“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – என்கிற சமத்துவ வரிகள் விளைந்த மண்ணில் தான் அடர்ந்த களைகளைப் போல சாதியப் புதர்களும் உருவாயின. மதப்பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன.
இதை எல்லாம் தவிர்த்து சாதிய வேற்றுமைகளைக் களைந்து மக்களிடம் ஏற்றத்தாழ்வு காட்டாமல் ஒரே இடத்தில் வாழச்செய்வதற்கான முயற்சியாகத் துவங்கப்பட்டது தான் – சமத்துவபுரத் திட்டம்.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் உருவானது. அதன் துவக்க விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஊடகங்கள் அது குறித்து விரிவாக எழுதின.
பெரியாரின் தொண்டராக இதைச் செய்வதாக அப்போது தெரிவித்திருக்கிறார் கலைஞர்.
அதன் பெயரே பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம் என்று தான் வைக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டும் வைக்கப்பட்டிருந்தவர்களும், இதர பிரிவினரும் ஒரே வளாகத்திற்குள் வசிக்கிற நிலையை உருவாக்கியது சமத்துவபுரம்.
வீடு, சாலை வசதி, குடிநீர், கல்வி, பொது மயானம் என்று எல்லாமே ஒரே வளாகத்திற்குள்.
இப்படி கலைஞர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரங்கள் மட்டும் 237.
உள்ளாட்சி அமைப்புகளில் சமத்துவத்திற்காக ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்த நிலையில், அனைவரையும் ஒரே நிலப்பரப்புக்குள் வாழ வைத்த சூழல் எவ்வளவு முக்கியமானது?
அந்தச் சூழல் தற்போதைய தி.மு.க ஆட்சியிலும் நீடித்து மேலும் தழைக்க வேண்டும் என்பது தான் சமத்துவத்தை விரும்புகிறவர்களின் விருப்பம்.