அ.தி.மு.க.வின் 50 வரலாற்று உண்மைகள்!

பொன் விழா காணும் அ.தி.மு.க.,வைப் பற்றிய 50 முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறார் சென்னை பெருநகர முன்னாள் மேயரான சைதை சா.துரைசாமி.

********

* அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.

* 1971 தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆருக்கு போட்டியாக தன் மகன் மு.க.முத்துவை நடிக்க வைத்து, ரசிகர் மன்றங்களை உருவாக்கினார்.

* தி.மு.க. ஆட்சியில், லஞ்சமும், ஊழலும் பெருகியதை காமராஜர் கண்டித்தார். நல்லாட்சிக்கு உத்தரவாதம் கொடுத்த எம்.ஜி.ஆருக்கு, மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

* 1972 அக்டோபர் 1ல் நடந்த சென்னை, செங்கை மாவட்ட மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.ஜி.ஆர். எங்களின் தனிக்கொடி அடையாளத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாத நான், அவர் காரில் ஏறும் போது, மன்றங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைத்தேன்.

* அதிலிருந்த உண்மைகளை விசாரித்து, 1972 அக்., 8ல், திருக்கழுக்குன்றம், சென்னை லாயிட்ஸ் ரோடு என இரண்டு இடங்களிலும், ‘தி.மு.க.,வின் கிளை செயலர்கள் முதல் அமைச்சர்கள் வரை, அனைவரும் சொத்து கணக்கு காட்ட வேண்டும்’ என்று முழங்கினார்.

* அவரது பேச்சு தி.மு.க.,வில் புயலை கிளப்பவே, அக்., 10ம் தேதி கட்டுப்பாடுகளை மீறியதாக அவரை நீக்கினர். எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட செய்தியை கேட்ட ரசிகர்களும், மக்களும் போராட்டம்
நடத்தினர்.

* தொண்டர்கள், ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வரவே, புதிய கட்சி துவங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் எம்.ஜி.ஆர்.

* 1972 அக்டோபர் 17ல், அ.தி.மு.க., என்ற புதிய இயக்கம் துவங்கினார். இதற்கு அக்., 1ல், நான் சொன்ன கருத்துகள் திருப்புமுனையாக அமைந்தன.

* குக்கிராமத்திலும் அ.தி.மு.க., கிளைகள் துவங்கப்பட்டன. அதிர்ந்த தி.மு.க. அரசு, ஆரம்ப கட்டத்திலேயே நசுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது

* தொண்டர்கள், விசுவாசிகள், ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கும், கொடூர தாக்குதலுக்கும் ஆளாகினர். மதுரை கர்ணன், தாக்குதலில் கண்களை பறிகொடுத்தார்.

வத்தலக்குண்டு ஆறுமுகம், ஆண்டிப்பட்டி அமுதன், சிதம்பரம் பாலசுந்தரம், பூலாவரி சுகுமாரன், துாத்துக்குடி சிகாமணி, உடுமலை இஸ்மாயில் போன்ற 20க்கும் மேற்பட்டோர் இன்னுயிரைக் கொடுத்து, அ.தி.மு.க.வின் உரமாக மாறினர்

* ‘மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தி.மு.க. – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’ என அவர்களின் வீடுகளுக்கு பேரணி நடத்தி மனு கொடுக்குமாறு எம்.ஜி.ஆர். ஆணையிட்டார்

* சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வான கருணாநிதி வீட்டுக்கு, முன்னாள் துணை மேயர் சடகோபன் தலைமையில் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தோம்.

அப்போது சடகோபன் கையில், ஒரு எலுமிச்சை பழம் கொடுத்த கருணாநிதி, ‘தெளிவில்லாதவர்கள் தலையில் தேய்த்து குளிக்கட்டும்’ என எம்.ஜி.ஆரை மறைமுகமாக கிண்டல் செய்தார்

* கருணாநிதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க நினைத்தேன். அதற்கேற்ப டிசம்பர் 16ல், சைதை தேரடி தெருவில், கருணாநிதி ‘ஏன் நீக்கினோம் எம்.ஜி.ஆரை’ என்ற தலைப்பில் பேச வந்தார்.

* இரவு 8:15 மணிக்கு, கருணாநிதிக்கு மாலை அணிவிக்க வரிசையில் சென்று, என் முறை வந்ததும் ‘மைக்’கை பிடித்தேன்.

* ‘எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை நீக்கிய நீங்களும், அந்த அறிக்கையில் ஒப்பமிட்ட 26 செயற்குழு உறுப்பினர்களும் தான் தெளிவு இல்லாதவர்கள்.

அதனால், இந்த எலுமிச்சம் பழங்களை தேய்த்து குளியுங்கள்’ என்று சொல்லிவிட்டு, எலுமிச்சம் பழ மாலையை கருணாநிதிக்கு அணிவித்தேன். கையில் ஒரு மனுவையும், எலுமிச்சம் பழத்தையும் கொடுத்தேன். ‘கருணாநிதியே ராஜினாமா செய்’ என்ற துண்டு பிரசுரங்களை அவர் மீது துாவினேன்.

