எட்டு மணி நேரத்தை என்ன செய்யலாம்?

தொழில் நுணுக்கத் தொடர்

வாழ்க்கை ஒரு முறைதான். வாழ்கிற காலத்தில் நல்ல பணக்காரனாக வாழ்ந்துவிட வேண்டும்.

இது பலருடைய ஆசை.

“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்குப் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதும் உண்மை இந்த இரண்டையும் சேர்த்து பாருங்கள்.

பொருளும் இருந்து, புகழும் இருந்தால், அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்.?

எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அது ஒரு சராசரி வாழ்க்கை. நிறைய காசு, நிறைய புகழ் பெற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்.?

முதலில் பணம் சம்பாதிப்பது பற்றிப் பார்ப்போம்.

உலகத்தில் மிகப் பெரிய பணக்காரருக்கும்,  அறிஞருக்கும், சாதாரண மனிதனுக்கும் பொதுவானது நேரம், எல்லோருக்குமே 24 மணி நேரம் தான். அதில், 8 மணி நேரம் தூங்குகிறோம். 8 மணி நேரம் வேலை பார்க்கிறோம். மீதி 8 மணி நேரம் தான் நம் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது.

மீதி 8 மணி நேரத்தை சாதாரண மனிதர்கள் வீணாகக் கழிக்கின்றனர். பயணம், வெட்டிப் பேச்சு, தொலைக்காட்சி பார்ப்பது, சம்பந்தமில்லாத அரட்டைகளில் ஈடுபடுவது என்று வீணடிக்கின்றனர்.

உங்கள் திறமையைப் பயன்படுத்தி அந்த 8 மணி நேரத்தைச் சரியாக செலவழித்தால், நிறையப் பணம் ஈட்டலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கம்பெனியில் கணக்காளராகப் பணியாற்றுகிறீர்கள் என்றால், மீதி 8 மணி நேரத்தில் வேறு 2, 3 கம்பெனிகளில் கணக்கு எழுதிக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். இது எவரும் பின்பற்றக் கூடிய சாதாரண விஷயம். டீச்சராக இருந்தால் வீட்டிலேயே டியூஷன் எடுத்து சம்பாதிக்கலாம்.

நேரம் இப்படி என்றால், வாய்ப்புகளைப் பயன்படுத்துவது அடுத்த வழி. சொந்த வீடு இருந்தால், மொட்டை மாடியில் ஒரு ஷெட் கட்டி அதை டியூஷன் நடத்த, யோகா நடத்த, தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுக்க வாடகைக்கு விடலாம்.

வீட்டுக்கு வெளியில்தான் இடம் இருக்கிறது என்றால், அதில் ஒரு ஷெட் போட்டு ஒரு குடோனுக்கு, கார் ஷெட்டுக்கு வாடகைக்கு விடலாம். ஏதோ ஒரு வகையில் வருமானத்தை ஈட்ட வேண்டும்.

வீடும் இல்லை, இடமும் இல்லை என்றால், இடம் வைத்திருப்பவரிடம் இடத்தை வாடகைக்கு எடுத்து அதைப் பயன்படுத்தலாம்.

ஆண்கள், பெண்கள் தங்குகிற ஹாஸ்டல் நடத்தலாம். மெஸ் நடத்தலாம். ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக சிந்தித்து வருமானத்தை ஈட்ட வேண்டும்.

ஒருவர் விவசாயம் செய்து வந்தார். 2 மாதத்திற்கு ஒரு முறை நல்ல விளைச்சல் வந்தவுடன் பக்கத்து சந்தைக்கு கொண்டு சென்று விற்பார்.

தரமான பொருளை நியாயமான விலைக்கு விற்றதால், அவரிடம் உள்ள சரக்கு, சட்டென்று தீர்ந்து விடும். சரி, சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன செய்யப்போகிறோம்? என்று சந்தையிலேயே இருந்து அவரின் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சற்று தாமதமாக வருபவர்கள் கேட்கும் பொருளை நண்பர்களிடம் இருந்து வாங்கிக் கொடுத்தார். அதில் அவருக்குக் கமிஷன் வந்தது. அடடா, நாம் விளைவித்த பொருட்களை விற்றுவந்த காசைவிட இந்தக் காசு அதிகமாக இருக்கிறதே என்று தினம் சந்தைக்கு போக தொடங்கினார்.

நண்பர்களிடம் வாங்கி, வாங்கி விற்கத் தொடங்கினார். பிறகு இவரே ஸ்டாக் வைத்து விற்கத் தொடங்கினார். கடை போட்டார். வியாபாரம் பெருகியது. அவ்வளவுதான் விவசாயம் ஒரு பக்கம் வியாபாரம் ஒரு பக்கம் என செல்வந்தராகிவிட்டார்.

இதற்கு நம்மிக்கையாக, நாணயாக இருந்தால் போதும். ஒழுங்காக சேவை செய்தால், மக்கள் நம்மைத் தேடி வருவார்கள்.

இன்னொரு வியாபாரி 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சந்தைக்குத் தினமும் உருளைக் கிழங்கை எடுத்துச் செல்வார். இவரைப் போலவே சிலர் தினமும் உருளைக் கிழங்குகளை டிரக்கில் ஏற்றி சந்தைக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

சந்தைக்குச் சென்றவுடன், பெரிது, சிறிது, நடுத்தரம் என சைஸ் வாரியாகப் பிரித்து உருளையைக் கொட்டி வைப்பார்கள். இதற்கே தினமும் 2 மணி நேரம் ஆகிவிடும். அதன்பிறகுதான் வியாபாரம் தொடங்கும்.

