டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!

ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும்.

அதனை விட மிக உயர்வாகப் படத்தின் உள்ளடக்கம் அமைந்தாலோ அல்லது எந்த சம்பந்தமும் இல்லாமல் புதிதாக இருந்தாலோ வெற்றி வசப்படும்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கியிருக்கும் ‘டாக்டர்’ நம் மனச்சித்திரங்களை உடைத்து ‘கொஞ்சம் புதுசா இருக்குல்ல’ என்ற எண்ணவோட்டத்தை ஏற்படுத்துகிறது.

சிரிக்கத் தெரியாத டாக்டர்!

காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க, சம்பந்தப்பட்ட குடும்பத்தோடு சேர்ந்து நாயகன் பயணிப்பதுதான் ‘டாக்டர்’ கதைக்கரு.

ராணுவத்தில் பணியாற்றும் டாக்டர் வருண் (சிவகார்த்திகேயன்) எந்தவொரு விஷயத்தையும் தர்க்க ரீதியாக அணுகுபவர்.

ராணுவ அதிகாரி உயிர் பிழைக்கும் வாய்ப்பில்லை என்றறிந்ததும், பிடிபட்ட பயங்கரவாதியைக் காப்பாற்றி அவரிடம் இருந்து கிடைக்கும் உண்மைகள் பயன் தருவதாக இருக்குமென்று நம்புபவர்.

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அறிவுப்பூர்வமாக யோசிப்பவருடன் எப்படி வாழ்வது என்ற யோசனையில், திருமண ஏற்பாடுகளை நிறுத்துகிறார் வருணுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான பத்மினி (பிரியங்கா).

பெண் வீட்டாருடன் சமாதானம் பேசுவதற்காகப் பெற்றோரை அழைத்துச் செல்கிறார் வருண்.

அந்த நேரத்தில், பத்மினியின் அண்ணன் மகள் சின்னு (ஸாரா வினீத்) கடத்தப்படுகிறார். அவரைக் கடத்தியவர்கள் யார், எதற்காகக் கடத்தினார்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியாத நிலையில், சின்னுவை மீட்பதற்காகக் களத்தில் குதிக்கிறார் வருண்.

பத்மினியின் தந்தை (இளவரசன்), சகோதரர் நவ்நீத் (அருண் அலெக்சாண்டர்), நவ்நீத்தின் மனைவி சுமதி (விஜே அர்ச்சனா), அவர்களது வீட்டில் பணியாற்றும் ப்ரீத்தி (தீபா), இவர்களுடன் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் பணியாற்றும் பகத் (ரெடின் கிங்ஸ்லி) மற்றும் குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் பிரதாப் (யோகிபாபு) ஆகியோரை துணைக்கு வைத்துக் கொள்கிறார் வருண்.

கிட்டத்தட்ட சின்னு கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை துளிர்க்கும் சூழலில், கடத்தப்பட்ட மற்ற குழந்தைகளையும் காப்பாற்றத் துடிக்கிறார் வருண்.

வருணின் நோக்கம் எப்படிப்பட்டது, அவரது முயற்சிக்கு பத்மினி குடும்பத்தினர் உதவினார்களா, சின்னு கிடைத்தாரா என்பது உட்பட ரசிகர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு கிச்சுகிச்சு மூட்டியவாறே பதிலளித்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

படம் முழுக்கவே எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் வெளிப்படுத்தாமல், கிட்டத்தட்ட ஒரு ரோபோ போல வருகிறார் சிவகார்த்திகேயன். ஆனால், அதனை நினைத்து ரசிகர்கள் எரிச்சலடையாத வகையில் ஒரு கும்பலே அடுத்தடுத்து சிரிப்பு மூட்டியிருப்பது சிறப்பு.

காப்பாற்றிய கலைஞர்கள்!

’ஸ்டேண்ட் அப்’ காமெடியில் தன் கலை வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், நொடிக்கு ஒருமுறை அங்குமிங்கும் அசைந்து கொண்டும் கை கால்களை அசைத்துக்கொண்டும் பேசும் வழக்கத்தைக் கொண்டவர்.

சின்னத்திரையில் அவர் தோன்றிய விதமும், கிண்டல்களால் கட்டப்பட்ட அவரது பேச்சும்தான் பக்கபலம். அதுவே, அவர் திரையில் புகழ் பெறவும் காரணமாக அமைந்தது.

’டாக்டர்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ப்ளஸ் பாயிண்ட்களுக்கு தடை போட்டுவிட்டு, முழுக்க சீரியசாக காட்டியிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

அவரது தைரியத்திற்கும், அதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதற்கும் மாபெரும் சல்யூட். ‘கிளைமேக்ஸ்’ சண்டைக் காட்சிக்கு முன்பாக படகில் தனியாக சிவகார்த்திகேயன் வரும் ஷாட், இந்த உத்தி பெரிய அளவில் ‘வொர்க் அவுட்’ ஆகியிருப்பதைக் காட்டுகிறது.

பத்மினியாக வந்துபோகும் நாயகி பிரியங்கா அருள்மோகனுக்குத் திரையில் பெரிதாக இடமில்லை. தொடக்கத்திலும் இறுதியிலும் இரண்டு பாடல்களில் வந்தது போக, கிளைமேக்ஸில் சீரியசாக காதல் வசனம் பேசி சிரிக்க வைக்கிறார்.

இடையே வெளியான சில படங்களில் கடுப்பேற்றிய யோகிபாபு, அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இதில் ‘ஜமாய்’க்கிறார்.

பிரியங்காவிடம் ‘முடியெல்லாம் கட் பண்ண இப்ப டைம் இல்லம்மா’ என்று சொல்லும்போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா இருவரும் முழுக்க சீரியசாக வந்தாலும், மிகச்சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்.

