மெட்டில் புதுமை… பாட்டில் இனிமை!

பாடலுக்காக மட்டுமே ஓடிய படங்கள் பல உண்டு.

ஒரு படத்தில் பாடலுக்கான விஷூவல் அவ்வளவு உவப்பாக இல்லாதபோதும், பாடல் ஹிட் ஆவது அரிதாக நடக்கும்.

அப்படியான ஒரு பாடல் தான், எஸ்.பி.பி.யின் இனிய குரலில் பாடப்பட்ட ”இளமை எனும் பூங்காற்று” பாடல்!

1979-ல் வெளிவந்த ‘பகலில் ஒரு இரவு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலில் ஸ்ரீதேவி, ரவிகுமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். இது மாண்டேஜ் டைப் பாடலாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

இதில் நடித்த ரவிகுமார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். நிறைய மலையாளம், தமிழ்ப் படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துள்ளார்.

எனினும் தமிழ் டிவி சீரியல்கள் தான் தமிழ்நாட்டில் இவருக்கான தனித்த அடையாளத்தைக் கொடுத்துள்ளன.

‘மர்ம தேசம்’ தொடரில் தொடங்கி, சித்தி, செல்வி, வாணி ராணி, செல்லமே, சந்திரலேகா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இப்பாடலுக்கான காட்சியைவிட, ஆடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டது. திரும்பத் திரும்பக் கேட்க வைத்தது. இந்தப் பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார்.

இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி ஓரிரு ஆண்டுகளே ஆன சூழலில், இந்தப் பாடலில் சற்றுப் புதுமையைப் புகுத்தியிருப்பார்.

அதுகுறித்து இளையராஜாவே ஒரு இசைக் கச்சேரியில் பேசியுள்ளார்.

இப்பாடலை எழுத கண்ணதாசனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். பாடலுக்கான டிஸ்கஷன் சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடக்கிறது.

காலையில் 10.30 மணிக்கு கண்ணதாசன் வருகிறார். கண்ணதாசனிடம் பாடலுக்கான சிச்சுவேஷனை இளையராஜா கூறுகிறார்.

இளையராஜா கூறுவதைக் காதில் வாங்காதது போலவே கண்ணதாசன் இருக்கிறார்.

ஆனால் உண்மையில் முழுமையாக அதனை உள்வாங்குகிறார். பின்னர் பாடலின் பல்லவிக்கான மெட்டை இளையராஜா வாசித்துக் காட்டுகிறார். கண்ணதாசனுக்கோ சட்டெனப் பிடிபடவில்லை.

ஏனென்றால் பொதுவாக பல்லவியென்றால் ஒரே மாதிரியான சந்தத்தில் அடுத்தடுத்த வரிகள் அமைந்திருக்கும்.

ஆனால் இப்பாடலுக்கான பல்லவியில் அடுத்தடுத்த வரிகளை வெவ்வேறு நீளத்தில்… சந்தத்தில் அமைத்திருந்தார். எனவே கண்ணதாசன் இன்னொரு முறை வாசித்துக் காட்டும்படி கேட்கிறார்.

இளையராஜா வாசிக்க வாசிக்க, ஒவ்வொரு மெட்டுக்குமான வரிகளை கவிஞர் சொல்லி முடிக்கிறார்! பாடல் ஓகே!

“இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை… ஒரே ராகம்!
ஒரே வீணை… ஒரே ராகம்!”

இதில் இன்னொரு புதுமை, வழக்கமாக ஒரு பல்லவி, இரண்டு சரணம் என்றிருக்கும் முறையை மாற்றி, மூன்று சரணங்களை அமைத்திருப்பார்.

அதேவேளை, பாடலின் நீளம் அதிகரித்திடாதபடி, ஒவ்வொரு சரணத்துக்கும் அடுத்து வரும் பல்லவி ரிபீட்டில், ‘இளமை எனும் பூங்காற்று’ என்ற வரியை மட்டுமே பாடும்படி வைத்திருப்பார்.

இறுதியாக வரும் ரிபீட் மட்டுமே முழுமையான பல்லவியாக இருக்கும்.

தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா!

                (இளமை எனும்…)

அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைக்க கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும்முன் விழுந்தாள்
எந்த உடலோ என்ன உறவோ

                  (இளமை எனும்…)

மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்!
ஒரே வீணை ஒரே ராகம்!

  • நன்றி முகநூல் பதிவு.
Comments (0)
Add Comment