அழுவதற்காக ஒரு அறை!


கொரோனா தொற்றைத் தொடர்ந்து பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல்வேறு வகையான கஷ்டங்கள் உலகெங்கிலும் மக்களை அரித்து வருகிறது.

இந்த கஷ்டங்களால் பல இடங்களில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

தங்கள் துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூட சரியான ஆட்கள் கிடைக்காமல் ஒரு பிரிவு மக்கள் வேதனையில் உழன்று வருகிறார்கள்.

இந்தச் சூழலில் மனச் சோர்வில் உள்ள மக்கள் தங்கள் சோகங்களைச் சொல்லி அழுவதற்காக ஒரு அறையைத் திறந்துள்ளது ஸ்பெயின் அரசு.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அழுகை அறைக்குள் மக்கள் தங்கள் சோகங்களை வெளிப்படுத்துவதற்காக சில தொலைபேசிகள் வைக்கப்பட்டுள்ளன.

கூடவே தங்கள் சோகத்தைச் சொல்லி அழவும், பிரச்சினைக்கு தீர்வுகாண உதவவும் கூடிய மனோத்ததுவ நிபுணர்களின் தொலைபேசி எண்கள், அங்குள்ள சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

யாரெல்லாம் மனச்சுமையுடன் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் இந்த அறைக்குள் நுழைந்து மனம்விட்டு அழுதும், தங்கள் ஆதங்கத்தைக் கொட்டியும் மனதை லேசாக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடங்கிய சில நாட்களிலேயே இந்த ‘அழும் அறை’க்கு அந்நாட்டு மக்களிடையே மவுசு ஏற்பட்டுள்ளது.

“இந்த அறைக்குள் சென்று என் கஷ்டங்களையெல்லாம் நினைத்து மனம்விட்டு அழுதேன். அறையை விட்டு வெளியே வரும்போது மனம் லேசானதைப்போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது” என்று இதற்குள் சென்றுவந்த ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டு மக்களிடையே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக இதுபோன்ற திட்டங்களை அந்நாட்டு அரசு செய்து வருகிறது.

இயற்கை மரணத்துக்கு அடுத்ததாக அதிக மரணங்கள் அங்கு தற்கொலைகளால் ஏற்படுவதாக கிடைத்துள்ள புள்ளி விவரங்கள்தான் இதற்கு காரணம்.

அந்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 3,671 பேர் தற்கொலை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 5.8 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பதும் இதற்கு மற்றொரு காரணமாக உள்ளது.

இந்த அழும் அறையைத் தாண்டி, மன அழுத்தத்தில் இருக்கும் மக்களை அதிலிருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களை ஸ்பெயின் அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்காகவே 116 மில்லியன் டாலர் செலவில் ஒரு துறையை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள், அவசர உதவிக்கு அழைக்கவும், அவர்களுக்கு கவுன்சலிங் செய்யவும் தனி தொலைபேசி சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நல்ல அரசு இந்தியாவில் இலையே என்று நினைத்து உங்களுக்கு அழுகை வருகிறதா?

-பிரணதி

Comments (0)
Add Comment