அதிமுக இணைப்பு: பெருந்தன்மை காட்டிய ஜானகி எம்ஜிஆர்!

அ.தி.மு.க பொன்விழா காணும் நேரத்தில் கழகத்தைத் துவக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை அனைவரும் வணக்கத்துடன் நினைவுகூர்கிறார்கள். பெருமை கொள்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டிய முக்கியமான இன்னொரு தலைவர் புரட்சித் தலைவரின் மனைவியான திருமதி.ஜானகி அம்மையார்.

அ.தி.மு.க முன்பு இரு அணிகளாகப் பிரிந்திருந்த போது, இணைந்து மீண்டும் பலப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியதோடு, இணைப்பில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் பெருந்தன்மை காட்டியவர் மக்கள் திலகத்தின் மனைவியான திருமதி ஜானகி எம்.ஜி.ஆர்.

அன்றைய அ.தி.மு.க தொண்டர்கள் இந்த நிகழ்வின் பின்னணியை நினைவு வைத்திருக்கக்கூடும். இருந்தாலும், அ.தி.மு.க.வின் முக்கியப் பலமான அதன் தொண்டர்களின் கவனத்திற்கு மீண்டும் அந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறோம்.

*

‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியரும், திருமதி சசிகலாவின் கணவருமான ம.நடராசன் முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் திருமதி.ஜானகி அம்மாளைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியான திருமதி.ஜானகி அம்மா எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, அவரை எப்படிக் கவனித்துக் கொண்டார் என்பதை நாங்கள் அறிவோம். தன்னைவிட, எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அவர்.

மக்கள் திலகம் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரியும் சூழ்நிலை உருவானது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க நாங்கள் முயற்சித்தோம். இரட்டை இலைச் சின்னம் அப்போது முடக்கப்பட்டிருந்தது.

ஜானகி அம்மாளிடம் நானும் பேசினேன்; என் மனைவி உட்பட வேறு சிலரும் முயற்சி எடுத்தார்கள்.

அரசியல் விருப்பம் இயல்பில் இல்லாத ஜானகி அம்மாள் இணைக்கும் விருப்பத்திற்கு உடன்பட்டதோடு, எந்த நிபந்தனையையுமே விதிக்காமல் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தார்.

இவ்வளவுக்கும் ஜெயலலிதா ஜானகி அம்மாளை அ.தி.மு.க தலைவராக இருக்கட்டும், தான் பொதுச்செயலாளராக இருக்கிறேன் என்று சொல்லியும் கட்சிப்பதவி எதுவும் தேவையில்லை என்று சொன்ன பெருந்தன்மை கொண்டவர் ஜானகி அம்மாள்.

அவருடைய அணியில் இருந்து தங்களுடன் இணைந்தவர்களிடம் பிறகு பாகுபாடு காட்டவில்லை ஜெயலலிதா.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஜானகி அணியில் இருந்தவரான ஓ.பன்னீர்ச்செல்வத்தை பிறகு தமிழக முதலமைச்சர் ஆக்கியது தான்”.

இதே விதமான கருத்தை ஜானகி அம்மாளை ஆதரித்தவரான பத்திரிகை ஆசிரியரான சோ- அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிரிந்தபோது திருமதி.ஜானகி அம்மாளை ஆதரித்து எழுதியவர்.

பிறகு இரு அணிகளையும் ஒன்றாக்கும் முயற்சி நடந்தபோதும், அதற்கான வேலைகளை முன்னின்று செய்தவர்.

“அப்போது அடிக்கடி ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று ஜானகி அம்மாவைச் சந்தித்திருக்கிறேன். மனம்விட்டுப் பேசும் இயல்பு கொண்ட அவரைச் சந்திக்கும் போது, பேச்சில் எந்தப் போலித்தனமும் இல்லாமல் இருக்கும். அகம்பாவத்தைப் பார்க்க முடியாது.

அவர் நினைத்திருந்தால், அ.தி.மு.க இணைப்பின் போது தனக்கோ, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ முக்கியப் பொறுப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவர் கேட்டால் கொடுக்கிற நிலையில் தான் அன்று இருந்தார் ஜெயலலிதா.

இணைப்புக்கான பேச்சுக்காக சில தடவைகள் அவரைச் சந்தித்தபோது ஒருமுறை கூட, அம்மாதிரியான சிறு ஆசையைக் கூட அவர் வெளிப்படுத்தவில்லை.

எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இயக்கம் எந்தச் சிக்கலும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பது மட்டுமே அவருடைய எளிய விருப்பமாக இருந்தது.

இவ்வளவுக்கும் எந்த விதத்திலும் அவர் தகுதி குறைந்தவர் கிடையாது; பல மொழிகளைக் கற்றிருந்தார். அரசியல் நுணுக்கங்களை உணர்ந்தவர்.

ஆனால் அரசியலுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளாதவர் என்று தான் அவரைப்  பற்றிச் சொல்ல முடியும்”  என்று ஒசாமஅசா தொடரில் எழுதியிருந்தார் சோ.

அ.தி.மு.க தலைமைக்கழகம் இயங்கும் சென்னை ராயப்பேட்டை அலுவலகம் இயங்கத் தனக்குச் சொந்தமான இடத்தைக் கொடுத்து, அ.தி.மு.க என்கிற இயக்கத்தை மீண்டும் ஒன்று சேர்த்து ஜானகி அம்மையார் அவ்வளவு ஈடுபாடு காட்டக் காரணம் – அ.தி.மு.க.வை உருவாக்கியவர் மக்கள் திலகம் என்பதால் தான்.

கழகத் தொண்டர்களின் உணர்வைப் பிரதிபலித்தவர் அவர்.

  • முனைவர் குமார் ராஜேந்திரன்

*

Comments (0)
Add Comment