வெற்றியுடன் விடை பெறுவாரா தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி நாள். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கி, கொரோனாவால் தடைபட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்த ஐபிஎல் போட்டி இன்று நிறைவடைகிறது.

மிக நீண்ட காலம் நடந்த இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சூப்பர் ஆண்டு எனச் சொல்லலாம். கடந்த ஐபிஎல் போட்டியில் முதல் அணியாக வெளியேறி அவமானப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டில் அதற்கெல்லாம் சேர்த்து சிறப்பாக ஆடியது.

முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், அதே வேகத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னை அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனிக்கு ஐபிஎல்லில் இதுதான் கடைசி ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் சென்னையில்தான் எனது ஓய்வை அறிவிப்பேன் என்றவர், அடுத்த நாளிலேயே 2022-ஐபிஎல்லில் நான் சென்னை ஜெர்சியில் இருப்பேன். ஆனால் ஆடுவேனா என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.

அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 3 வீரர்களைத்தான் தக்கவைக்க முடியும்.

இந்தச் சூழலில் தோனியைத் தக்கவைத்தாலும் அவரால் ஒரு ஆண்டுக்கு மேல் ஆட முடியாது.

இத்தகைய சூழலில் தோனியை வீரர் என்ற முறையில் இருந்து மாற்றி, ‘மென்டார்’ என்ற பொறுப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அமர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் அடுத்த ஐபிஎல்லில் தோனி ஆடாவிட்டால், தானும் ஆடப்போவது இல்லை என்று சுரேஷ் ரெய்னாவும் சொல்லியிருக்கிறார். இப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘தல – தளபதி’யான இருவரும் இந்த தொடர்தான் தங்களின் கடைசித் தொடர் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு சிறப்பான முறையில் வழியனுப்பும் வகையில் கோப்பை வெல்லும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே அதன் தொடக்க ஆட்டக்காரர்கள்தான். ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெஸ்ஸி ஆகிய 2 தொடக்க ஆட்டக்காரர்களும் இந்த தொடரின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறார்கள்.

இன்றைய தினம் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் சிறப்பாக ஆடினாலே சென்னை அணி 150 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும்.

சென்னை அணியின் நடுவரிசை பேட்டிங்தான் சற்று பலவீனமாக இருந்தது.

இந்தச் சூழலில் கடந்த ஆட்டத்தில் உத்தப்பா, தோனி ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தது அந்தக் குறையை தீர்ப்பதுபோல் அமைந்துள்ளது.

அவர்களுக்கு உதவியாக மொயின் அலி, ஜடேஜா ஆகியோரும் பேட்டிங் செய்தால், சென்னையின் வெற்றியைத் தடுக்க முடியாது.

அதேநேரத்தில் பேட்டிங்கில் வலுவாக உள்ள சென்னை அணி, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் பலவீனமாக இருப்பது ஒரு பெரிய குறைதான்.

7 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலமாக சுழற்பந்து வீச்சு உள்ளது.

சுனில் நாராயண், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் கடந்த 2 போட்டிகளாக எதிர் அணிகளை மிரட்டி வருகிறார்கள்.

இதே மிரட்டல் இன்றும் தொடர வேண்டும் என்பதே கொல்கத்தா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் சுழற்பந்து வீச்சில் உள்ள வேகம், அவர்களின் பேட்டிங்கில் இல்லை.

வெங்கடேஷ் ஐயர், கில் ஆகிய 2 தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

கடந்த 2 ஆட்டங்களிலும் எதிரணியை 140 ரன்களுக்குள் சுருட்டியும், கடுமையாக போராடித்தான் அவர்கள் வென்றுள்ளனர் என்பதே இதற்கு சான்று.

எனவே தொடக்க ஆட்டக்காரர்களை எளிதில் அவுட் ஆக்கினால் சென்னை வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

தனது கடைசி ஐபிஎல் போட்டியில் தோனி வெற்றியுடன் திரும்புவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

-பிரேமா நம்பியார்

Chennai Super KingsCSKCSK VS KKRIPL 2021 FinalKKRKolkata Knight RidersM.S.dhoniRuturaj Gaikwadஇந்தியாஐபிஎல்கிரிக்கெட்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்தோனி
Comments (0)
Add Comment