மாற்றுமுறை காண்போம்: தொடர் – 56
காந்தி கிராமம் வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி என்பது இன்றுவரை எனக்கு வேலைநாள். காந்தி கிராமத்தில் அத்தனை நிறுவனங்களும் அன்று காந்தியப் பணிகளில் ஈடுபட்டு பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகைகளில் அங்கு பணியாற்றுகின்றவர்கள் செயல்படுவார்கள்.
நான் பணி ஓய்வு பெற்ற பின்பும் அக்டோபர் 2ஆம் தேதி எங்காவது ஒரு இடத்தில எதாவது ஒரு வகையில் காந்தியப் பணியில் ஈடுபடுவது இயல்பாகிவிட்டது.
இந்த ஆண்டு பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஆனைமலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தி ஆஸ்ரம நிறுவனர் திரு.ரங்கநாதன் அவர்கள் காந்தி ஜெயந்தி விழாவில் “கிராம வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே அக்டோபர் 2ஆம் தேதி அந்த நிறுவனத்திற்குச் சென்று உரையாற்றினேன்.
அந்த நிறுவனம் நான் பார்த்த காந்திய நிறுவனங்களில் எந்தவித சமரசமும் இன்றி காந்தியின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் நிறுவனமாக செயல்படுவது காந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
அர்ப்பணிப்பு, சமரசமற்ற நெறிமுறைகள் குடும்பத்துடன் காந்தியப் பணியாற்றுவது அந்த நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
அரசாங்கத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ நிதி பெறாமல் மக்களின் நன்கொடையில் அந்த நிறுவனத்தை நடத்துவது என்பதுதான் அதன் தனிச் சிறப்பு.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் கடைப்பிடிக்கும் ஒழுக்க நியதிகள்தான் அந்த நிறுவனத்திற்கு மெருகூட்டுவது. அந்த நிறுவனம் எளிமையாக காந்திய நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வது, இயற்கையோடு வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கும் நிறுவனமாக விளங்குகின்றது.
அங்கு சென்று ஒரு வார காலம் தங்கி இருந்தால் காந்தியர்களாகவே மாறிவிடுவார்கள். இவ்வளவு சிறப்புக்களோடு செயல்படும் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்ததால் எப்படியாவது செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அங்கு நிகழ்வு ஆரம்பிக்கும் தருவாயில் சென்று சேர்ந்தேன்.
தேசியக் கொடி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கொடி ஏற்றிய சிறப்பு விருந்தினர் ஆனைமலை பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளர் வேலைபார்க்கும் ஒரு பெண்மணி. கொடி ஏற்றிய பிறகு அனைவருக்கும் கவுனி மாவு இனிப்பு உருண்டை வழங்கினார்கள்.
வந்திருந்த அனைவருக்கும் காலை உணவாக கஞ்சியும் தேங்காய் துவையலும் பாக்கு மட்டையில் கொடுத்து, உண்ட பிறகு பாக்கு மட்டையை கழுவி மதிய உணவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அனைவரும் அப்படியே செய்தார்கள்.
ஐ.நா. சபையில் 2007 ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து மகாத்மா காந்தி அவதரித்த அக்டோபர் 2ஆம் தேதியை அகிம்சை தினமாக எல்லா நாடுகளிலும் அனுசரித்து, அகிம்சையின் தேவை உலகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை விவாதித்து மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி செயல்படும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.
இதில் ஒரு தனிச் சிறப்பு இந்தத் தீர்மானத்தை 140 நாடுகள் முன் மொழிந்தது. இன்றைய உலகத் தேவையாக இருப்பது அகிம்சை என்பதை உலக மக்களிடம் எடுத்து இயம்பி விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஆனால் அதற்கு மாறாக நாம் அந்த நாளில் பொது நிறுவனங்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் விடுமுறை அறிவித்து அனைவரையும் வீட்டிலிருக்க வைத்துவிட்டோம். ஐ.நா.மன்றம் கல்விச் சாலைகள்தான் கல்வியின் மூலமாக இந்தப் பணியைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
ஆனால் கல்விச் சாலைகளுக்கு அன்று நாம் விடுமுறை அறிவித்து செயலற்று இருக்க பணித்து விட்டோம்.
