பாரதி – ஒரு பத்திரிகையாளர்!

பாரதி நினைவு நூற்றாண்டு: 100

‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி’ பாரதி.

இந்திய நாட்டின் மீது பற்று –
சுதந்திரத்தின் மீது நம்பிக்கை –
தமிழ்மொழியின் மீது நேசம்
சமூக இழிவிற்கு எதிரான கோபம்
– என்று பல முகங்களுடன் காலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த பாரதி வாழ்ந்தது மிகக் குறுகிய காலம்தான்; ஆனால் அவர் எழுப்பிய சலனம் காலத்தை மீறியது.

தமிழ்நாட்டில் அந்தக்கால நெல்லை மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன், செல்லப்பெயர் சுப்பையா. பிறந்த ஆண்டு 1882.

பிறந்து ஐந்து வயதில் தாயைப் பறிகொடுத்த சுப்பிரமணியனுக்கு ‘சுடர் மிகும் அறிவு‘. பதினொரு வயதிலேயே சுப்பிரமணிக்கு சிவஞானயோகி சுவாமிகள் கொடுத்த பட்டம் ‘பாரதி’, அந்தப் பட்டமே நிலைத்துவிட்டது.

காட்டன் ஜின் ஃபாக்டரி நடத்திவந்த பாரதியின் அப்பாவுக்குப் பலத்த நஷ்டம். திருநெல்வேலியில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்ட பாரதி பதினைந்து வயதில் செல்லம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

மறு ஆண்டு பாரதியின் அப்பா மறைந்த பிறகு பாட்டியின் பொறுப்பில் வளர்ந்தார் பாரதி. காசியிலிருந்த அத்தையின் அழைப்பின் பேரில் அங்கு சென்றபோது அவருக்கு வயது 16.

காசியில் ஆங்கிலப் படிப்பு; கூடவே சமஸ்கிருதமும், ஹிந்தியும் கற்றார். தேர்வில் முதல் வகுப்பு. காசி அனுபவம் அவருடைய தோற்றத்தையே மாற்றியது.

எட்டயபுரம் ஜமீன்தார் அழைத்ததால், சொந்த ஊருக்குத் திரும்பினார். எட்டயபுரம் ஜமீனில் பாரதிக்கு வேலை. ஒரு வருட காலத்திற்குள் அரண்மனை வேலை அலுத்துவிட்டது. (1903–1904)

அங்கிருந்து கிளம்பி மதுரையிலுள்ள பள்ளியொன்றில் நான்கு மாதங்கள் பணியாற்றினார். அதற்குள் அவருடைய கவிதை பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்துவிட்டது.

கடையம் என்கிற ஊரில் இருந்தது அவருடைய குடும்பம். 1905இல் அவருக்கு முதல் மகள் பிறந்தார்.

1905இல் சென்னையில்  ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்ததிலிருந்து துவங்கியது பத்திரிகையாளர் வாழ்க்கை. கூடவே ‘சக்ரவர்த்தினி பத்திரிகையிலும் ஆசிரியர்.

1906லிருந்து ‘இந்தியா’ பத்திரிகைக்கு எழுதினார். பாலகங்காதர திலகர்தான் அவருக்குத் தேசப்பற்றில் மானசீக குரு. ‘பாரதி’ என்கிற பெயரில் பாடல் எழுதினார். மொழிபெயர்த்தார். கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தினார்.

‘பாலபாரதி’ (Bala Bharathi) என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். ‘இந்தியா’ பத்திரிகையில் ஹிந்தியைப் படிக்க வலியுறுத்தினார்.

கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். பிறகு நிவேதிதா தேவியைச் சந்தித்தார். திலகரின் சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கினார்.

வ.உ.சிதம்பரத்துடன் இணைந்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். 1907இல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.

1908இல் சென்னையில் உருவாக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ அமைப்பில் பங்கேற்றார். காங்கிரஸ் ஊர்வலத்திற்குத் தலைமை வகித்தார். காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தார். ‘இந்தியா’ பத்திரிகை மீது வழக்குத் தொடரப்பட்டது.

1908இல் காவல்துறையின் நெருக்கடியினால் புதுச்சேரிக்குச் சென்றார். அங்கிருந்து ‘இந்தியா’ பத்திரிகை வெளிவந்தது. ‘விஜயா’ என்கிற தினசரியையும் ஆசிரியராக இருந்து நடத்தினார். தொடர்ந்து ‘கர்மயோகி’ என்கிற பத்திரிகையைத் துவக்கினார்.

1911இல் பாரதியின் நூல்களுக்கு எதிரான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் பாரதி மீதும் ‘வாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டது.

1913இல் கனகலிங்கம் என்கிற ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பூணூல் அணிவித்தார். 1918இல் பாரதி புதுவையை விட்டு சென்னை மாகாண எல்லைக்குள் வந்ததும் கடலூரில் கைது செய்யப்பட்டார். மூன்று வாரங்களுக்கு மேல் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுப் பின் விடுவிக்கப்பட்டார்.

1919இல் சென்னையில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். தன்னுடைய நூல்களைத் தானே வெளியிடுகிற திட்டத்துடன் இருந்தார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை.

1920இல் சென்னையில் மீண்டும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினார்.

1921 ஜூன் மாதத்தில் சென்னை திருவல்லிக்கேணி கோவில் யானையால் தாக்கப்பட்டதால் – பாரதியின் உடல் நலிவடைந்தது.

1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவில் காலமானபோது பாரதிக்கு வயது 39.

குறுகிய காலத்திற்குள் –

‘எந்நாளும் அழியாத மகா கவிதை’களைப் படைத்த பாரதி தமிழ்மொழிக்குக் கிடைத்த அபூர்வமான படைப்பாளி.

கவிதை, சிறுகதை, உரைநடை, மொழிபெயர்ப்பு.. பாஞ்சாலி சபதம் போன்ற காவிய முயற்சி என்று விரிந்து நிற்கிறது அவரது படைப்புலகம்.

பத்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் வெளிப்பட்ட பாரதியின் கட்டுரைகள் – நாட்டு நலனை விரும்பும் பத்திரிகையாளனுக்கு முன்மாதிரியாகத் திகழக் கூடியவை

பாரதி மறைந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இடைப்பட்ட இந்தக் கால இடைவெளி பாரதியின் ஆளுமைப் பிம்பத்தைச் சற்றும் குறைத்துவிடவில்லை.

பாரதி எழுத்தின் மகத்துவம் இது.

– மணா

இந்தியாஎட்டயபுரம் ஜமீன்கர்மயோகிகவிதைகனகலிங்கம்காங்கிரஸ்சிவஞானயோகி சுவாமிகள்சுடர் மிகும் அறிவுசுதந்திரப் போராட்டம்சுதேசமித்திரன்சென்னைதிருவல்லிக்கேணிபாரதிபாலகங்காதர திலகர்பாலபாரதிபுதுச்சேரிமகாத்மா காந்திவ.உ.சிவிஜயாஜனசங்கம்
Comments (0)
Add Comment