– கோபப்பட்ட காமராஜர்
காமராஜரை மறுபடியும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் எழுத்தாளரான சாவி. ‘துக்ளக்’ பத்திரிகையை துவக்கிவிட்ட காலகட்டம் அது.
“என் வீட்டில் காமராஜரை ஒரு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர் உன்னையும் கூப்பிடச் சொன்னார்” என்றார் சாவி.
“என்னையா? ஏற்கனவே ஒரு தடவை தகராறாப் போயிடுத்து சார்”- சொன்னேன்.
“அதெல்லாம் தெரியும்.. அவர் கூப்பிடுறார்… நீ கண்டிப்பா வா..” சாவி வீட்டுக்குப் போனேன்.
“என்ன.. இன்னும் அந்த அதிகப் பிரசங்கித்தனம் எல்லாம் இருக்கா?” – என்று போனதுமே கேட்டார் காமராஜ். நான் சிரித்தபடி அசடு வழிந்தேன்.
அதற்கு முன்னால் நாடகம் நடந்தபோது அவ்வளவு பேருக்கு மத்தியில் நான் பேசியது எதையும் அவர் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. எவ்வளவு பெரிய மனசு!
“அந்த அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் அப்படியே இருக்கட்டும், விட்டுர வேண்டாம். அதுதான் நல்லது.. அது வேணும்..”
அப்புறம் அவருடன் பேச ஆரம்பித்து நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். சாவி எங்களைத் தனியே விட்டுவிட்டு போய்விட்டார்.
நான் பத்திரிகை ஆரம்பித்ததைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். எங்க அப்பாவைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
“ஐயரே பிடிவாதக்காரர்தான்… அவருடைய பிள்ளை நீ எப்படி இருப்பே…?” என்றார் உரிமையுடன்.
பேச்சு ரொம்பவும் சுமூகமாக இருந்தது.
“இனி அடிக்கடி சந்திப்போம்” என்றார். எங்களுக்கு வெகு இணக்கமான உறவு நிலவியது.
அதற்குப்பிறகு அடிக்கடி அவரைச் சந்தித்தேன். அவரே போன் பண்ணுவார். நானும் பண்ணுவேன். மிகவும் இயல்பாக எந்த விதமான அதிகாரத் தோரணையும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார். அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். பேச்சு மிகவும் அன்னியோன்யமாக இருக்கும்.
ஒருமுறை என்னிடம் கேட்டார். “எத்தனை முறை இந்த வீட்டுக்கு வந்திருப்பீங்க?”
“இருபது தடவைக்கு மேலே இருக்கும் சார்.”
“அவ்வளவு தடவை வந்திருக்கீங்க.. என்னைக்காவது உங்களை உட்கார்த்தி வைச்சு சாப்பாடு போட்டிருக்கேனா?”
“இல்லை சார்.”
“எப்படிப் போடுறதுன்னேன்.. நான் சாப்பிடுறதே ஓசிச் சாப்பாடு தானே… நான் என்ன சம்பாதிச்சா சாப்பிடறேன். ஏதோ டி.வி.எஸ் காரங்க அரிசி அனுப்புறாங்க. அதை சமைச்சுச் சாப்பிடறேன்.. நான் சாப்பிடுறதே தர்மச் சாப்பாடு. இதுல இன்னொருத்தனுக்கு என்ன உபச்சாரம்னேன்…?” இப்படித்தான் கேஷுவலாகப் பேசுவார்.
எவ்வளவோ மனிதர்களைச் சந்தித்த அவருக்கு யாரையும் விரைவில் எடைபோடும் திறமை இருந்தது. அது அனுபவம் அவருக்குக் கற்றுத் தந்த பாடம்.
இதற்கிடையில் எங்க நாடகங்களுக்கு வந்திருக்கிறார். தலைமை வகித்துப் பேசியிருக்கிறார்.
1971 தேர்தல் நேரம்.
காமராஜுக்கு வேண்டிய லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி மூலம் எனக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. தென் சென்னையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் என்னை வேட்பாளராக நிற்கச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். இருந்தும் அதைப் பற்றி நேரடியாக காமராஜ் என்னிடம் பேசவில்லை.
