காதலாகிக் கசிந்த அழகியின் உண்மைக் கதை!

காதலாகிக் கசிந்துருகி… சொல்லைக் கேட்டிருப்போம்.

அதையே வாழ்வாய்க் கொண்ட பெண்களைப் புராணங்களிலும் பார்த்திருக்கிறோம்.
கடவுளின் மீது அதீதப் பிரமை கொண்டு நேசித்தவர்களாய் மீரா துவங்கி ஆண்டாள் வரைப் பலரைச் சொல்ல முடியும்.

அப்படி மன்னரின் மீது நேசம் கொண்டு அவர் மீது பித்துப் பிடித்த மனநிலைக்கே போய் அண்மையில் முப்பது ஆண்டுகளுக்கு மறைந்த ‘செல்லம்மா’ என்ற பெண்ணைப் பற்றிய கதைத்தன்மை கொண்ட கட்டுரையை  ‘மகாராஜாவின் காதலி’ என்ற தலைப்பில் அற்புதமான மொழியில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எழுதியிருக்கிறார் கவிஞரான சுகுமாரன்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த யௌவன அழகியான செல்லம்மா திருவிதாங்கூரின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவைக் காதலிக்கிறார்.

எல்லாம் ஒற்றைக் காதல் தான். ராஜ குடும்பத்தில் சற்றே எளிமையான அவரைப் பார்த்த கணம் முதல் செல்லம்மாவின் நெஞ்சில் பதிந்துவிடுகிறார் ராஜா.

இவ்வளவுக்கும் ஆசிரியையாக வேலை பார்க்கிற செல்லம்மா மன்னர் தென்படுகிற இடங்களில் எல்லாம் தன்னை அலங்கரித்துக்கொண்டு செல்கிறார். அவர் தலைமை தாங்கும் நாடகத்தில் நடித்து மன்னரின் கையால் ஒரு மேலாடையைப் பரிசாக வாங்கிய கணத்திலிருந்து ராஜாவைத் தன் கணவராக மனசுக்குள் வரித்துக் கொள்கிறார்.

அந்த நினைவே பித்துப்பிடித்த மனநிலைக்கு அவரை அழைத்துச் செல்கிறது. ஆசிரியை வேலையை இழக்கிறார். சொந்தங்கள் கைவிடுகின்றன. தெரிந்தவர்கள் எல்லாம் அந்நியமாக, செல்லம்மாவின் மனம் முழுக்க நிரம்பியிருக்கிறார் மன்னர்.

யாரோ கருணையுடன் அவருக்கு உணவளிக்கிறார்கள். தெருவே வாழ்விடமாகிறது. தன் நினைவின் சுகந்தத்திலேயே தனி உலகத்தில் வாழ்ந்த செல்லம்மா திருவனந்தபுரத்துச் சாலையோரத்தில் தான் நேசித்த மன்னரின் புகைப்படம் அடங்கிய கந்தல் மூட்டையுடன் காலத்தால் கசங்கிய சடலமாய்க் கிடக்கிறார்.

கேரள நாளிதழ்களில் பதிவான செய்திகளின் படி செல்லம்மா என்கிற கனவு நாயகி மறைந்தது 1996 ஜூலை மாதம் 30 ஆம் தேதி.

தன் நினைவாகவே வாழ்ந்த உன்மத்தக் காதலியான செல்லம்மாவை மன்னரான பாலராம வர்மா தனக்கு முன்னால் பைத்தியமாக விரட்டப்பட்டபோது பார்த்திருப்பாரா இல்லையா என்கிற கேள்வியுடன் வரலாறு என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் சுகுமாரன்.

மிக அழகான சிறுகதையைப் போன்ற கனவுமயமான வாழ்வைக் கவிமொழி கலந்த நடையுடன் கட்டுரையாக்கியிருக்கிறார் சுகுமாரன்.

வாசித்து முடித்த பிறகும் மனசில் நிழலாடுகிறது பிரேமம் கொண்டு பித்தாகவே வாழ்ந்த செல்லம்மாவின் மெழுகைப் போன்ற தோற்றம்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஆனந்த விகடன் 2021 தீபாவளி மலரில் இந்தக் கட்டுரை ஒரு சோற்றுப் பதம்!

-யூகி

Comments (0)
Add Comment