எதையும் சடங்காக்கும் வல்லமை கொண்ட நாம் இந்த நாளையும் வெற்றுச் சடங்காக்கி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, காந்தியத்திற்குப் புறம்பாக எவற்றையெல்லாம் செய்ய இயலுமோ அவைகளையெல்லாம் எந்தத் தளர்வும் இன்றி செய்கின்றோம்.
தமிழகத்தில் குறைந்த பட்சம் அன்று கிராம மக்கள் கிராமசபையில் கூடி தங்கள் முன்னேற்றம் குறித்து விவாதிப்பது ஒரு வகையில் காந்தியின் கனவுக்கு உயர் கொடுத்ததுபோல் இருந்தது.
குடிமக்களுக்கு அன்று மதுபானம் குடிக்க ஒரு தடைபோட்டுள்ளது. அதை அரசு காந்திக்கு கொடுக்கும் மரியாதை என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்குமேல் நாம் எதையும் இன்றைக்கு யாரிடமும் எதிர்பார்க்க முடியாது.
இருந்தபோதிலும் மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடந்த விழாவில் ஒரு சில தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
ஒன்று அக்டோபர் 2ஆம் நாள் அரசு கல்விச் சாலைகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிப்பதைவிட அகிம்சை தினம் அனுஷ்டிக்கும் செயல்பாட்டு நாளாக அறிவிக்க வேண்டும்.
அகிம்சை தொடர்பான எதாவது ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அந்த நிகழ்வில் இரண்டு குழந்தைகள் மிகச் சிறப்பாக காந்தி பஜனை மற்றும் பாரதி பாடல்களை குழுவாக ஒரு இன்னிசை நிகழ்ச்சியை நடத்தி சிறப்புச் சேர்த்தனர்.
எந்த நிகழ்வையும் நேரத்தில் ஆரம்பித்து நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு கடுமையான நடைமுறையை வழக்கத்தில் வைத்துள்ளனர் அந்த ஆஸ்ரமத்தில். அதற்கு ஏற்றாற்போல் என்னை சரியாக 11.30 மணிக்கு பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
எனக்குக் கொடுத்த தலைப்பு “கிராம வாழ்க்கை”. அந்த நிறுவனத் தலைவர், மிக எளிமையாகப் பேசுங்கள். இங்கு வந்திருப்போர் அனைவரும் கிராமங்களிலிருந்து வருபவர்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் என்றார்.
காந்தி, கிராம சுயராஜ்யத்தை இந்தியாவில் உருவாக்கத் திட்டமிட்டார். அந்த சுயராஜ்யம் என்பது ஒரு வாழ்வியல் முறை. அந்த வாழ்வியல் முறை தான் இந்தியாவில் நாகரீகமாக செழித்து விளங்கியிருந்திருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.
அந்த வாழ்வு முறையை மீட்டெடுத்து புதுப்பித்து இந்தியச் சமுதாயம் வாழ்வதன் மூலம் இந்தியாவில் ஒரு புதிய சமுதாயம் உருவாகும் அதன் மூலம் உலகுக்கு ஒரு புது வாழ்வியல் முறையை முன் மாதிரியாகக் காட்டலாம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த கிராமங்கள் என்பது அசுத்தத்தின் உறைவிடமாகவும், மூட நம்பிக்கையின் பிறப்பிடமாகவும், சாதியத்தில் தோய்ந்த ஒரு வறுமை வாழ்வில் இருக்கும் குடியிருப்புக்கள் என்பதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் படம் பிடித்துக் காண்பித்தார்.