* ‘இவனை பிடியுங்கள்’ என, காவலர்களுக்கு உத்தரவிட்டார் கருணாநிதி. தி.மு.க.,வினரும், காவலர்களும் தாக்கியதில் மயக்கமானேன். ஒரு பிணத்தை போல என்னை ஜீப்பில் போட்டு, காவல் நிலையத்துக்கு சென்றனர்.

* தகவல் அறிந்த எம்.ஜி.ஆர்., காவல் நிலையத்துக்கு போன் செய்தார். எனக்கு ஆறுதல் சொன்னார். ஜாமினில் வந்த பின், என் உயிருக்கு ஆபத்து என்பதால், கட்சி அலுவலகத்தில் தங்கவைத்து பாதுகாப்பு கொடுத்தார்.

* எலுமிச்சை மாலை போட்ட வழக்கில், ஒன்பது மாதம் தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டேன். தி.மு.க., அரசால் போடப்பட்ட 17 பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலையானேன்.

* அ.தி.மு.க., சந்தித்த முதல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலில், அதன் பலத்தை நிரூபித்தது. கே.மாயத் தேவர், ஆளும் தி.மு.க.,வையும், காங்கிரஸ் கட்சியையும் ஒருசேர தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.

* திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னரே, அ.தி.மு.க.,வை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

‘விக்கிபீடியா’ போன்ற ஒரு சில செய்தி தளங்களில் குறிப்பிடுவது போன்று, அனகாபுத்துார் ராமலிங்கம் என்பவரால் துவங்கப்பட்ட கட்சியான, அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இணைந்தார் என்பது தவறான செய்தி.

* புதுச்சேரி லோக்சபா தேர்தலில், பாலாபழனுார் மாபெரும் வெற்றி பெற்றார்.

அடுத்து, கோவை மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அரங்கநாயகமும், கோவை லோக்சபா இடைத் தேர்தலில், எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனும் வெற்றிக் கொடி நாட்டினர்.

* 1977ல் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி 144 இடங்களைப் பெற்று, முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தது.

* இதையடுத்து, 1980ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, இரு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதை காரணம் காட்டி, அ.தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டது.

* பின் நடந்த சட்டசபை தேர்தலில், ‘நான் என்ன தவறு செய்தேன்’ என நீதி கேட்டார். 162 இடங்களில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது.

* அந்த தேர்தலில் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்த போது, ‘கவலைப்படாதே. அ.தி.மு.க.,வின் முதல் மேயர் நீ தான்’ என ஆறுதல் சொன்னார் எம்.ஜி.ஆர்.

* அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 1984ல் நடந்த தேர்தலில், அதுவரை இல்லாத அளவுக்கு, அ.தி.மு.க., கூட்டணி 195 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. நானும் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றேன்.

* 1987ல் எம்.ஜி.ஆர்., மரணம் அடைந்த பின்னும், அ.தி.மு.க.,வின் வெற்றி பயணம் நிற்கவில்லை. ஜானகி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் காலம் வரையிலும் வெற்றி தொடர்கிறது. இன்றும் பலமான எதிர்க்கட்சியாக இருக்கிறது.

* ‘அடுப்பில் உலை வைத்துவிட்டு, அது கொதிக்கும் முன், எம்.ஜி.ஆரிடம் உதவி பெற்று திரும்பி விடலாம்’ எனக் கூறும் வகையில், நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவே திகழ்ந்தார்.

* ‘ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் மாற்றங்கள் செய்வேன்’ என்று திரைப்படத்தில் சொன்னாரோ, அவற்றை எல்லாம் நிஜமாகவே, தன்னுடைய ஆட்சி காலத்தில் சாதித்துக் காட்டினார். அவர் நிறைவேற்றிய மகத்தான திட்டங்களில், ஒரு சிலவற்றை மட்டும் இங்கு கொடுக்கிறேன்.

* சத்துணவு திட்டத்தில் 60 லட்சம் மாணவர்களுக்கு 28 வகையான உணவு வழங்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணிகளில் கிராமப்புற பெண்கள், விதவையருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

* இலவச சீருடை, இலவச காலணி, இலவச புத்தகம், இலவச பஸ் பாஸ், இலவச பல்பொடி போன்றவை கொடுக்கப்பட்டன. பிளஸ் 2 பாடத்திட்டம், அவரது காலத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. தொழில் கல்வி ஊக்குவிக்கப்பட்டது.

* முதன்முதலாக தகுதிவாய்ந்த தனியார்களுக்கு, பொறியியல் கல்லுாரிகள் துவங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று, உலகெங்கும் தமிழக பொறியாளர்கள் நிரம்பியிருப்பதற்கு காரணம், அவரின் தொலைநோக்கு பார்வை தான்.

