நினைவை வீசும் சந்திப்பு – தொடர் -17 / நக்கீரன் கோபால்
எழுத்து – அமிர்தம் சூர்யா
இங்கு யாரும் சுயம்பு இல்லை. ஒருவர் வெளிப்படுவதற்கும் ஒருவர் பிரபலமாவதற்கும் ஒருவர் மீது பிரத்தியேகமாகக் கவனம் குவிவதற்கும் காலம் ஒரு காரணி கூடவே சில காரணகர்த்தாக்களும் தான்.
நான் அடிப்படையில் ஒரு கவிஞன். பின் சிறுகதையாளன். சிற்றிதழாளன். ஆனால் இன்று நானும் ஒரு வெகுஜன பத்திரிகையாளன் என்ற அறியப்பட என் தகுதி மட்டுமல்ல காரணம். இந்த அடையாளத்துக்குப் பின் 5 ஆளுமைகள் உண்டு.
ஒன்று கல்கி குழுமத்தின் இயக்குனர். அடுத்து, அந்த இயக்குநரிடம் சூர்யா என் நண்பன் என்று சிபாரிசு செய்த திருமதி. தமிழச்சி தங்க பாண்டியன்.
அடுத்து, அந்த நேரத்தில் என் சான்றிதழ்கள் ஏதும் எடுபடவில்லை. நக்கீரன் இதழின் இன்னொரு இலக்கிய வடிவமான ‘இனிய உதயம்’ என்ற இதழில் பத்து பக்கத்துக்கு என்னுடைய விரிவான பேட்டியைப் பார்த்தே பெருமையுடன் கல்கி குழுமம் உள்ளே அனுமதித்தது.
அந்தக் காலத்தில் என் பேட்டியைப் போட்ட நக்கீரன் அண்ணாச்சி கோபால். அந்த பேட்டியை எடுத்த சிறப்புச் செய்தியாளர் ஜெயந்தன். ஜெயந்தனுக்கு என்னை அறிமுகப்படுத்திய நண்பன் எழுத்தாளன், என் மாமு பாக்கியம் சங்கர்.
ஆக, ஒரு வெளிச்சத்துக்குப் பின் ஐந்து நபர்கள் செயல்பட்டுள்ளார்கள். அதனால்தான் சொன்னேன் இங்கு யாரும் சுயம்பு இல்லை என்று.
இப்போது இந்த வாரம்… என் முன்னகர்வுக்கு காரணமான நக்கீரன் கோபால் அண்ணன் பற்றி சில நினைவுகள்.
கவிஞனாக, சிறுகதையாளனாக, சிற்றிதழாளனாக இருந்தவனுக்கு இனிய உதயம் இதழில் பத்து பக்கம் பேட்டி என்பது 13 வருடத்துக்கு முன் அதிகபட்சம் தான்.
ஆழ்மனதில் எதாவது செய்யவேண்டும் என்ற பேராசை இருந்தது. ஆனால் நான் ஒரு உதவி ஆசிரியர் மட்டும் தானே. என்ன செய்து விட முடியும்?
தேர்தலை ஒட்டி கல்கியில் ஒரு சிறப்பிதழ் கொண்டுவர ஆலோசனைக் கூட்டம் நடந்த போது நான் ஒரு யோசனை சொன்னேன்.
வழக்கமாக ஒரு பத்திரிகையில் இன்னொரு பத்திரிகையாளரை முன்னிலைப்படுத்த மாட்டார்கள். நாம் வித்தியாசமாக ஒவ்வொரு வாரமும் கல்கி அட்டையில் ஒரு பத்திரிகையாளர் போட்டோ போட்டு அவர்களின் தேர்தல் கண்ணோட்டம் கட்டுரை போடலாம். வியாபாரம் கடந்த முன்மாதிரியாக இருக்கும் என்றேன். நிர்வாகம் என் ஆலோசனையை ஏற்றது.
