சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மட்டுமே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நடிப்பைத் தாண்டி பேசப்படுபவர்களாகவும் கொள்கைகளை விடாமல் பின்பற்றுபவர்களாகவும் இருந்த அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா.
மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்ற எம்.ஆர்.ராதா, நகைச்சுவை, வில்லன், கதாநாயகன் என தன் திறமையை பலவழிகளில் நிரூபித்தவர்.
பெரியாரின் கருத்துகளை நாடகங்கள் மூலமும் பின்னர் தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலமும் பரப்பியவர். பெரியாரின் போர்வாள் என்று அழைக்கப்பட்டவர்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஆர்.ராதா பிறகு அதைவிட்டு நாடகத்துக்குத் திரும்பி,
சினிமாவே வேண்டாம் என்று இருந்தார்.
அவரை, சிவாஜி உட்பட பலர் மீண்டும் சினிமாவில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போதுதான் அவர் நடத்தி வந்த திருவாரூர் தங்கராசுவின் ’ரத்தக் கண்ணீர்’ நாடகத்தை சினிமாவாக்க வந்தார் ’பராசக்தி’ தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்.
அப்போது, தான் சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சில கண்டிஷன்களை போட்டார் எம்.ஆர்.ராதா.
ஓ.கே.சொன்னார் அவர். ஏனென்றால், எம்.ஆர்.ராதா நடிப்புக்காகத்தான் ’ரத்தக் கண்ணீர்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது அவருக்குத் தெரியும்.
தனக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டார் எம்.ஆர்.ராதா. இந்தப் படம் உருவாவதற்கு 2 வருடத்துக்கு முன் (1952) வெளியான ’பராசக்தி’ படத்துக்கு சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட மாத சம்பளம் ரூ.250/-தான்.
ராதா கேட்டதைக் கொடுக்க சம்மதித்தார் தயாரிப்பாளர்.
அடுத்து, படத்தில் இடம்பெறும் வசனங்களை மாற்றக் கூடாது, பகலில் நாடகங்களில் நடிப்பதால், இரவில்தான் ஷூட்டிங்கில் கலந்துகொள்வேன் என்பது உட்பட பல கண்டிஷன்களைப் போட்டார் ராதா. அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்தார் தயாரிப்பாளர்.
பிறகு காந்தா கேரக்டரில் நடிப்பதற்கு எந்த நடிகையும் முன் வரவில்லை. எம்.என்.ராஜம் முன் வந்தார். அவருக்கு முதலில் தயக்கம் இருந்தது. பிறகு இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு
கேட்டுக் கொண்டதால் நடிக்க சம்மதித்தார்.
தனி மனித ஒழுக்கத்தையும் அதை மீறினால் என்னவாகும் என்பதையும் பணத்திமிர் என்ன செய்யும் என்பதையும் பெற்றத் தாயை மதிக்கவும் மனைவியை நேசிக்கவும் வேண்டும் என்பதை சுவாரஸ்யமாகவும் ஆணித்தரமாகவும் சொன்ன படம், ரத்தக் கண்ணீர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவாரூர் தங்கராசுவின் பளீர் வசனங்கள், இன்றளவும் பேசப்படுகின்றன.
இந்தப் படத்தில் ஆண்டி ஹீரோவாகத்தான் எம்.ஆர்.ராதாவின் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் ஒரு ஹீரோவுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களும் விசில்களும் ராதா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் அவர் நடிப்புக்கும் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
1954 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், எம்.ஆர்.ராதா, மோகன சுந்தரமாகவும் அவர் மனைவி சந்திராவாக ஸ்ரீரஞ்சனியும், நண்பன் பாலுவாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும் காந்தாவாக
எம்.என்.ராஜமும் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் ரத்தக்கண்ணீருக்கும் இருக்கிறது முக்கியமான இடம்.
– அலாவுதீன்