சிரஞ்சீவி அறிமுகமான தமிழ்ப் படம்!

தமிழில் பல நாவல்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அப்படி உருவான அனைத்துமே
ஹிட்டாகி இருக்கிறதா என்றால், இல்லைதான்.

அதிகமான படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்றாலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் ’47 நாட்கள்’.

47 நாட்கள் என்ற பெயரில் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நாவலை படமாக்க முன் வந்தார்
இயக்குநர் கே.பாலசந்தர்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் அந்தக் காலக்கட்டத்து இளைஞர்கள், தமிழ்நாட்டில் திருமணம் செய்துகொண்டு பெண்களை ஏமாற்றும் செய்திகள் அப்போது பத்திரிகைகளில் அதிகமாக வெளிவந்தன.

அந்தச் செய்திகளை வைத்து சிவசங்கரி எழுதிய நாவல்தான் 47 நாட்கள்.

தமிழ் மட்டுமே தெரிந்த, ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரியாத இளம் பெண்ணான வைஷாலி, கணவன், குமாரால் கொடுமையை அனுபவிக்கிறார்.

வெளிநாட்டில் அவனுக்கு இன்னொரு திருமணம் முடிந்து மனைவியும் இருக்கிறாள்.

அவளை தோழி என்று இவளிடம் சமாளிக்கிறான். அவளிடம் இவள் சகோதரி என்று பொய் சொல்கிறான்.

ஒரு கட்டத்தில் இது வைஷாலிக்கு தெரியவர, அதை ஏற்க முடியாமல் தவிக்கிறாள். அவனை வெறுக்கிறாள்.

ஆனால் அவனிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. பிறகு எப்படி தப்பி ஊருக்கு வருகிறாள், அவள் நிலைமை என்னவாகிறது என்பது படம்.

அவளுடையை கதையை பிளாஷ்பேக் உத்தியில் சொல்லியிருப்பார் பாலசந்தார். இதுபோன்ற பெண்ணிய கதைகளைக் கொண்ட படங்கள் கே.பாலசந்தருக்கு விருப்பமான சப்ஜெக்ட் என்பதால், இதை படமாக்க நினைத்தார்.

நாவலின் தலைப்பையே படத்துக்கும் வைத்தார். 47 நாட்களில் வைஷாலியின் திருமண
வாழ்க்கை முடிந்துபோவதுதான் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்தார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் சிரஞ்சீவியை ஹீரோவாக்கினார் கே.பி. நெகட்டிவ் ஷேட் கொண்ட
கேரக்டர்தான்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது இந்தப் படம். ஜெயப்பிரதா
ஹீரோயின். சரத்பாபு, ரமாபிரபா, பிரமிளா, சரிதா உட்பட பலர் நடித்தனர். சரிதா நடிகையாக,
கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

1981-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு லோக்நாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்தது.

படம் நன்றாக அமைந்தாலும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இது கே.பி, சிவசங்கரி, சிரஞ்சீவி ஆகியோருக்கு ஏமாற்றம்தான்.

இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமான சிரஞ்சிவி, இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பிறகு சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க ’ருத்ரவீணா’ என்ற
படத்தை தெலுங்கில் இயக்கினார் கே.பாலசந்தர்.

இந்தப் படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. சிறந்த ஒருமைப்பாட்டுக்கான தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றது.

இந்தப் படத்தைதான் தமிழில், கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க ’உன்னால் முடியும் தம்பி’ என்ற பெயரில் உருவாக்கினார் கே.பி!

-அலாவுதீன்

Comments (0)
Add Comment