காந்தி ஒரு கனவுக் கிராமத்தை மக்களுக்கு முன் எடுத்து வைத்து, நாம் பார்க்கும் இந்த அலங்கோல கிராமங்களை புனரமைக்க வேண்டும். அதற்கான நிர்மாண ஊழியர்களை தயார் செய்தார்.
கிராமங்களை புனரமைப்பது என்பதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு செய்ய வேண்டிய முக்கியப் பணியாகக் கருதினார்.
இந்தியாவுக்கு முதல் தேவையாக அவர் சுதந்திரத்தைப் பார்க்கவில்லை. இந்தியாவுக்கு முதல் தேவை உடல்நிலை ஆக்க மேம்பாடு என்பதை பிரகடனப்படுத்தினார்.
அதுதான் தூய்மை மற்றும் துப்புரவு. அது ஒன்றும் கழிப்பறை கட்டும் திட்டம் அல்ல. அது ஒரு கலாச்சாரம். அது கழிப்பறைக் கலாச்சாரம் அல்ல. அது ஒரு தூய்மைக்கான கலாச்சாரம்.
மக்களின் சிந்தனையில், நடத்தையில், செயல்பாடுகளில் மிக உயர்ந்த விழுமியமாக இந்தக் கருத்து ஆக்கிரமித்திருக்கும் வகையில் இருக்க வேண்டும் எனக் கருதினார்.
இது ஒரு பெரிய விஞ்ஞானம். இதற்கான ஒரு கல்வியை உருவாக்கி மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கருதினார். அடுத்து கிராம மேம்பாட்டிற்கு முதல் பணியாக இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் கிராம மக்களின் சுய மரியாதை மீட்டு உருவாக்க வேண்டும்.
வெள்ளையர்கள் கிராமத்து மக்களை மனதளவில் அடிமை வாழ்வுக்கு பழக்கி வைத்து விட்டுச் சென்று விட்டார்கள். எனவே நம் விவசாயிகளையும், கிராமத்து மக்களையும் தங்கள் சுய மரியாதையை மீட்டெடுத்தவர்களாக உணர வைக்க வேண்டும்.
அது எப்போது சாத்தியம் என்றால் இந்தக் கிராமப் புனரமைப்புப் பணிகளை கிராமத்து மக்களை வைத்தே செய்வதன் மூலம் சாதிக்க முடியும் என்பதனை தெளிவாக்கினார்.
இந்திய சமூக மாற்றத்திற்கு மக்கள்தான் பங்காளர்கள். அவர்கள் கிராம மேம்பாட்டுச் செயல்பாடுகள் அத்தனைலும் பங்கு பெறுமாறு மேம்பாட்டுச் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும் எனக் கருதி வடிவமைத்தார்.
இதன் அடிப்படை இயற்கையோடு இயைந்து வாழ்வது. அந்த வாழ்வு தேவையின் அடிப்படையில் நடைபெறும் எளிய வாழ்வு. அந்த வாழ்வில் அனைத்துச் செயல்பாடுகளும் அறிவியல் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
அந்த அறிவியல் இந்திய மரபில் இருக்கின்றது, அதை புதுப்பித்து பின்பற்ற மக்களைத் தயார் செய்ய வேண்டும். இந்த வாழ்வியல் முறையின் அடிப்படை சமூகமாக வாழ்வது. சாதியாக வாழ்வது அல்ல.
சமூகமாக வாழ்வது என்றால் எல்லா மதத்தினரும் எல்லா சாதியினரும் ஒரு சமூக வாழ்வைக் கட்டமைப்பது. அதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. ஏழை பணக்காரர் இருப்பர். அதனால் யாரும் யாரையும் அடிமைகளாக ஆக்கி ஆதிக்கம் செலுத்த முடியாது.
ஆதிக்கமற்ற சமூகமாக ஒற்றுமையாக வாழ்வதுதான் சமூக வாழ்க்கை. அடுத்து சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாடுதான் இதில் இலக்காக இருக்கும். மக்கள் செயல்பாடுகளில் சமூக மேம்பாடு முன்னுரிமை பெற்று சமூக மேம்பாட்டில்தான் குடும்ப மேம்பாடும் தனிமனித மேம்பாடும் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து செயல்படக் கூடியவர்களாக நம் மக்களை தயார் செய்ய வேண்டும்.
