உறவுகள் தொடர்கதை 15
கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின் அடிப்படையிலானது.
உணவு அடிப்படைத் தேவை என்பது பொதுவான விஷயம். ஆனால் அதிலேயே எத்தனை விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன என்பது நமக்கே தெரியும்.
வயிறை நிரப்ப உணவு அவசியம் என்பதால் நாம் கிடைத்ததை எல்லாம் சாப்பிடுவதில்லை. இடையில் நாக்கு என்ற சுவை உணரும் உறுப்பு இருக்கிறது. இதைக் கடந்தால்தான் உணவு உள்ளே போகும். அதே போலத்தான் தம்பதியரின் நெருக்கமும்.
அதில் பொதுவான விருப்பத் தேர்வுகள், இருக்கின்றன. தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன. முதலில் பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம்.
சுத்தம் சுகம் தரும்
முதலில் உடல் சுத்தம் மிக அவசியம். இது இருவருக்கும் மிகவும் முக்கியம் தினப்படி வேலைகளை முடித்துவிட்டதும், படுக்கப் போகும் முன்னர் குளிப்பது பொதுவாகவே நல்லது. உடல் சோர்வு குறையும். புத்துணர்ச்சி பெறும். தூக்கம் நன்றாக வரும் என்று பல லாபங்கள் இருக்கின்றன.
தாம்பத்திய உறவுக்குக் கூடுதல் ஆரம்ப உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.
அடுத்ததாக, படுக்கையறை மற்றும் சுற்றுப்புறம். இதில், நமது கட்டுப்பாட்டில் இருப்பது படுக்கையறை மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வது நல்லது. நமது கட்டுக்குள் இருப்பதை, என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
கசங்கிய, அழுக்கடைந்த, மெத்தை அல்லது தரைவிரிப்பு, போர்வை, தலையணை உறை போன்றவை மனநிலையை மாற்றக்கூடியவை.
அது ஆணுக்கோ, பெண்ணுக்கோ சங்கடத்தைத் தந்தால், தாம்பத்தியம் அதற்கேற்றாற்போலக் குறையும்.
ஆணுக்குக் குறையாக இருந்தால், சொல்ல முடியாது என்றாலும், சட்டென்று மனதில் சிறு அதிருப்தி உண்டாகும். குறைந்த காற்றழுத்தம் உருவாவதைப் போல ஆத்திரமாகப் பரவும். இது செயல்பாட்டு ஆர்வத்தைச் சிறிது மழுங்கச் செய்யும். இயல்பான முழுமைத்தன்மை இருக்காது.
பெண்ணுக்கு அதிருப்தி இருந்தால், முதலில் ‘இதை மறந்துட்டனே..? என்ற அலுப்பில் துவங்கும். ‘அவன் என்ன நினைக்கிறான்னு தெரியல…’ என்ற எண்ணமும் அப்படி நினைக்க வேண்டியதின் அழுத்தத்தால் ஏற்படும் ஆத்திரமும் மனதில் அமைதியின்மையை உருவாக்கும். உறவில் ஆர்வம் குறையும். எரிச்சலை வரவழைக்கும்.
இப்படியெல்லாம் மனதில் மாற்றங்கள் நிகழ்கிறது என்ற புரிதல் பல பேருக்கு இருக்காது. உடல் வேட்கை மனதில் இருக்கும்போது, இது போன்ற நுணுக்கமான, விரிசல்கள் முன்னுக்கு வராது. ஆனாலும் அதன் பாதிப்புகள் நிச்சயமாக உறவில் கலந்தே இருக்கும்.
அடுத்ததாகச் சுற்றுப்புறம். இதில், பக்கத்து அறையிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து ஆரம்பித்து, எல்லாமே உறவின் தனிமையில் தலையிடக்கூடிய தன்மைகள் கொண்டவை.
ஆனாலும், நமது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றி என்னதான் குறை, ஆத்திரம், அதிருப்திப்பட்டாலும் பலன் எதுவும் இருக்கப் போவதில்லை.
இப்போது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம் என்று இல்லை. ஆனாலும் அடுக்ககங்கள், குடித்தனங்கள், சாலைகள் அருகில் உள்ள வீடுகள் போன்றவை இது போன்ற பிரச்சினைகளை எழுப்பலாம். அதை உதாசீனம் செய்வதுதான் சிறப்பானது. ’நமது அறையில் நாம்’ என்பதை மட்டும் கணக்கில் எடுத்து, செயல்படுவதுதான் அறிவுடமை.
அடுத்ததாக, உடல் சோர்வு, சுகவீனம். இவை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. படுக்கைக்கு வரும் கடைசி நொடிவரை வாட்ஸ் ஆப், முகநூல் கணிணியில் அலுவலக பணி என்று பார்த்துவிட்டு, அதனால் ஏற்படும் கண் உறுத்தலை, ‘தூங்கினால் சரியாகப் போகும்’ என்ற மனநிலையில் வந்தால், தாம்பத்தியம் ஒரு ‘வேலையாக’ மாறும்.
தாம்பத்தியம், உடலையும், மனதையும் ரிலாக்சாக மாற்றும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம், அந்த நிலை அடைய உடலில் தெம்பு வேண்டும் அல்லவா?
படுக்கைக்கு ஒரு நொடி முன்னர்வரை சமூக வலை தளங்களில் உலாவும்போது, அதிலிருந்து பெற்றதும் பார்த்ததுமான செய்திகள், தகவல்கள், வீடியோக்கள் ஆகியன மனதில் சுற்றிக்கொண்டிருக்கும்.
