கூட இருப்பவர்களை கொண்டாட வேண்டும்!

– நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

****

கேள்வி : கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கற்றதும் பெற்றதும் என்ன?

சிவகார்த்திகேயன் பதில் : அத்தியாவசியம் எது, ஆடம்பரம் எது எனத் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கை முறையே மாறிவிட்டது. உதாரணமாகச் சிறு வயது முதல் தினமும் அசைவம் சாப்பிடும் பழக்கம் உண்டு. அது இந்த ஊரடங்கில் மாறிப் போனது.

கடைகள் இல்லாத நாட்களில் குடும்பமே சைவமாக மாறினோம். இதனால் உடலில் பல நல்ல மாற்றங்கள் தெரியத் தொடங்கின. உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாமலே உடல் எடை நன்றாகக் குறைந்தது.

அதேபோல் குடும்பத்துடன் இருக்கும் நேரம் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொண்டேன். நாம் வேலைக்குச் சென்ற பிறகு அவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை ‘லாக் டவுன்’ புரிய வைத்தது.

தனிப்பட்ட இழப்புகளும் ஏற்பட்டன. அது ஏற்படும்போதுதான், கூட இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாடிவிட வேண்டும் என்று தோன்றுகிறது.

அவர்களுடைய சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக் கூட பாராட்டி விட வேண்டும். இதை உணர்த்தியது நண்பன் அருண்ராஜாவுடைய மனைவி சிந்துஜாவின் மறைவு.

அவ்வளவு நேர்மறையானவர் சிந்துஜா.

படப்பிடிப்பில் “சாப்பிட்டீங்களா அண்ணே.. வேறு எதாவது வேணுமா..?” என்று கேட்டு ஓடிக் கொண்டே இருப்பார்.

சாப்பிடாமல் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தாலும், அதைக் கவனித்து அவரைச் சாப்பிட வைப்பார்.

அருகில் ஒரு நாய் பசியோடு இருந்தால் அதற்கு யார் உணவு கொடுப்பார்கள் என்று யோசித்து அதற்கும் பசியாற்றுவார்.

அவரை நாங்கள் கொண்டாடாமல் இருந்து விட்டோமே என்று இப்போது தோன்றுகிறது. கூட இருப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்பது தான் அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனது.

நன்றி : இந்து தமிழ் திசை (அக்டோபர் 8)

Comments (0)
Add Comment