71 தேர்தலில் காங்கிரசுக்காக நான் பிரச்சாரம் பண்ணினேன். தமிழ்நாடு முழுக்கப் பயணம். காலையில் தொடங்கி நள்ளிரவு தாண்டிப் பிரச்சாரம் நடந்தது. நல்லக் கூட்டம். அந்தச் சமயத்தில் சென்னை மெரினா பீச்சில் கூடிய கூட்டம் அளவிட முடியாத அளவுக்கு இருந்தது.
சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய ம.பொ.சி. எனக்குக் கூடிய கூட்டத்தைப் பற்றி, “ஒரு சின்னப் பையன் பேசுறான். அதுக்குக் கூடுறீங்க… எங்களுக்கெல்லாம் வர மாட்டேங்கறீங்க..” என்று பேசும் அளவுக்குப் போனது. என்னுடைய பிரச்சாரத்தைக் காமராஜரும் வெகுவாகப் பாராட்டினார்.
போகிற வழியில் எல்லாம் ஜனங்கள் “பெரியவர் வந்துடுவாரா?” என்று கேட்டதைப் பார்த்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. கூடிய கூட்டத்தைப் பார்த்ததும் எப்படியும் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்தேன்.
அதற்கு நேர் எதிர்மாறாக காங்கிரஸ் தோற்றுவிட்டது. கூட்டத்தைப் பார்த்து நாம் ஏமாந்துவிடக் கூடாது என்று அதைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். காங்கிரஸ் தோற்றபோது தேர்தலின்போது கையில் வைக்கப்பட்ட மை ரஷ்ய மை என்றெல்லாம் பேச்சு இருந்தது. நானும் அதுபற்றிக் காமராஜரிடம் கேட்டேன்.
“தோத்துப் போய்விட்டு இந்த மாதிரி எல்லாம் பேசுறது அசிங்கம். தோத்துட்டோம். இதைப் புரிஞ்சுக்கலனா அடுத்த முறையும் தோற்க வேண்டியதுதான். ஆதாரம் இல்லாம மத்தவங்க மேலே பழி போடக் கூடாது” என்றார் காமராஜ். எதார்த்தத்தை அந்த அளவுக்கு மிகை இல்லாமல் புரிந்து கொண்டிருந்தார்.
அதைப்போல ராஜாஜியின் சுதந்திராக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி ஏற்பட்டது என்று அப்போது சிலர் சொன்னதையும் கண்டித்தார்.
தன்னைப் பற்றி யாராவது புகழ்ந்து பேசுவது அவருக்குப் பிடிக்காது. அதை அறவே வெறுத்து நிறுத்துவார். புகழ்ச்சியின் பாதகங்களைப் பற்றி அவருக்குக் கூடுதலாகவே தெரியும்.
காந்தி ஜெயந்தி அன்று அவருடன் இணைந்து ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். தலைவர் ஒருவர் காமராஜரைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, “என்ன இவன்.. என்னைப் பற்றியே பேசிட்டு இருக்கான்” என்று என்னிடம் முணுமுணுத்தார். இருந்தும் புகழ்வது தொடர்ந்தது. சட்டென்று எழுந்தார் காமராஜ்.
“போதும்ன்னேன்… நிறுத்து.. இந்தக் கூட்டம் எதுக்கு நடக்குது? என்னைப் பத்தி எதுக்குப் பேசுறே? காந்தியைப் பத்திப் பேசு” என்று சொன்னதும் ஆடிப்போய்விட்டார் பேசியவர்.
தனிப்பட்ட முறையில் அரசியல் விவகாரங்களைப் பற்றி அவரிடம் விவாதிக்கும்போது குறைகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாகக் கேட்டுக் கொள்வார். பதிலும் சொல்லுவார். வயதில் வித்தியாசம் இருக்கும் ஒருவரிடமிருந்து ஒரு விஷயத்தைப் பெறுவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இந்த மாதிரி எத்தனையோ அசாதாரண குணங்கள் அவரிடம்.
– மணா