அந்தச் சந்திப்புகளை மிகச் செம்மையாகச் செய்யச் சிறப்புச் செய்தியாளர் ப்ரியன் உறுதுணையாக இருந்தார். என் மீது ப்ரியன் மிகுந்த அன்பு கொண்டவர். தேர்தலில் கல்கி அட்டையில் நக்கீரன் கோபால் அண்ணாச்சியின் அட்டைப் படத்தைப் போட்டு அவரின் பேட்டி அச்சானது.
அந்த வாரம் அவரின் பிறந்த நாள். நான் அவருக்கு போன் செய்து “அண்ணா, கல்கி அட்டையில் உங்கள் புகைப்படம் வந்திருக்கு. சினிமா ஹீரோ போல் மின்னுகிறீர்கள். எனக்குச் சந்தோசம். இதுதான் இந்த தம்பியின் எளிய பிறந்தநாள் அன்பளிப்பு” என்றேன்.
அவர் பதிலுக்கு, ”அண்ணே இதை விடச் சிறந்த பரிசு இருக்க முடியாது” என்றார். எல்லா வகையிலும் அவர் மகா சீனியர். நான் ஒரு கற்றுக்குட்டி ஜுனியர். அவர் என்னை அண்ணே என்று அழைத்தார். அது எனக்கு ஆச்சரியம்.
நக்கீரன் கோபால் பற்றிப் பல சுவராசியமான தகவல் உண்டு. அவை முன்னேறத் துடிக்கும், சாதிக்கப் போராடும் ஒருவனுக்குச் சூத்திரம் / மூலதனம் போன்றது.
கிராமத்தை விட்டு வேலை தேடி சென்னைக்கு ஓடி வந்து.. வீட்டுக் காவலாளியாக வேலை செய்து, பின் பட்டர்பிளை ஸ்டீல் கம்பெனியில் ஸ்டீல் தட்டை சுத்தம் செய்யும் உதவியாளனாக சேர்ந்து, பின் ஓவியராகத் தாய் இதழில் நுழைந்து, பின் தராசு இதழில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றி, தராசில் மனக்கசப்பு வந்து,
அதிலிருந்து வெளியேறி, அந்த காலக் கட்டத்தில் தராசிலிருந்து வெளியே வந்த 20 பேரை இணைத்து வெறும் 4000 ரூபாயில் நக்கீரன் இதழைத் தொடங்கி, ஒரே வருடத்தில் 1,33,000 காப்பியைக் கொண்டுவந்தது சாதனை இல்லாமல் வேறென்ன?
இந்த பாராவில் நிறைய ”பின்” என்ற சொல் வரும் அதெல்லாம் அவரை ”முன்”னுக்கு கொண்டுவந்த படிநிலைகள்.
நக்கீரன் கோபால் அண்ணாச்சி பத்திரிகை தொடங்க விரும்பியபோது 20 பேர் எப்படி, எந்த நம்பிக்கையில் பின் தொடர்ந்தனர். அப்போதே 50,000 ரூபாய்க்கு விற்க வேண்டிய ‘நக்கீரன்’ என்ற பெயரை அன்பளிப்பாக க.சுப்பு, கோபால் அண்ணனிடம் எப்படித் தூக்கிக் கொடுத்தார்.
இதெல்லாம் ஒருவரின் திறன் மீதான நம்பிக்கை மட்டுமல்ல. ஒரு மனிதன் மீதான நம்பிக்கை. அதனால் இன்று கொரோனா காலத்தில் பல பத்திரிகைகள் ஊழியர்களை வெளியேற்றி விட்டு பத்திரிகைகளை மூடிவிட்டுச் செல்லும் போது இன்றும் நக்கீரன் நடைப்பயணம் போடுகிறது என்றால் அது சக ஊழியர்களை மதித்து காக்கும் மானுட அக்கறை தான்
நக்கீரன் கோபால் அண்ணன் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள 30 பக்கத்தைத் தாண்டும் அளவில் தோழி மதுமிதா எடுத்த விரிவான பேட்டி நான்காவது தூண் என்ற நூலில் உண்டு.
