– பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப் படகுகளில் கடந்த 11-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள், 13-ம் தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கொரோனா பரிசோதனைக்குப் பிறகு மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கடந்த அக்.11-ம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-ம் தேதி பாரம்பரிய மீன்பிடித்தளமாக உள்ள பருத்தித்துறை அருகில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.
அவர்களை காரைநகர் கடற்படைத்தளத்துக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு நிரந்தரமாக தீர்க்க உறுதியான வழிமுறைகளை காண வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் உறுதியான, தீர்க்கமான முறையில் எடுத்துச் செல்ல இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தாங்கள் உரிய வழிமுறைகளை கையாண்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகனுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,
“தமிழக மீனவர்கள் 23 பேரையும், இரண்டு படகுகளையும் பாதுகாப்பாக சரியான நேரத்தில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீனவர்களின் உறவினர்களை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சந்தித்து ஆறுதல் கூறினார்.