ஒருவர் பார்த்தார். இந்த 2 மணி நேரத்தை மிச்சப்படுத்தி நான் முதலில் விற்பனை செய்தால், கூடுதல் காசு வருமே என்று யோசித்தார்.

அடுத்த நாள் எல்லா உருளைக் கிழங்குகளையும் எடுத்து டிரக்கில் போட்டு 10 கி.மீ. தூரத்தை இருப்பதிலேயே மேடு, பள்ளமான சாலையில் வண்டியை செலுத்தச் சொன்னார்.

வண்டி மேடு பள்ளமான சாலையில் சென்ற போது அந்த டிரக் குலுங்கி, குலுங்கி சிறிய உருளைக்கிழங்கெல்லாம் அடியில் போய்விட்டது. நடுத்தர உருளைக்கிழங்கெல்லாம் நடுவில் நின்றுவிட்டது. பெரிய உருளை மேலேயே நின்றது.

இந்தப் பிரிக்கும் முறை வண்டியிலேயே நடைபெற்று விட்டது. இதனால் சந்தைக்குப் போன உடனேயே முதலில் பெரிய உருளைக் கிழங்கை எடுத்து விற்பனை செய்தார். பிறகு நடு உருளைக் கிழங்கை எடுத்து விற்றார்.

கடைசியில் சிறிய உருளைக் கிழங்கு… இரண்டு மணி நேரம் மிச்சம் காரணமாக, அவர் மற்றவர் சரக்கைப் பிரித்து அடுக்கும் முன்னரே சந்தையை விட்டு காலி செய்யும் அளவுக்கு வேகமாக விற்றுவிட்டார். நிறையக் காசும் சம்பாதித்தார். இது இயற்கையான ஒரு புதிய யுக்தி.

ஒருவர் உணவகம் நடத்தி வந்தார். அங்கு இருவகை வாடிக்கையாளர்கள்; சாப்பிட வருவோர், பார்சல் வாங்கிச் செல்வோர்.

உணவக உரிமையாளர் ‘டோர் டெலிவரி’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி அதற்கு இரு ஊழியர்களைப் பணியமர்த்தினார். அதிக ஆர்டர்கள் வந்தன.

சாம்பார், குழம்பு தனியாகக் கேட்டாலும் கிடைக்க ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் டிபன் சப்ளை என்று அறிவித்தார்.

டீ சாப்பிடுபவர்களைக் குறிவைத்து, உணவக வாசலில் போண்டா, வடை, டீ விற்பனை செய்தார்.

மதிய நேர சாப்பாட்டுக்கு பேச்சுலர் இளைஞர்களைக் குறிவைத்து மாதாந்திர அடிப்படையில் சாப்பாடு அளித்தார். இது நிரந்தரமாக கூடுதல் வருமான வழியைத் திறந்து விட்டது.

“உங்கள் உணவகக் குழம்பு மசாலா செம தூள்!” என்றார் ஒருவர்.

மசாலா பாக்கெட்கள் கல்லாவில் இடம்பிடித்தன. மதிய நேரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அருகில் உள்ள அலுவலகத்திற்கு டிபன் பாக்சில் கொண்டு சென்று கொடுப்பதற்காக லஞ்ச் பாக்ஸ் சர்வீஸ் என்று ஆரம்பித்தார்.

இப்படி மக்களின் சோம்பேறித்தனத்தில் இருக்கின்றன பல வியாபாரத் தந்திரங்கள்.

அவர் கடையில் கொஞ்சம் காலியிடம் இருந்தது. ஒரு நாள் ஒருவர் ஸ்வீட் கேட்டார். இவர் கடையில் ஸ்வீட் இல்லை. உடனே இவர் 10 தெரு தள்ளி ஸ்வீட் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் “எங்கள் கடையில் இடம் தருகிறேன். இங்கு நீ ஸ்வீட் கடை போட்டுக்கோ…” என்று உள்வாடகைக்கு விட்டார்.

பாருங்களேன், ஒரு ஹோட்டல்… எத்தனை வருமான வழிகள். யுக்திகளை மாற்றும் போது, வருமான வழிகளை அதிகரிக்கும் போது, வருமானம் கூடுகிறது. வேகமாக பணக்காரரானார். இன்னும் 4 இடங்களில் கிளைகளைத் திறந்தார்.

ஜெயிப்பது எப்படி என்ற சூட்சுமம் புரிகிறதா..?

மிச்சப்படுத்திய நேரம், புதிய யுத்திகளின் சாரம், வாய்ப்புகளை வரமாக்கும் தீரம் ஆகியவை மூலம் கூடுதல் வருமானத்தை எட்ட முடியும்.

கண்களைத் திறந்து பாருங்கள். உங்களைச் சுற்றிப் பாருங்கள், உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கும் என்பது புரியும்.

வென்றவர்களுக்குத்தான், மாபெரும் சபைகளில் நடக்கின்ற போது மரியாதை கிடைக்கும். அந்த மரியாதையும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment