்தியமில்லை. அம்மாவைப் பற்றி நினைத்தாலே உணர்ச்சி மடை உடையும் நிலை.

நம் தெய்வங்களைக் குடும்பஸ்தர்களாகவே ஆவாஹணம் செய்து, அந்த சமுதாய நெறிப்படித்தான் வழிபடுகிறோம்.

சிவன், பார்வதி, பிள்ளையார், சுப்ரமண்யர், விஷ்ணு, லஷ்மி, பிரம்மா, அப்பா, அம்மா, பிள்ளை.

நாம் பழக்கப்பட்ட சமுதாய உறவுப்படிதான், ஆரம்பத்தில் நாம் தெய்வத்தையும் அணுகமுடியும்.

சர்வேஸ்வரனே, இரு கைகளையும் ஏந்திக்கொண்டு நிற்க, தேவி அன்னபூரணி உட்கார்ந்தபடி அகப்பையில் ஆண்டவனுக்குப் பிச்சையிடும் ஒவியத்தைப் பிராபல்யமாகப் பார்த்திருப்பீர்கள்.

அம்மாவின் மாதாஸ்வரூபம் அழுத்தமாக இங்கு காண்பிக்கப்படுகிறது.

இங்கு ஒன்று சொல்கிறேன்: என் பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன். அவர்கள் எனக்கு ஒரு ஆத்மிக அனுபவம்.

முற்றுப்பெறாத தேடல்: லா..ராமாமிருதம்

வெளியீடு: பரிதி பதிப்பகம்,
56
சி/128 பாரத கோயில் அருகில்,
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் – 635851

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment