சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு’ என்னும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.
எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு’ என்ற புத்தகத்தை, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் மற்றும் சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெளியிட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசும்போது,
“மலையகத் தமிழர்களின் வரலாறு என்பது மிகவும் பெருமை வாய்ந்தது. மலையகத் தமிழர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகள் குறித்து செல்வராஜ் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
170 ஆண்ட கால வரலாற்றின் சுருக்கம் இந்தப் புத்தகத்தில் உள்ளது. மலையக தமிழர்களின் போராட்டம், வாழ்க்கை வரலாறு அறியாத நான், மலையகத் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொண்டது தோழர் மகேந்திரன் கட்டுரையைப் படித்ததன் மூலம் தான்.
மலையகத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததில் மிக முக்கியமானவர் நடேசய்யர்.
இலங்கையில் மலையகத் தமிழர்களின் வீர வரலாற்றை விளக்கும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. மலையக தமிழர்கள் வேறு, ஈழத்தமிழர்கள் வேறு என்ற பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர்களுக்கு கூட முதலில் பாதுகாப்பு அளித்தது மலையகத் தமிழர்கள் தான்.
மலையக மக்களின் துயரம் மட்டுமல்ல தலித் மற்றும் பட்டியலின மக்களின் துயரம் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
சுப.வீரபாண்டியனைத் தொடர்ந்து பேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,
“சுபவீ கூறியது போல் நடேசய்யரின் வாழ்க்கை மற்றும் அவரது இலட்சியம், கொள்கை போன்றவை அவர்களின் வீர வரலாற்றை தெரிந்து கொள்ள நமக்கு மிகச் சிறந்த உதாரணம்.
சிறந்த பாதைகளை உருவாக்க மலையகத் தமிழர்கள் பல்வேறு தியாகங்களை செய்திருக்கின்றனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களகாரர்களால் ஆபத்து என்றால் மலையகத் தமிழர்கள் தான் முன்சென்று உதவுவர்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வனப்பகுதிகளை முறையாக பராமரிக்காமல் அழித்துக் கொண்டே வருவதால் காட்டில் இருக்கும் விலங்குகள் நகருக்குள், சாலைகளில் வருவது குறித்தும் பேசினார்.
இதுபோன்று அடித்தட்டில் வாழும் மக்களைப் பற்றிய செய்திகளை வெளிக் கொண்டு வருவது மிகவும் அவசியமானது என்றும், புத்தகத்தின் மூலம் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்காக நூலாசிரியர் எம்.எஸ்.செல்வராஜை மனதார பாராட்டுவதாகவும் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
‘வனவிலங்குகள் மோதலுக்கு யார் காரணம்’, ‘உள்நாட்டு அகதிகள்’ உள்ளிட்ட நூல்களையும் நூலாசிரியர் எம்.எஸ்.செல்வராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.