சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியுமான திருமதி ஜானகி ராமச்சந்திரன் 1950 களில் வாங்கினார்.
சுமார் 10 கிரவுண்டு பரப்பளவுள்ள அந்த இடம் அப்போது தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1962-ல் சென்னை ராமாபுரம் இல்லத்திற்கு எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் குடியேறிய பிறகு அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அந்த இடம் நடிகர் சங்கம், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் ஒரு பத்திரிகையின் அலுவலகமாகவும் செயல்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலைக்கு மாற்றப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அந்த நிலமும் கட்டடமும், தனது கணவரின் கட்சியான அதிமுகவின் அலுவலகமாக பயன்படுத்துவதற்கு, 1987 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 29 ம் தேதி தானமாக வழங்கினார் ஜானகி அம்மையார்.
ஜானகி அம்மாவின் இந்தத் தியாகத்தை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்துள்ளார் வழக்கறிஞரான முனைவர் திரு. குமார் ராஜேந்திரன்.
ஜானகி அம்மையாரின் சகோதரர் பி.நாராயணனின் பேரனான திரு.குமார் ராஜேந்திரன், ‘ஜானகி எம்.ஜி.ஆர்: நாடாண்ட முதல் நாயகி’ என்ற தனது நூலில் இதைப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்.
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அ.தி.மு.க துவங்கப்பட்ட பிறகு, அந்த இடம் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்த எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு முதல் இந்தச் சொத்து அதிமுக தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறும் திரு.குமார் ராஜேந்திரன், தனது தாத்தா மணி என்கிற பி.நாராயணன் இந்த இடத்தை திருமண மண்டபமாகப் பயன்படுத்தியதாகவும், அதற்கு எம்ஜிஆரின் தாயார் சத்யாபாமாவின் பெயர் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்.
1984 இல், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே, அதிமுக தலைமையகத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார், தற்போது அதிமுக வழிநடத்தல் குழு உறுப்பினராகவும், இரண்டு முறை வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஜே.சி.டி. பிரபாகர். தற்போது அண்மையில் அந்தக் கோரிக்கையை மீண்டும் அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
– டி.ராமகிருஷ்ணன்.
நன்றி : ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்.