காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
மொத்தம் 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,901 ஊராட்சித் தலைவர், 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பல பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில், 41 ஆயிரத்து 500 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பில் 74 வாக்கு எண்ணும் மையங்களில், அவை வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 74 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் 6,228 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சியின் முதற்கட்ட தேர்தலில் 77.43% வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 78.47% வாக்குகளும் பதிவாகின.
வாக்குச் சீட்டுக்கள் வாயிலாக தேர்தல் நடந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் தெரிய அதிக நேரம் தேவைப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.