திமுகவிலிருந்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய எம்ஜிஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ : தொடர் – 30

அந்தக் காலத்து சினிமா பத்திரிகைகளில் வெளிவரும் எம்.ஜி.ஆர். திரைப்பட ஸ்டில்ஸ்களின் ஓரத்தில் பெரும்பாலும் இரண்டு பெயர்கள் தான் இடம்பெறும். ஒன்று, ஸ்டில்ஸ்: நாகராஜ ராவ் இன்னொன்று சங்கர் ராவ்.

இந்த இரண்டு பேரும் தான் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்வில் தொடங்கி அரசியல் வரை அவரை விதவிதமாக படம் பிடித்துத் தந்தவர்கள்.

அதில் சங்கர் ராவ் நம்முடன் பகிர்ந்து கொண்ட பல சுவையான அனுபவங்கள் இந்த வாரமும் தொடர்கிறது….

“நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பின்போது எனக்கு தாங்க முடியாத இடுப்பு வலி. கழுத்தில் கேமராவுடன் நான் இடுப்பில் கை வைத்தபடி அங்கங்கே நின்று கொண்டிருந்ததை கவனித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஒரு நாள் உணவு இடைவேளையின்போது தன் பர்சனல் டாக்டர் பி.ஆர்.எஸ். அவர்களை வரவழைத்து என்னை சோதிக்க சொன்னார். என்னை முழுமையாக பரிசோதித்த டாக்டர், எம்.ஜி.ஆரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சென்றார்.

சற்று நேரத்தில் என்னை அழைத்த எம்.ஜி.ஆர்., “சங்கர்… நாளை மறுநாள் உனக்கு ஆபரேஷன். ரெடியா இருந்துக்க” என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என்ன ஆபரேஷன்? எதுக்கு ஆபரேஷன்? என்று எதுவுமே புரியாமல் நான் விழித்ததை புரிந்து கொண்டவர் தொடர்ந்தார்.

“உனக்கு ஹிரண்யா பிரச்சனை இருக்கு. ஆரம்ப ஸ்டேஜ் தான் என்றாலும் உடனடியாக ஆபரேஷன் செய்துவிடுவது நல்லது என்கிறார் டாக்டர்” என்றார்.

“அடுத்த மாசம் செஞ்சுக்குறேனே” என்றேன். அந்தக் காலத்தில் ஹிரண்யா கூட பெரிய ஆபரேஷன் தான்.

“அடுத்த மாசம்னாலும் நீ தானே செஞ்சுக்கணும். ஏன் தள்ளிப்போடுறே? நாளைக்கே போய் அட்மிட் ஆகுற. நான் உங்க மாமாவுக்கு போன் பண்ணி பேசிக்கிறேன்” என்றார்.

எழும்பூர் தாஸபிரகாஷ் பக்கத்தில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் தான் நான் அட்மிட் ஆகி இருந்தேன். ஆபரேஷன் அன்று காலை எங்க அம்மா, மாமா நாகராஜ ராவ் எல்லோரும் வந்திருந்தாங்க.

காலை 6.30 மணி இருக்கும் ஆஸ்பத்திரியில் திடீரென்று ஒரே சலசலப்பு. நர்ஸ் எல்லாம் அங்கேயும் இங்கேயும் ஓடுறாங்க. ஆஸ்பத்திரி வாசலில் ஒரே கூச்சல். என்னவென்று புரியாமல் மாமா வாசலுக்கு சென்று எட்டிப் பார்த்தார். அறை வாசலில் எம்.ஜி.ஆர். வந்து நிற்கிறார்.

அவருடன் டைரக்டர் ப.நீலகண்டன், அசோகன், எம்.என்.நம்பியார், நாகேஷ் என்று ஒரு படையே வந்தது. உள்ளே வந்ததும், “எத்தனை மணிக்கு ஆபரேஷன்?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

“இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பிச்சிடுவோம்” என்று டாக்டர் சொன்னதும், “நான் மட்டும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளே வரலாமா?” என்று கேட்டார்.

டாக்டர் ஓ.கே சொன்னதும், எனக்கு நடந்த ஹிரண்யா ஆபரேஷனை அருகில் இருந்து பார்த்துவிட்டு, ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததும் தான் வீட்டுக்கு புறப்பட்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது நான் மயக்க நிலையில் இருந்தேன்.

ஆபரேஷன் முடிந்து மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். டிஸ்சார்ஜ் ஆகும் அன்று என் மாமா பணம் கட்டுவதற்காக கேஷ் கவுன்டர் போனார். 12 ஆயிரம் ரூபாய் பில்.

