எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?

சிவாஜியின் ‘செவாலியே’ விழாப் பேச்சு – 1995

“இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என்
கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்.

நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். சிறு வயதில் நான் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளும் அதனால் பெற்ற வேதனைகளும் ஏராளம்! ஏராளம்!

கலை ஆர்வத்தாலும், குடும்பச் சூழ்நிலை காரணத்தாலும், இளம் வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். கண்டிப்பும், கனிவும் ஒன்றாக இணைந்த அந்த குருகுலத்தில், நாங்கள் பெற்ற பயிற்சிதான் இன்று நான் இருக்கும் நிலைக்கு அஸ்திவாரம்.

நாடகத் துறையிலிருந்து நான் சினிமாவிற்கு வந்த செய்திகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள்.
காரணம்? என் இதயத் துடிப்பின் ரத்த ஓட்டமே நீங்கள்தானே.

கலைத் துறையிலும், அரசியல் துறையிலும் முன்னுக்கு வர பல்லாயிரக்கணக்கானோர் முயலுகிறார்கள். அதில் சிலருக்குத்தான் வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கிறது. நீங்கள் என்னைக்
கலைஞனாக ஏற்றுக் கொண்டீர்கள்.

அதனால்தான் எனக்கு இன்று இந்த கவுரவம். இல்லையென்றால்… “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று பாடிக் கொண்டு, ரயில்வேயில் என்ஜின் டிரைவராக பணிபுரிந்து கொண்டிருந்திருப்பேன். காரணம், என் சின்ன வயது லட்சியமே அதுதான்.

பிரான்சு நாடு தந்த இந்த கௌரவம் எனக்கு மட்டும் சொந்தமா? நிச்சயமாக இல்லை. சிவாஜி கணேசன் என்னும் இந்தப் பெயர், உலக அரங்கை அடையக் காரணமாக இருந்த தந்தைப் பெரியார், சினிமாவிற்கு என்னை அழைத்து வந்த மரியாதைக்குரிய நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், என்னை அன்புடன் பராமரித்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஆகியோருக்கும் மற்றும் என்னோடு பணிபுரியும் கலையுலகத்தார்க்கும் இதை அன்போடு உரிமையாக்குகிறேன். 

என் உதடுகள் உச்சரிக்க வேண்டிய வார்த்தைகளை எழுதித் தந்த கதை –  வசனகர்த்தாக்கள், எளிய முகத்தைக் கூட எழில் முகமாக மாற்றிக் காட்டிய ஒப்பனைக் கலைஞர்கள், அலங்கார ஆடைகள் அணிவித்து மகிழ்ந்த தையற்கலைஞர்கள்,

தாங்கள் இருட்டில் நின்று கொண்டு, எங்கள் மீது ஒளி பாய்ச்சி புகழ் சேர்க்கும் ஒளிப்பதிவு கலைஞர்கள், லைட் பாய்ஸ், ஆட வைத்துப் பெருமைப்படுத்திய கலைஞர்கள், ஓட வைத்து உயர்த்திய ஸ்டண்ட் கலைஞர்கள்,

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், உடன் நடிக்கும் நடிகர், நடிகையர், தங்கள் குரலில் எங்களுக்குப் பெருமை சேர்த்த பின்னணிப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள், சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டினாலும், முழுமையான ஆற்றலோடு நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள்,

படப்பிடிப்பு தளத்தில் எங்களின் தேவையறிந்து உணவு ஊட்டும் தாய்போல, எங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றும் புரொடக்ஷன் பாய்ஸ், கலை துறைக்கும், பொது மக்களுக்கும் பாலமாக இருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள். இவர்கள் மட்டும் தானா….?

மேலும் என்னுடன் பணிபுரியும் கலைத்துறையின் மற்ற தொழில் கலைஞர்கள் அனைவரின் கூட்டு உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த ‘செவாலியர்’ பட்டம்.

இத்தனை தொழில் துறையினரின் ஒத்துழைப்பு இல்லையன்றால் எனது குரல் உங்களை வந்தடைந்திருக்குமா?

இந்த கவுரவம் அனைவருக்கும் பொதுவானது.

என் வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாது. காரணம்? இந்தியாவின் கலைச் சகோதரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரு மூத்த கலைஞனை கவுரவப்படுத்தும் ஒரு புனிதமான நாள்.

இரண்டு தலைமுறையைச் சேர்ந்த சாதனையாளர்களை இங்கே பார்க்கிறேன். வயது வந்த தந்தைக்கும், தாய்க்கும் அறுபதாம் கல்யாணம் செய்து வைத்து மகிழ்வார்கள் பிள்ளைகள். அந்தப் பருவமும் கடந்துவிட்டால், எண்பதாம் வயதில் ‘சதாபிஷேகம்’ செய்து சந்தோஷப்படுவார்கள் வாரிசுகள். அதைக் கண்டு அகம் மகிழ்வார் அவர்தம் தந்தை,

அதுபோல, என் கண் முன்னால் பிள்ளைகளாய் இருந்தவர்கள், என்மடி மீது அமர்ந்து மழலை பேசியவர்கள் இன்று சாதனையாளர்களாய், சரித்திர நாயகர்களாய் கலைத்துறை, அரசியல் துறை ஆகிய இரு துறைகளிலும் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட நீங்கள் இந்த விழாவினை நடத்துகிறீர்கள். இதைக் காண்பதை விட, என் வாழ்க்கையில் வேறு என்ன பெருமை இருக்க முடியும்?

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவர் வாக்கு போல இன்று உங்களைக் கண்டு பேருவகைக் கொள்கிறேன்.

இந்த நல்ல வேளையிலே, தமிழகத்திற்கு நல்ல பல காரியங்கள் செய்துவரும் தமிழக முதல்வர் டாக்டர்.ஜெயலலிதா சமீபத்தில் ‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள இலவசமாக இடம் கொடுத்ததை நன்றியோடு நினைவுகூர்ந்து,

‘திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்‘ அந்த வீடுகள் “திரைப்படத் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையும், “தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு” ரூபாய் லட்சமும் நன்கொடையாக அளிக்கிறேன்.

அன்பார்ந்த நல் இதயங்களே!

பல நூறு மைல்களைக் கடந்து என்னை வாழ்த்த வந்திருக்கும் தாய்மார்களின் ஆசிகளை, உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் இத்தனை மகிழ்ச்சிகளையும் காணாமலேயே போயிருக்கக்கூடிய நிலை. ஆனால் இறைவன் கருணையும், உங்கள் அன்பும்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த இறைவனின் கருணை உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

கலையை ரசித்து, என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன்?

சுயநலமில்லாமல் என்னை நேசிக்கும் இந்த நல்ல நெஞ்சங்கள் வாழ்க!

தாயே! தமிழே ! இறைவா! இவர்கள் அனைவரும் நலத்தோடும், புகழோடும் இருக்கட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க கலை! ஜெய்ஹிந்த்!

2005, மே மாத புதிய பார்வை இதழிலிருந்து…

Comments (0)
Add Comment