– மாநில தேர்தல் ஆணையம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27,003 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில், போட்டியின்றி தேர்வு, தேர்தல் நிறுத்தம், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு நடக்காதது போக, 23 ஆயிரத்து 998 பதவிகளுக்கு இன்றும், 9-ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இப்பதவிகளைக் கைப்பற்ற, 79 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல, 28 மாவட்டங்களில் காலியாகவுள்ள 418 பதவிகளுக்கும், 9-ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இப்பதவிகளைக் கைப்பற்ற 1,386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று நடக்கும் முதற்கட்டத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 17 ஆயிரத்து 130 போலீசாரும், 3,405 ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
கொரோனா விதிகளை முறையாக பின்பற்றி, தேர்தல் நடத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5:00 மணிக்கு பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளும் ‘சிசிடிவி’ வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து ‘ஆன்லைன்’ வாயிலாக வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.