அந்தச் சமயத்தில் முழுமையான தாம்பத்தியம், அதாவது, மனமும், உடலும் ஒன்றும் நிலையிலுள்ள தாம்பத்தியம் சாத்தியமே இல்லை. குறைந்த பட்சம், சமூக வலைதள உலாவலை முடித்துக் கொண்ட பின் செல்பேசியை அணைத்துவிட்டு, குளித்துவிட்டாவது படுக்கைக்குச் செல்லுங்கள்.
அதேபோல, சாதாரணமான உடல் சுகவீனம் இருந்தால் ‘பரவாயில்ல, தப்பா நெனைச்சிப்பாங்க’ என்ற நினைப்பில், வலிகள், உடலின் சமச்சீரற்ற நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ‘களத்தில்’ இறங்காதீர்கள்.
சரியாக விளையாட முடியாது. உங்களுக்கும், மற்றவருக்கும் அதிருப்தியில் முடியும். ஆரம்பத்தில் சொல்லுவது நல்லது. அதை மற்றவரால், ஆற்றுப்படுத்த முடிந்து, அதன் விளைவாக உறவு இருந்தால், இருவருக்குமே நல்லது.
எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, மன விருப்பம் அறிந்து செயல்படுவது. அன்றைக்கு, அந்தச் சமயத்தில் உறவு வேண்டுமா என்பதிலிருந்து, எப்படிப்பட்ட விருப்பங்கள் என்பது வரை, எல்லாமே மனம் சார்ந்ததுதான்.
பாலுறவு என்பது 80% மனம் சார்ந்த விஷயம் என்பதை மறக்காதீர்கள். உடலில் உணர்வு தோன்றுவதே, மனதில் தோன்றும் உணர்வினால்தான் என்பதை நினைத்துச் செயல்படுங்கள்.
இவை தவிர, தாம்பத்தியம் வலுப்பெற நெருக்கம் அதிகமாதல் அவசியம். நெருக்கம் என்பது சில வகைப்பட்டது. அதைப் பார்க்கலாம். இருவரும் ஒன்றாக, தனியாக, பிற வேலைகளில், மனமோ, உடலோ ஈடுபடாமல் இருப்பது.
அதாவது, எதிரெதிரே உட்கார்ந்து வாட்ஸ் ஆப் பார்ப்பது அல்ல. முதலில் பக்கத்தில் உட்காருவதைப் பழக்கப்படுத்துங்கள்.
அடுத்தது உணர்வுபூர்வமான நெருக்கம். இது பரஸ்பர எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வது. பரஸ்பர உறவினர்கள் மீது குறைகளைப் பட்டியிலிட நேரம் இது இல்லை.
உங்களைப் பற்றி, உங்கள் இணையருக்குத் தெரியப்படுத்த நினைத்தால், அதை செய்வதற்கு. அதை, இயல்பாக, சரியாக, தெளிவாக, சாதாரண வார்த்தைகளில் சொல்வது முக்கியம்.
‘எனக்கு அது சுத்தமா பிடிக்காது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து, ‘எனக்கு இதெல்லாம் சங்கடமான விஷயங்கள்’ என்று சொல்லப் பழகுங்கள். மற்றவரிடத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பாராட்டுகள், உத்வேகப் படுத்தல்கள் போன்றவையும் இருப்பது முக்கியம்.
அடுத்ததாக, உடல் உணர்வுகள். கைகளைப் பற்றுதல், தோளில் சாய்ந்திருத்தல் ஆகியவற்றிலிருந்து, நெருக்கத்தைக் கூட்டும் விஷயங்களைச் செய்வதை இயல்பாக்குவது. இவை நடந்தாலே தாம்பத்தியம் வலுப்பெற ஆரம்பிக்கும்.
இப்படி செய்வதால், உங்களது மன இறுக்கங்கள் குறைவதை நீங்களே உணர்வீர்கள். அதனால் உடல் நலமும் மேம்படும். உங்களது தனிமை உணர்வைப் போக்கும். நீண்ட காலம் வாழ வைக்கும்.
தாம்பத்திய உறவு என்பதில் என்பது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க, தம்பதியரிடத்தில் கூடுதல் ஒற்றுமை உண்டாக எனப் பல லாபங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் தனிப்பட்ட விதத்திலும், தாம்பத்திய உறவு பல விதங்களில் லாபகரமானது.
உணர்வு ரீதியாகப் பார்த்தால், மனதில் மகிழ்ச்சி உணர்வு ஏற்படும். திருப்தியான உணர்வு உருவாகும். மன இறுக்கத்தை நிச்சயமாகக் குறைக்கும். தன்னைப் பற்றிய சுய மதிப்பு உயரும்.
உடல் ரீதியாகவும் லாபங்கள் இருக்கின்றன. தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல விதமான சாதாரண வலிகள் தாம்பத்திய உறவுக்குப் பின் மறைந்துபோகும் அல்லது குறைந்தபட்சம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உங்களது இதயத்தின் இயக்கம் கூடுதல் வலுப்பெறும் அல்லது மேலும் சீராக இயங்கும்.
இந்த உறவினால் தூண்டப்படும் ஹார்மோன்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வலுவூட்டுகின்றன.
உடலின் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பதை நிச்சயம் உணரலாம். இவை அனைத்தும் ஆய்வுகளில் தெரியவந்த முடிவுகள் என்பதை மறக்காதீர்கள்.
திருமணத்தின் ஆணி வேர் போன்ற தாம்பத்தியத்தை முதலில் மதித்து, அதில் ஈடுபட்டாலே பல பிரச்சினைகள் வராது. அப்படியே வந்தாலும் சிக்கல்களாக மாறாது.
இந்த அளவுக்கு முக்கியமான வாழ்க்கையின் மைய அம்சத்தைக் கெடுக்கக்கூடியவை எவை என்பதை இனி பார்க்கலாம்.
(தொடரும்)
– தனஞ்செயன், மனநல ஆலோசகர்