கேஷ் கவுன்டரில் இருந்தவர், “சார், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்ல இருந்து ஏற்கெனவே ப்ளாங்க் செக் கொடுத்துட்டாங்க” என்றார்.

அன்னிய தேதிக்கு நான் ஒரு அசிஸ்டென்ட் போட்டோகிராபர். எனக்கு அப்படியொரு முக்கியத்துவம் அவர் கொடுக்கணும்னு அவசியமே இல்ல. ஆனா அன்று அவர் செய்த உதவியை என் ஆயுசுக்கும் மறக்க முடியாது” என்று சொல்லும் போதே சங்கர் ராவின் கண்கள் பனிக்கின்றன.

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார் என்ற செய்தி வந்தபோது, எம்.ஜி.ஆருடன் படப்பிடிப்பில் இருந்துள்ளார் சங்கர் ராவ்.

அப்போது என்ன நடந்தது? எம்.ஜி.ஆர். அதை எப்படி எதிர் கொண்டார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைப்பற்றி விவரிக்கச் சொல்லிக் கேட்டோம்.

“அந்த சமயத்துல ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் இருந்தேன். அதுவும் அடையார் சத்யா ஸ்டூடியோவில் தான் நடந்தது. காலை 11 மணி இருக்கும் டீ ப்ரேக். ஒரு மரத்தடியில் சேர் போட்டு அமர்ந்திருந்தார் எம்.ஜி.ஆர்.

அவரைச் சுற்றி நிறையபேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது அங்கே வந்த சத்யா ஸ்டூடியோ மேனேஜர் பத்மநாபன் சற்று பதட்டமாக இருந்தார். எம்.ஜி.ஆர். அருகே சென்று காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு சென்றார்.

அதைக் கேட்ட பிறகு சற்று நேரம் மௌனமாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
என்ன ஏது என்று தெரியாமல் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். ஆனால் ஏதோ விபரீதம் என்பது மட்டும் புரிந்தது.

ஓரமாக கேமராவுடன் நின்று கொண்டிருந்த என்னை அழைத்தார்.

“பையில எவ்வளவு ரோல் வச்சிருக்க?” என்று கேட்டார்.

“நாலு ரோல் இருக்கும்ணே” என்றேன்.

“ஆபீஸ்ல காசு வாங்கிட்டு போய் இன்னும் 10 ரோல் வாங்கி வச்சுக்க, தேவைப்படும். அப்புறம் வீட்டுக்கு போன் போட்டு ஜானகி அம்மாகிட்ட ஒரு பெரிய அண்டா நிறைய பாயசம் செஞ்சு அனுப்பச் சொன்னேன்னு சொல்லு.

மதிய சாப்பாடு கூட தாமதமா வந்தா பரவாயில்ல. பாயசம் சீக்கிரமா வரணும்னு சொல்லிடு” என்று மளமளவென பேசிவிட்டு மேக்கப் அறைக்குள் சென்று விட்டார்.

அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற விஷயமே அதன் பிறகுதான் எங்களுக்கு தெரியவந்தது. இந்தச் செய்தி ஊரெங்கும் பரவி, சத்யா ஸ்டூடியோ வாசலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட்டனர்.

மேக்கப் அறைக்குள் சென்றவர், நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தார். நன்றாக குளித்துவிட்டு தொப்பி, கண்ணாடி அணிந்து கொண்டு ஃப்ரெஷ்ஷாக, புதிய உற்சாகத்துடன் இருந்தார்.

சத்யா ஸ்டூடியோ கேட்டை திறந்துவிடும்படி கூறினார். வெளியே நின்று கொண்டிருந்த மக்கள் வெள்ளம் ஸ்டூடியோவுக்குள் பாய்ந்தது. வந்தவர்கள் அத்தனை பேருக்கும் தன் கையாலேயே பாயசம் கொடுத்தார்.

ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு விட்டதால் அவரது மெய்காப்பாளர்கள் அவரை பாதுகாப்பாக, அங்கே நின்றிருந்த ஒரு வேன் மீது ஏறி நிற்க வைத்துவிட்டனர்.

அதில் நின்றபடி “நான் கணக்கு கேட்டது தப்பா?” என்று மக்களைப் பார்த்து அன்று அவர் ஆற்றிய உரை என்றைக்கும் மறக்க முடியாதது. அந்த சிலிர்ப்பான கணங்களை என் கேமராவுக்குள் நான் உறைய வைத்துக் கொண்டிருந்தேன்.

(சரித்திரம் தொடரும்…)

Comments (0)
Add Comment