* பிற்படுத்தப்பட்டோருக்கு 50; தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 என, 68 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்து, சமூக நீதியை நிலைநாட்டினார்.

* முதியோருக்கு உதவித்தொகை, சேலை, வேட்டி போன்றவற்றை வழங்கி, மனிதநேயத்தை காட்டினார். வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

* குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

* சைக்கிளில், ‘டபுள்ஸ்’ போனால் தண்டனைக்கு ஆளாகும் சட்டத்தை நீக்கினார். ஆள் துாக்கி சட்டம் எனப்படும் சந்தேக, ‘கேஸ்’ எனும் சட்டப்பிரிவை ரத்து செய்தார்.

* ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவுடன் இருந்த நல்லுறவை பயன்படுத்தி, கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வந்தார்.

* காவல் துறையில் பெண்களை நியமனம் செய்தார். மேலும் மகளிருக்கென தனி பஸ், தாய் சேய் நல விடுதிகள், மகளிர் பல்கலை கொண்டு வந்தார்.

* தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்ததால், அரசு சார்பில் 22 ஆயிரம் கடைகளைத் திறந்தார்.

* தன்னிறைவு திட்டத்தில், கிராம மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, போக்குவரத்து போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

* மதுவை கட்டுப்படுத்த அவசர சட்டங்கள் பிறப்பித்தார். அதன்படி, முதல்முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறை; இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள்; மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவர் என, அவசர சட்டம் கொண்டு வந்தார்.

அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அந்த சட்டம் நிறைவேறவில்லை. அது நிறைவேறியிருந்தால், இன்று தமிழகம் குடிகாரர்கள் இல்லாத மாநிலமாக திகழ்ந்திருக்கும்.

* பரம்பரை மணியக்காரர் முறையை ரத்து செய்து, அனைத்து ஜாதியினரும் கிராம நிர்வாக அலுவலராக சட்டம் கொண்டு வந்தார்.

* தமிழில் சீர்திருத்த எழுத்துக்களை அறிமுகப்படுத்தி, தமிழ் வளர்ச்சிக்காக உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தினார். தமிழ் ஈழம் மலர்வதற்காக பெரும் உதவிகள் செய்தார்.

* தும்பிவாடி துரைசாமியாக இருந்தவனை, சைதை துரைசாமியாக மாற்றி, சைதாப்பேட்டை தொகுதி அமைப்பாளராக்கினார். ‘உயிருடன் இருக்கும் அ.தி.மு.க.,வின் முதல் தியாகி, அ.தி.மு.க.,வின் பகத்சிங்’ என்று என்னை அங்கீகரித்தார்.

*’சைதாப்பேட்டை என்றால் எலுமிச்சை பழம் தான் எனக்கு ஞாபகம் வரும். எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட துரைசாமியை தான் ஞாபகம் வரும்’ என, பாராட்டிப் பேசி என் தியாகத்தை பெருமைப்படுத்தினார்.

* ஜெயலலிதா, கொள்கை பரப்புச் செயலராக பொறுப்பேற்றதும், அவரது முதல் பொதுக்கூட்டமே, எனக்கு பாராட்டு விழாவாக தான் நடந்தது. அதில் எனக்கு மலர்க்கிரீடம் சூட்டி, ‘அ.தி.மு.க.,வின் துணிச்சல் மிக்க சிப்பாய்’ என பாராட்டினார் ஜெயலலிதா.

* எம்.ஜி.ஆர்., ஆசைப்பட்டது போன்று, 2011 சென்னை மேயர் தேர்தலில், என்னை வேட்பாளராக்கினார் ஜெயலலிதா. 5.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நான், நேர்மையான நிர்வாகத்தை கொடுத்தேன்.

* சைதாப்பேட்டையில் நான் நடத்தி வந்த மலிவு விலை உணவகத்தை, ‘அம்மா உணவகம்’ என, மாநகராட்சியில் செயல்படுத்த, ஜெயலலிதா அனுமதி கொடுத்தார்.

தமிழகம் முழுதும் அதை செயல்படுத்தும் ஆலோசனையை ஏற்றார். ‘அம்மா உணவகம் தான், 2016 தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது’ என்றார்.

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்து, அவரும் நிறைவேற்றினார்.

சென்னை பல்கலையில் 25 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்., பெயரில் ஆய்வு இருக்கை அமைத்ததுடன், கேரளா, வடவனுார் கிராமத்தில், அவரின் பூர்வீக இல்லத்தை புதுப்பித்துள்ளேன்.

* கோயம்பேடு பஸ் நிலையம், மவுன்ட் – பூந்தமல்லி சாலைக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட, பழனிசாமி – பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்து, பெயர் மாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தேன்.

அ.தி.மு.க.,வின் 50 ஆண்டு கால வரலாற்றில், என்னுடைய ஒரு சில பங்களிப்புகளை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

-சைதை சா.துரைசாமி, சென்னை பெருநகர முன்னாள் மேயர்.

Comments (0)
Add Comment