ஒரு பாடலை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது பெரும் பிராசஸ். கம்போஸ் பண்ணுவதும் அப்படித்தான். உட்கார்ந்த உடன் எல்லாம் இனிமையான ராகம், இதோ வந்துட்டேன் என்று வந்துவிடுமா என்ன?
ஆனால், இசையையே மூச்சாகக் கொண்ட இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், வெறும் 15 நிமிடங்களில் ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம்தான்!
கே.பாலசந்தர் இயக்கியதில் முக்கியமான திரைப்படம் ’அவர்கள்’. வழக்கமாக அவர் படங்களின் ஹீரோயின்கள் செய்யும் புதுமையை விட, இந்தப் படத்தின் ஹீரோயின் வேற லெவல். இதில் சுஜாதா ஹீரோயின்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ரவிகுமார் என மூன்று ஹீரோக்கள் இந்தப் படத்தில் இருந்தாலும் இவர்களை தாண்டி, தனது நடிப்பால் மிரட்ட வைத்தவர் சுஜாதா தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதை அவரைச் சுற்றிதான் நகரும்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அவர்கள்’ 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ல் வெளியானது. கமலும் ரஜினியும் கே.பாலசந்தரிடம் அப்போது வளர்ந்த காலம்.
இருந்தாலும் இந்தப் படத்தின் டைட்டில் கார்டில், எந்த ஹீரோ பெயரையும் முதலில் போடாமல், சுஜாதாவின் பெயரை போட்டிருப்பார் கே.பாலசந்தர்.
அப்படியென்றால் கதையில், அவருக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
கதைப்படி, புதுமைப் பெண்ணான சுஜாதாவுக்கு சூழ்நிலைகளால் தன் காதலன் ரவிகுமாரை பிரிய நேர்கிறது. பிறகு ரஜினிகாந்தைத் திருமணம் செய்கிறார்.
சுஜாதாவின் காதலை அறிந்திருக்கும் ரஜினி, அவளை கொடுமைப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் கொடுமை அதிகரிக்க விவாகரத்து பெறுகிறாள்.
இந்நிலையில், காதலனை மீண்டும் சந்திக்கிறார் சுஜாதா. அவளை இப்போதும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறான் காதலன். அவர்கள் வாழ்க்கையில் ரஜினி குறுக்கிடுகிறார்.
இதற்கிடையே சுஜாதாவுடன் பணியாற்றும் கமல்ஹாசன், அவரை ஒரு தலையாக காதலிக்க, இப்படிச் சிக்கலாகும் இந்தக் கதையின் முடிச்சு எங்கு அவிழ்க்கப்படுகிறது என்பதுதான் படம்.
படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். கண்ணதாசன் பாடல்கள். இருவரும் இணைந்தால் பாடல்கள் சூப்பர் ஹிட்தான் என்பதற்கு உதாரணம் ஒன்றா, இரண்டா? ஏராளமான பாடல்கள் இருக்கின்றன.
இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில், ’அங்கும் இங்கும் பாதை உண்டு’, ’ஜூனியர் ஜூனியர் இரு மனம் கொண்ட’, எஸ்.ஜானகி குரலில் ’காற்றுக்கென்ன வேலி..’ உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
இதில், ’அங்கும் இங்கும்’ பாடலைதான் வெறும் 15 நிமிடங்களில் கம்போஸ் செய்திருக்கிறார் விஸ்வநாதன்.
– அலாவுதீன்