இரண்டு முறை தான் நான் கோபால் அண்ணனை நேரில் சந்தித்தேன் ஒன்று புலனாய்வு ஜெர்னலிசத்தில் சிறந்து விளங்கும் அண்ணன் நக்கீரன் கோபாலை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க டிடெக்டிவ் யாஸ்மின் என்னிடம் தமது விருப்பத்தைச் சொன்னார்.
நான் அண்ணனிடம் ஒப்புதல் பெற்று நேரில் சந்தித்துப் பேசியது தான் முதன் முதல் அவரை நான் நேரில் சந்தித்தது.
அதன் பின் ராசி அழகப்பன் நூல் வெளியீடு தொடர்பாய் சந்தித்தது. நூல் வெளியீட்டு விழாவில் (2018-ல்) நான் பேசிய பின் அவர் பேசினார். வேறு எந்தப் பத்திரிகை ஜாம்பவானும் பத்திரிகை முதலாளியும் அப்படி பொது மேடையில் அப்படிப் புகழமாட்டார்கள்.
என் பேச்சை, என் வாசிப்பை, உழைப்பை அவர் ”எங்க ‘கல்கி’ சூர்யா அண்ணே அசத்திட்டாரு” என்று சிலாகித்தார். (ஷ்ருதி தொலைக்காட்சி யூ டியூபில் உள்ளது)
வயது, அனுபவம், தகுதி என எல்லாவற்றிலும் பெரியவர் என்னை அன்பின் பொருட்டு அண்ணே என்பார். அன்று அவர் சொன்ன ஒரு சின்ன செய்தி எனக்கு புதுசா பட்டது.
நக்கீரன் கோபால் அண்ணாச்சிக்கு அறுபதாவது பிறந்த நாள். எல்லோரும் தொலைபேசியில் வாழ்த்து சொல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ”ஆமா, இதுக்கெல்லாம் ஒரு விழா எடுப்பார்களே, ஏன் நடத்தல? எப்போது நடத்துவீர்கள்” என்று கேட்டாராம்.
இவர் சொன்னாராம், “அட என்னங்க எனக்கு வயசு 60 தான். என் பொண்டாட்டிக்கு 45 தானே ஆச்சு. எனக்கு 60 என்பதால் என் பொண்டாட்டிய நான் ஏன் வயசானவளா காட்ட வேண்டும். அவளுக்கும் அறுபது ஆகும் போது அந்த விழா சரியா இருக்கும்”.
இப்போது யாருக்கு அறுபதாவது பிறந்த நாள் நடந்தாலும் அது அபத்தமாகவே தோன்றும் அல்லது ஆணாதிக்கமாகவே எனக்குத் தோன்றும். காரணம் அது ஆணின் வயதை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யப்படுவதால்.
அந்த நிகழ்வுக்குப் பின் தொலைப்பேசியில்தான் பேச்சு. அவர் வைத்திருந்தது ஒரு சாதாரண தொலைப்பேசி தான்.
அது குறித்துச் சொல்லும் போது, பையில் இருக்கும் சனியன் என்பார். இந்த சனியன் வந்த பின் தான் பொய் சொல்லவே ஆரம்பித்தோம் என்று சலித்துக் கொள்வார்.
அதன் பின் பெரும்பாலும் தொலைப்பேசியில் தான் பேசுவோம். ஒரு ஜாலி பேட்டியை கல்கிக்காக தொலைப்பேசியிலேயே பேசி எடுத்தேன். அவர் கொடுத்த பதில்கள் நினைவில் இல்லை. (கல்கியை விட்டு திடீரென வெளிவந்ததால் அந்த ஆவணங்களைச் சேமிக்க முடியல)
ஆனால் நான் கேட்ட கேள்விகள் இன்னும் நினைவில் இருக்கு. என் மெயிலில் பார்த்தேன். சுமார் 20 கேள்வி அவருக்கு அனுப்பி இருக்கேன். பதிலை தொலைபேசியில் கேட்டு வாங்கி கல்கியில் பதிவு செய்தேன்.