இளவரசு, தீபா இருவரும் அந்த வேலையை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வில்லன் டெர்ரியாக வரும் ’உன்னாலே உன்னாலே’ வினய், மீண்டும் தெலுங்கு, மலையாளம், தமிழ் என ஒரு ‘ரவுண்ட்’ வரும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்.

அவரது தந்தையாக வரும் நடிகரும் கூட இரண்டொரு ஷாட்களில் அட்டகாசம் செய்திருக்கிறார்.

அடியாட்களாக வரும் ரகுராம் மற்றும் ராஜிவ் லட்சுமணனின் தோற்றம் ’அக்மார்க்’ காமிக்ஸ் ரகம். காமெடி ரவுடிகளாக சுனில் ரெட்டியும் சிவாவும் பின்பாதியில் காப்பாற்றியிருக்கின்றனர்.

கப்பார் ஆக நடித்தவரும் அவரது அடியாளாக வரும் ஜோன் சர்ரோவும் இடம்பெற்ற காட்சிகளில் தியேட்டரில் மக்கள் வெடிச்சிரிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

இவர்கள் அனைவரையும் மீறி, தான் தோன்றும்போதெல்லாம் சிரிப்பை உண்டாக்குகிறார் ரெடின் கிங்ஸ்லி.

படத்தின் வசனங்களும் சரி, காட்சிகள் படமாக்கப்பட்டவிதமும் சரி, நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட அக்கறையுடன் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையைச் செறிவாக்கியிருக்கிறது.

கொஞ்சம் பிசகினாலும் ‘மொக்கை’ என்று சொல்லிவிடக்கூடிய திரைக்கதை ட்ரீட்மெண்டை இயக்குனர் தைரியமாகக் கையாண்டிருப்பதற்குக் காரணம் இதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்கள் மட்டுமே.

இன்னொரு மிஷ்கின்!

’சித்திரம் பேசுதடி’ படத்திற்குப் பிறகு ‘அஞ்சாதே’ படத்தை மிஷ்கின் தந்தபோது, அவர் கொரிய, ஜப்பானிய படங்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. அதையும் மீறி, தொடர்ச்சியாகப் படங்களைத் தந்தது அவருக்கான தனிப்பாணியை உருவாக்கியது.

அந்த வகையில் லத்தீன் அமெரிக்க படங்களின் சாயல் கொண்ட திரைமொழியுடன் வித்தியாசமான ஆக்‌ஷன் கதையொன்றைத் தந்திருக்கிறார் நெல்சன்.

’ஓ பேபி..’ மற்றும் ‘செல்லம்மா’ பாடல்களுக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை என்றாலும், திரைக்கதையில் அவற்றுக்குத் தந்துள்ள இடம் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

ஒரு காட்சி ஒரு உணர்வை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்ற விதிக்கு மாறாக, கலவையான உணர்வுகளைக் காட்சிகளில் நிறைத்திருப்பதும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பதும் அட்டகாசம்.

குறிப்பாக மெட்ரோ ரயில் சண்டைக்காட்சியும், வில்லன் கும்பலிடம் ஒட்டுமொத்தமாகப் பிடிபட்டபிறகு நிகழும் உரையாடலும் ‘டாக்டரி’ன் ஹைலைட்!

குழந்தை கடத்தல் எனும் மிக சீரியசான விஷயத்தை காமெடியாக கையாண்டிருப்பதும், கப்பார் பாத்திரத்திற்கு பெண் வேடமிடும் காட்சியும், சில தரப்பில் இருந்து எதிர்ப்புகளை உண்டு பண்ணலாம்.

அதேபோல, கப்பார் கையில் சிவகார்த்திகேயன் கத்தி வைக்கும் ஷாட்களையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

குழந்தை கடத்தப்பட்ட இடத்தில் இருந்த செல்போன் சிக்னல் மூலம் ஏற்கனவே இது போன்ற விவகாரங்களில் சிக்கிய 3 பேரை சிவகார்த்திகேயன் கடத்துவதாகக் காட்டுவதில் இருந்து, கடத்தல் கும்பலின் தலைவனாக வரும் வினய் தனது ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வது வரை லாஜிக் ஓட்டைகள் நிறைய உண்டு.

திரைக்கதை நகரும் விதமும் நகைச்சுவை வசனங்களும் அப்படியொரு யோசனையை நோக்கி நம்மைத் தள்ளுவதில்லை.

போலவே, வருண் பாத்திரம் ஏன் முகத்திலிருக்கும் தசைகளுக்கு வேலை கொடுக்காமல் எந்திரம் போல இருக்க வேண்டுமென்பதற்கும் விளக்கம் ஏதுமில்லை.

சிவகார்த்திகேயனின் இருப்பு மட்டுமே அதனைக் காணாமல் போகச் செய்திருக்கிறது.

’டாக்டர்’ வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலோ அல்லது டப்பிங் செய்யப்பட்டாலோ கிடைக்கும் வெற்றி இவ்வுண்மையைச் சொல்லிவிடும்.

இதையெல்லாம் மீறி, படம் முழுக்க சிரிக்க வைத்திருப்பது சிறப்பு. தியேட்டரை விட்டு கிளம்பும்போது ‘பீல்குட்’ உணர்வு ஏற்பட, ‘செல்லம்மா’ பாடலை போனஸாக தந்திருப்பது ஆகச்சிறப்பு.

இதற்குப் பின்னால் இருக்கும் படக்குழுவினரின் உழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் ஹேட்ஸ் ஆஃப்..

  • பா.உதய்
Comments (0)
Add Comment