அந்த சமூக வாழ்வு என்பது ஒரு கூட்டுறவு வாழ்க்கை, ஒருவருக்கொருவர் உதவி வாழும் வாழ்க்கை, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் நல்லிணக்க வாழ்க்கை. மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தும் வாழ்க்கை. அந்த வாழ்வு முறையில் ஒவ்வொருவரும் பொறுப்பு மிக்கவர்கள் சமூக மேம்பாட்டுக்கு என்ற சிந்தனையில் செயல்படக் கூடியவர்கள்.
அங்கு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருக்கும். ஆனால் எவரும் புறக்கணிப்புக்கு ஆளாக மாட்டார்கள். எவரும் ஒடுக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள். அனைவரும் மனித வாழ்வு எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழத் தேவையான வசதிகளை சமூகம் அனைவருக்கும் உருவாக்கி வைத்திருக்கும்.
அங்கு எளிமை இருக்கும் வறுமை இருக்காது. எளிய வாழ்வின் உன்னதத்தைப் புரிந்து போற்றும் புரிதல் உள்ளவர்களாக மக்கள் தயார் செய்யப்பட்டிருப்பார்கள்.
எளிய வாழ்வில் இருக்கும் கம்பீரத்தை புரிந்தவர்களாக மக்கள் இருப்பார்கள். எளியவர்களை மதிக்கும் மாண்பைப் பெற்றவர்களாக மக்கள் இருப்பார்கள்.
கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் வாழும் பகுதியை தூய்மையாக வைத்திருப்பார்கள். அந்தப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருள்களை வைத்து உடலுக்குத் தேவையான ஆரோக்ய உணவை தயாரித்து உண்டு ஆரோக்யமான வாழ்வை வாழும் விழிப்புணர்வும் கல்வியும் பெற்றிருப்பார்கள்.
கிராமங்களில் பெரிய மாளிகைபோல் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட பொருள்களை உபயோகித்து கட்டிய வீடுகள் இருக்காது. மாறாக கிராமத்தில் கிடைக்கும் பொருள்களை வைத்து கட்டிய சிறிய தேவைக்கு ஏற்ற வீடுகள் மட்டுமே இருக்கும்.
கிராமங்களில் இயற்கை வேளாண்மையும் கிராமக் கைத்தொழில்களும் சிறு தொழில்களும் தேவையான சிறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொருள்களை விளைவிப்பதும், உற்பத்தி செய்வதும் முக்கியச் செயல்பாடாக விளங்கி, அதில் மக்கள் தங்கள் முழு நேரத்தையும் செலவு செய்து கொண்டிருப்பார்கள்.
இந்த வாழ்வியலில் ஒருவரையொருவர் சுரண்டி வாழும் நிலை இருக்காது, ஒருவருக்கொருவர் செயல்பாட்டுக்கு உதவி வாழும் ஒரு கூட்டுறவு வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கும்.
கிராமங்கள், அவைகளுடைய செயல்பாடுகள் அனைத்தும் கிராம மக்கள் கையில் இருக்கும். கிராமச் சொத்துக்கள் பொதுமக்கள் பாதுகாப்பில் இருக்கும்.
கிராம மக்களின் தேவைகளுக்கு அரசாங்கம் பணிபுரியும். பொது மக்களுக்கு மிகப் பெரிய பொறுப்புக்களும், கடமைகளும், கடப்பாடுகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும். அவர்கள் பொறுப்பு மிக்க சுதந்திர நாட்டில் வாழும் ஏற்ற மிகு குடிமக்களாக தங்களை நெறிப்படுத்தி வாழும் வாழ்வு முறை கற்று செயல்பாட்டில் இருப்பார்கள்.