நீங்க எப்போ, யாரைப் பாத்து மெர்சலானீங்க?
எழுத்தாளர் பாலகுமாரன். இருதார மணம் தமிழர் பண்பாடு என்றதால்.
இதற்கு நீங்கள் ஆதரவாளரா எதிர்ப்பாளரா… (எதிர்த்த நிறைய நிறையத் தலைவர்களை எதிர்கொள்ள வேண்டி வரும்) அல்லது மனைவி, துணைவி எது வாழ்வுக்கு முக்கியம்?
தெய்வம் நின்று கொல்லும். தப்பு செய்து நல்லா சுகம் அனுபவித்த பின் வயசான அது நின்று கொன்னா என்ன உட்கார்ந்து கொன்னா என்ன? நீங்க என்ன சொல்கிறீர்கள்.
மூளை மாற்று அறுவையில் உங்களுக்கு யாரோட முளை பொருத்த விருப்பம்? ஏன்? (இப்போது அவர்கள் உயிரோடு இருந்தாலும் ஓ.கே)
எச்சில் / ஜொள்ளூ எது நல்லது?
பாரதிதாசன் பத்திரிகையை பெண்ணே என்று வர்ணித்தார். நீங்க எப்படி வர்ணிப்பீர்கள்? அது பொண்ணு தானா?
இதெல்லாம் நான் அவரிடம் கேட்டது தான்…
வீரப்பனை காட்டிற்குள் சென்று சந்தித்த செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம். வேறு ஒரு பத்திரிக்கையில் “நக்கீரன் அலுவலக வாட்ச்மேனுக்கு கூட வீரப்பன்போல்தான் மீசை இருக்கும். அவரை காட்டில் கொண்டு போய் புகைப்படம் எடுத்திருப்பார்கள்” என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். சக பத்திரிகையைக் கேவலமாகத் தாக்கும் இந்த மனப்போக்கும் இன்னமும் நீடிக்கிறதா?
என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்.
“தமிழ்ப் பத்திரிகைகளுக்குள் போட்டி இருக்கிறது. யார் செய்தியை முதலில் வெளியிடுகிறார்களோ அவர்களது பத்திரிகை தான் விற்கும் என்பதால், ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுகிறார்கள். போட்டி இருக்கும் இடத்தில் அது ஆரோக்கியமாக இருந்தால் தவறில்லை என்பது தான் என்னுடைய கருத்து”.
பத்திரிகைத் துறைக்கு வர விரும்புவார்களுக்கு நீங்கள் சொல்லும் வழிகாட்டுதல் என்ன? வெற்றியைக் கைப்பற்றுவது எப்படி?
“உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இந்த மூன்றின் மீது மட்டும்தான் வெற்றியின் அடித்தளம் கட்டப்படும்.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற வள்ளலார் வார்த்தையின் மீது தான் உனக்கான வெற்றிக் கோபுரம் எழுப்பப்படும்” என்றார்.
அந்த வள்ளலார் வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
பசித்திரு என்பதில் முதல் எழுத்து ப., தனித்திரு என்றசொல்லின முதலெழுத்து த., விழித்திரு என்ற சொல்லின் முதல் எழுத்து வி.
ஆக, இந்தச் சொற்களின் முதலெழுத்துகள் சேர்ந்தால் ஒருவன் பதவி அடைய முடியும் என்று அப்போது தோன்றியது.
நான் இன்னும் முயன்று கொண்டே இருப்பேன் அந்த பதவியை அடைய!
(இன்னுமின்னும் நினைவை வீசும் சந்திப்பு தொடரும்)