ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு கனமழை!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 10-ம் தேதியே உருவாகும் என கூறப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகியுள்ளது . வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா – ஒடிசா நோக்கி செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,சேலம், ஈரோடு ,திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,

வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment