உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜ.க, கூட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்குள் கார்கள் புகுந்தன. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து வெடித்த வன்முறையில் இரு பா.ஜ.க தொண்டர்கள், அமைச்சரின் கார் ஓட்டுனர், உள்ளூர் செய்தியாளர் என நால்வர் கொல்லப்பட்டனர்.
கூட்டத்தில் புகுந்த ஒரு காரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்யும்படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
அவரை மாஜிஸ்திரேட் முன் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டார்.
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக சுமித் ஜெய்ஸ்வால் என்பவர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டாவது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் கலந்திருந்த சில சமூக விரோதிகள், காரில் சென்ற பா.ஜ.கவினர் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் வன்முறையை ஹிந்து – சீக்கியர்கள் இடையிலான சண்டையாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இது பொய்யான, ஒழுக்கக்கேடான செயல். இதுபோல ஏற்கனவே நடந்த சண்டையினால் உருவான காயங்கள் ஆறவே பல தலைமுறைகள் ஆனது.
அந்த புண்ணை மீண்டும் கிளறி விட கூடாது. நம் அரசியல் லாபத்துக்காக தேசிய ஒற்றுமையுடன் விளையாட கூடாது.
‘லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ரா எங்கிருந்தார்’ என, போலீசார் அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.
முதலில், துணை முதல்வர் பங்கேற்க வரும் மல்யுத்த நிகழ்ச்சி அரங்கில் இருந்ததாக கூறினார்.
வன்முறை நடந்த நேரத்தில், அவரது ‘மொபைல் போன் சிக்னல்’ அந்த இடத்தின் அருகே உள்ள ‘மொபைல் டவர்’ல் பதிவாகி இருப்பதை போலீசார் சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தன் அரிசி ஆலையில் இருந்து, அப்போது தான் புறப்பட்டதாக கூறியுள்ளார்.
இது போல பல கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.