அவர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு, தேவைகளுக்கு அரசுத் திட்டங்களுக்கு ஏங்கி வாழும் பயனாளியாக வாழ மாட்டார்கள். இந்த கிராமப் புனரமைப்புக்கான ஒரு புதுமைக் கல்வி உருவாக்கப்பட்டு அதன் மூலம் கிராமப் புனரமைப்புக்கான கிராம நிர்மாண ஊழியர்கள் தயார் செய்யப்படுவார்கள்.
அவர்கள் கிராம மேம்பாடு கிராமிய வாழ்வு முறை பற்றி விபரம் தெரிந்த நிபுணர்களாக உருவாகி மக்களுடன் பணியாற்றி மக்களிடம் புது வாழ்வுக்கான புதிய சிந்தனைச் சூழலை உருவாக்குவார்கள்.
இன்று நாம் வாழும் வாழ்க்கை கிராம வாழ்க்கை அல்ல. நாம் கிராமத்தில் நகர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளோம். 75 ஆண்டுகளாக கிராம மேம்பாடு என்றால் சாலை போடுதல், கட்டிடம் கட்டுதல், பாலம் கட்டுதல் என்று சல்லி, சாந்து, இரும்புக் கம்பியில் செயல்பாடுகளைக் கொண்டுவந்து விட்டோம்.
கிராமத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு, நாம் பயனாளிப்பட்டாளமாக மாறி, கிராமத்தை எவரும் சுரண்டலாம் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம்.
இந்தியக் கிராமங்களில்தான் இலக்கியம், கலை, இசை என அத்தனையும் இந்தியாவில் வளர்ந்தன. இன்று அந்தக் கலைகள் அத்தனையும் ஆதரவின்றி மறைந்தன. சில உதவிக்கு எதிர்பார்த்து நிற்கின்றன. வெள்ளையர்கள் இங்கிலாந்து நகரங்களைச் செழிக்கச் செய்ய இந்திய கிராமங்களை சுரண்டினார்கள்.
சுதந்திர இந்தியாவில் கிராம மேம்பாடு என்ற பெயரில், சுரண்டிய கிராமங்களை சூறையாடி நடுத்தர வர்க்கமும் இந்திய நகரங்களும், வணிகர்களும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள்.
அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, அமைதி குலைந்து ஆன்மாவை இழந்து வாழும் சூழலில் இருப்பதை பார்க்க முடிகிறது.
கிராமங்கள் அழிந்து இந்தியா ஒருபோதும் மேம்பட முடியாது. இந்தியா அதன் இயல்பில் உன்னதத்துடன் இந்தியத்துவத்தில் வாழ கிராம வாழ்வு மீட்டெடுக்க வேண்டும். இன்று உலகமே ஒரு சிக்கலான சூழலைச் சந்தித்துக் கொண்டுள்ளது.
இதற்கான தீர்வு இந்திய வாழ்வு முறையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான ஒரு புதிய வாய்ப்பு ஒரு புதிய உள்ளாட்சி அரசாங்கம் அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த அரசாங்கத்திற்கு தலைவர்களாக வருபவர்கள், மாற்றுமுறை மேம்பாட்டுப் புரிதலுடன் செயல்படக்கூடிய மாற்றுத் தலைவர்களாக உருவாக்கப்படல் வேண்டும்.
அதற்கான புதிய பார்வையும், புதிய அணுகுமுறையும், அதற்கான நிபுணத்துவமும் பெற்றவர்களாக அவர்களை உருவாக்கினால் அவர்கள் மக்களுடன் இணைந்து, கிராமப்புனரமைப்பை செய்ய முயல்வார்கள்.
அப்படிப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியை நம் தலைவர்களுக்குத் தந்தால் குட்டிக் குடியரசை எல்லாக் கிராமங்களிலும் உருவாக்க காந்தி காட்டிய பாதையில் நம் கிராமங்களை மாற்றலாம். அதுதான் இன்றைய தேவை.
– டாக்டர் க. பழனித்துரை