நிறைவேறிய சுப்பிரமணிய சிவாவின் கனவு!

தற்போது பாரத ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிற ‘பாப்பாரப்பட்டி ஆசிரமம்’ பற்றி முன்பு வந்த கட்டுரை.

சதுர வடிவில் மேடை. நடுவில் சுட்டுவிரல் போல வானம் நோக்கிய வெள்ளைக் கல்தூண். அடியில் கல்வெட்டு. சுற்றிலும் பசுமையான மரங்களின் அடத்தியுடனிருக்கிறது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பாரத ஆசிரமமாக இருந்த இடம்.

தர்மபுரியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலிருக்கிற பாப்பாரப் பட்டியில் உள்ள இந்த ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் சுப்பிரமணிய சிவா.

பச்சை மண்டிக் கிடக்கிற இடங்களில் உறைபனியாய உறைந்திருக்கிறது, கொழுந்து விட்டெறிந்த சுதந்திர வேட்கை.

சுப்பிரமணியன்.

இதுதான் சிவாவின் இயற்பெயர். பிறந்தது மதுரை அருகில் உள்ள வத்தலக்குண்டில். திருவனந்தபுரத்திலும், கோவையிலும் படித்த சிவாவுக்கு உள்ளிருந்த ஏதோ ஒரு வேகம் நிறுவன அமைப்பின் வரம்புக்குள் இருக்க விடவில்லை.

சிவகாசி போலீஸ் சூப்பிரெண்டெண்ட் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையின் இறுக்கம் உடனடியாகப் பிடிக்காமல் போனது. ஒரே நாளில் வேலையை விட்டுவிட்டார். நேரே திருவனந்தபுரம் போனார். குஸ்தி, சிலம்பம் பழகினார். உடல் உறுதியாயிற்று. சுவாமிகள் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பின் ‘சிவா’ பெயருடன் இணைந்தது.

திலகரின் பிரச்சாரங்கள் மனசை விழிக்க வைத்தன. தூத்துக்குடியிலிருந்த வ.உ.சி.யுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் தங்கினார். பாரதியைச் சந்தித்ததும் “என் வீர சிவாஜியே’ என்று சிவாவைக் கட்டித் தழுவினார் பாரதி. இருவருக்குள்ளும் நெருக்கம் கூடியது.

அப்போது சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முக்கியமான சில தீர்மானங்களை இயற்றியிருந்தார் லோகமான்ய திலகர். அதைச் செயல்படுத்த பாரதி, வ.உ.சி.யுடன் சேர்ந்து உழைத்தார் சிவா.

சுயராஜ்யம் அடைய பிரச்சாரம் துவங்கியது. அதற்காகத் தனியாகத் தொண்டர் படை உருவானது. பயிற்சி கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்த கோரல் காட்டன் மில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்து வேலை செய்தார்கள் வ.உ.சி.யும், சிவாவும். அந்த ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. நிதிமன்றத்திலேயே “சுயராஜ்யம் எங்களுடைய பிறப்புரிமை. அதை அடைந்தே
தீருவோம்” என்கிற கோஷங்கள் முழங்கின.

உடனே வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக சிவாவையும், வ.உ.சி.யையும் கைது செய்தார்கள். உடனே கடும் கலவரம் வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியது. நான்கு பேர் பலியானார்கள்

சுப்பிரமணிய சிவாவுக்குப் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. திருச்சி சிறையில் கம்பளி மயிர் வெட்டும் வேலை கொடுக்கப்பட்டது. சிறையிலேயே அவருக்குப் பெருநோயின் பாதிப்பு வந்துவிட்டது. அதனால் அவர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு
1912இல் விடுதலையானார்.

மனைவி மீனாட்சியுடன் சென்னை மயிலாப்பூரில் தங்கியிருந்த அவர் ஆசிரியராக இருந்து நடத்திய மாதப் பத்திரிகை ‘ஞானபானு.’ அதில் பாரதியின் பல முக்கியமான படைப்புகள் வெளிவந்தன.

இதையடுத்து, ‘பிரபஞ்சமித்திரன்’ பத்திரிகையையும் துவக்கிய இவருக்கு நோய் முற்றியது. அதற்குள் இவருடைய மனைவியும் க்ஷயரோகத்தால் காலமானார்.

அதன் பிறகு நீண்ட தாடியுடன் ஒரு சந்நியாசியைப் போன்ற தோற்றத்துடன் வளைய வந்த அவரைக் குஷ்ட வியாதி படாதபாடு படுத்தியது.

அதோடு அவருடைய செயல்பாடுகளுக்காக அவர் மீது ராஜதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.

“ஒன்றையும் கேட்காதே; கைமாறாக ஒன்றையும் விரும்பாதே; நீ கொடுக்க வேண்டியதைக் கொடு;
அது உன்னிடத்தில் திரும்பிவிடும்” என்பதை அடிக்கடி வலியுறுத்திய சிவா, ‘என் மதம் பாரதியம்’ என்று மத எல்லையைத் தாண்டி முழங்கியவர்.

அதற்கான எழுச்சியுடன் பாரத ஆசிரமங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தர்மபுரி அருகிலுள்ள பாப்பாரப்பட்டியில் ‘பாரத ஆசிரமம்’ ஒன்றை உருவாக்கப் பாடுபட்டபோது அதற்கு அடிக்கல் நாட்டியவர் சித்தரஞ்சன் தாஸ்.

சுதேசிய உணர்வைத் தூண்டுவதே நோக்கமாகக் கொண்டு அந்த ஆசிரமம் செயல்பட வேண்டும் என்பது அவரது கனவு. அதற்குள் நோய் முற்றியது.

அதோடு மாட்டுவண்டியில் பயணம் செய்வதைக்கூடத் தடை செய்தது ஆங்கிலேய அரசு.
அதையும் மீறிப் பிரச்சாரம் செய்தார். அப்போது கான்பூரில் நடந்த அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்துகொள்கிற முடிவோடு இருந்தார்.

அவரது அந்திமக் காலத்தில் மதுரையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது சிவாஜி, தேசிங்கு நாடகங்களை நடித்துக் காண்பித்தார். சிவாஜி நாடகத்தில் சமர்த்த ராமதாஸராக அவரே
உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் நடித்தார்.

தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த அவர் பாப்பாரப்பட்டியில் உள்ள
ஆசிரமத்தில் தன்னுயிர் பிரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

சரியாக நடக்க முடியாமலிருந்த அவரைக் ‘குண்டுக்கட்டாக’ ரயிலில் ஏற்றினார்கள். திருவானைக்காவல் வழியாக தர்மபுரி வந்த சில நாட்களில் அவர் உருவாக்கிய பாரத ஆசிரமத்தில் பிரிந்தது அவரது உயிர். அங்கே உள்ள நந்தவனத்திலேயே அவர் அடக்கம் செய்யப்
பட்டார்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மினுங்குகின்றன பழுப்பேறிய கல்வெட்டு வாசகங்கள்:
“நமது நாட்டில் உள்ளது கறுப்பு, வெள்ளை என்கிற இரு ஜாதியே..”

தேசியம் துளிர்க்கிற இடமாக உருமாற வேண்டுமென்று சுப்பிரமணிய சிவா எதிர்பார்த்து உருவாக்கிய பாரத ஆசிரமத்தில் ஒரு கட்டிடம் அரைகுறையாய் எழும்ப முயன்று அப்படியே கிடக்கிறது. சிவா கண்ட கனவில் மிஞ்சியவை இவை மட்டும்தான்.

– ‘மணா’வின் ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து – 2005

Comments (0)
Add Comment