நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.
கொள்கைகளைவிட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வந்துவிட்டது. எந்தக் கட்சி அதிக பணம் கொடுக்கிறதோ, அவர்களுக்குத்தான் வாக்களிப்போம் என்ற நிலைக்கு மக்களில் சிலர் வந்துவிட்டனர்.
கொள்கைகளைவிட பணமும், அதனால் செய்யும் பிரம்மாண்ட பிரச்சாரங்களுமே வெற்றியைத் தரும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகள் வந்துவிட்டன.
இந்தச் சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு ரூபாயை செலவழித்திருக்கிறது என்ற ஆய்வில் ஃபேக்ட்செக்கர் என்ற நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள் ரூ.6,500 கோடியை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செலவு செய்திருப்பது தெரியவந்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த செலவுக் கணக்குகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் குறைந்த அளவில்தான் செலவுக் கணக்கைக் காட்டும் இப்படி காட்டப்பட்ட குறைந்த செலவுக் கணக்கே இப்படியா என்று இந்த ஆய்வின் முடிவுகள் வாயைப் பிளக்க வைக்கின்றன.
இந்த கணக்கின்படி இப்போதைக்கு இந்தியாவின் நம்பர் 1 கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,600 கோடியை தேர்தல்களுக்காக செலவு செய்துள்ளது.
அரசியல் கட்சிகள் மொத்தமாக செய்த செலவுகளில் சுமார் 56 சதவீதத்தை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே செய்துள்ளது.
இந்த 3,600 கோடி ரூபாயில் ரூ.2,000 (54.87 சதவீதம்) கோடியை விளம்பரங்களுக்காகவும், பிரச்சாரக் கூட்டங்களுக்காகவும் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது.
தலைவர்களின் பயணங்களுக்காக 15.29 சதவீதம் பணத்தையும், வேட்பாளர்களின் செலவுக்காக 11.25 சதவீத பணத்தையும், பேரணிகளுக்காக 7.2 சதவீத பணத்தையும் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சி, கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல்களுக்காக ரூ.1,400 கோடியை செலவு செய்துள்ளது. இது மொத்தமாக அரசியல் கட்சிகள் செய்த செலவில் 21.41 சதவீதமாகும்.
இந்த 1,400 கோடி ரூபாயில் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்காக மட்டும் ரூ.560 கோடியை (மொத்த செலவில் 40.08 சதவீதம்) காங்கிரஸ் செலவு செய்துள்ளது. தலைவர்களின் சுற்றுப் பயணங்களுக்காக ரூ.250 கோடியை அக்கட்சி செலவு செய்துள்ளது.
இப்படி பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய 2 கட்சிகள் மட்டுமே தேர்தல் சந்தையில் 77 சதவீத பணத்தை செலவு செய்துள்ளன.
இதைத்தொடர்ந்து சமஜ்வாதி கட்சி (3.95 சதவீதம்), திமுக (3.6 சதவீதம்), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (2.17), பகுஜன் சமாஜ் கட்சி (2.04 சதவீதம், திரிணாமூல் காங்கிரஸ் (1.83 சதவீதம்), அதிமுக (1.30 சதவீதம்) ஆகியவை தேர்தல் சந்தையில் அதிக பணத்தை செலவு செய்த கட்சிகளாக உள்ளன.
இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிகிறது. இந்திய ஜனநாயகத்தில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் கொள்கைகளைவிட பணத்தைத்தான் அதிகம் நம்புகிறார்கள் என்பதே அது.
-பிரணதி